

கம்போடியா நாட்டில் நடைபெற்ற ஆசிய அளவிலான புகைப்படப் போட்டியில் விருதும், 2 லட்சம் பரிசும் வாங்கியிருக்கிறார் மதுரை செந்தில்குமரன். புகைப்படக் கலையில் அவர் பெற்றுள்ள 13-வது சர்வதேச விருது இது. கேமராவைக் காதலித்ததால் கிடைத்த பரிசு மூலம் மனைவியோடு உலகம் சுற்றிக்கொண்டிருப்பவரை மதுரையில் சந்தித்தோம்.
பரிசுத் தொகையில் கேமரா
பள்ளியில் படிக்கிற காலத்திலேயே விளையாட்டு, படிப்பை விட இயற்கையை ரசிப்பதில்தான் செந்திலுக்கு அதிக ஆர்வம் இருந்தாம். மீன்பிடிப்பது, குருவிக் கூடுகளைத் தேடி அலைவது என்று அவருடைய உலகமே வேறு. “சூரியோதயம், அஸ்தமனக் காட்சியை பார்ப்பதற்காக பஸ்ஸில் ஒரு பக்கத்தில் இருந்து மறுபுறத்திற்கு கூட மாறி மாறி உட்கார்ந்திருக்கிறேன்” என்கிறார்.
கல்லூரி படித்தபோது ஒரு கலை நிகழ்ச்சியில் வென்றதற்காக 1998-ல் 1,500 ரூபாய் பரிசு கிடைத்திருக்கிறது. உடனே சிறு கேமரா வாங்கினார். ஆனால், ரோல் வாங்கக் காசில்லை. வீட்டில் கிடந்த பழைய புத்தகங்கள், பேப்பர்களை எல்லாம் யாருக்கும் தெரியாமல் விற்று ரோல் வாங்கினாராம். “சோறு தண்ணியில்லாம கன்னாபின்னான்னு சுத்துவேன். படம் எடுத்த பிறகு டெவலப் பண்ண காசிருக்காது. கொஞ்சம் கொஞ்சமா ஒரு மாதத்திற்குப் பிறகு படங்களைப் பிரிண்ட் போட்டுப் பார்த்து சந்தோஷப்படுவேன்” என்கிறார்.
எது புகைப்படக் ‘கலை’?
சில காலம் கழித்து ஒரு எஸ்.எல்.ஆர். கேமரா வாங்கியபோது செந்திலுக்குத் தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை. விளம்பரங்களுக்குப் புகைப்படம் எடுப்பதை வாழ்வாதாரத்திற்கு வைத்துக்கொண்டு, அற்புதங்களைத் தேடி ஓடிக்கொண்டே இருந்த நாட்கள் அவை. “ஆரம்பத்தில் எல்லோரையும்போல அழகியல் சார்ந்த புகைப்படங்களைத்தான் எடுத்தேன். நெல்லையை சேர்ந்த ஆவணப்படக்காரர் ஆர்.ஆர்.சீனிவாசனுடைய நட்புக்குப் பிறகு, கருத்துள்ள படங்களை எடுக்க ஆரம்பித்தேன்” என்று சொல்லும் இவர், அதன் பிறகுதான் பல உச்சங்களைத் தொட்டிருக்கிறார்.
2005-ம் ஆண்டு குலசேகரபட்டினம் தசரா விழாவில் இவர் எடுத்த படங்கள் ஐக்கிய நாடுகள் சபை நடத்திய கிராமிய திருவிழா தொடர்பான போட்டியில் இரண்டாம் பரிசைப் பெற்றன. பரிசோடு கிடைத்த பாரின் ட்ரிப்பை பயன்படுத்திக்கொண்டு, சீனாவுக்குச் சென்றவர் ஷாங்காயில் நடந்த உலக புகைப்பட கலைஞர்கள் முகாமில் பங்கேற்றார். அங்கு கிடைத்த உலக புகைப்படக் கலைஞர்களுடனான நட்பும், பகிர்ந்து கொண்ட அனுபவங்களும் அவரை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசென்றன.
தேடி வந்த விருதுகள்
2007-ல் உலகின் சிறந்த புவியியல் புகைப்படக் கலைஞர் விருது, 2008ல் நேஷனல் ஜியாகிரபிக் மாத இதழ் போட்டியில் பரிசு, 2010ல் அவுட்டோர் போட்டோகிராபி விருது என்று விருதுகளை வாங்கிக் குவித்த செந்தில்குமரனுக்கு வைல்ட் லைப் போட்டோகிராபிதான் மிகவும் விருப்பமானது.
புலிகள் - மனிதன் எதிர்கொள்ளல் என்ற புத்தகத்தைத் தயாரிப்பதற்காக கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டிருக்கிறார். அந்தப் பணி நிறைவடைய மேலும் 3 ஆண்டுகள் உழைக்க வேண்டியுள்ளது என்றாலும் அவரிடம் துளிகூடச் சலிப்பில்லை.
கொடுப்பத்தில் உள்ள மகிழ்ச்சி
தன்னுடைய பயணத்தினூடே இளைஞர்களுக்கு வழிகாட்டும் எண்ணமும் அவருக்கு இருக்கிறது. “இப்போது புகைப்படம் எடுக்கும் முறை எளிமையாகி இருக்கிறது. வசதி வாய்ப்புகளும் பெருகி இருக்கின்றன. ஆனால், நல்ல புகைப்படம் எடுக்கும் இளைஞர்களின் லட்சியம் எல்லாம் பேஸ்புக்கில் அதனை பதிவிட்டு பாராட்டு பெறுவதாகத்தான் இருக்கிறது.
இது வெறும் ஒரு நாள் புகழ்தான். இதையும் தாண்டி அவர்கள் சாதிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்” எனச் சொல்லும் செந்தில் கற்றுக்கொண்ட கலையை மற்றவர்களுக்கு கற்பிக்கும்போதுதான் அந்தக் கலை முழுமை பெறுகிறது என்று வாழ்கிறார். ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு புகைப்படக் கலை பற்றி சொல்லித்தர ’கண்ணாடி’ என்ற அமைப்பை தொடங்கியுள்ளார்.