

திரைச்சீலை விலக பரந்து விரிந்திருக்கும் மேடை இல்லை. சபா தலைவர், செயலாளர், விளம்பரத் தூதுவர்கள் மட்டுமே நிறைந்திருக்கும் முன்வரிசை இருக்கைகள் இல்லை. குளிரூட்டப்பட்ட அரங்கம் இல்லை. ஆனாலும் இரண்டு நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் சென்னை, பெசன்ட்நகர், ஊரூர் ஆல்காட் குப்பத்தில் தை மாதம் முதல் இரண்டு நாட்களில் நடந்தது மார்கழித் திருவிழா.
இளமை முன்மொழிய திறமை வழிமொழிந்த அந்த விழாவைக் காண, கடலுக்குப் போட்டியாகக் கரையில் திரண்டது ரசிகர்களின் கடல்! விழாவிலிருந்து சில துளிகள்.
“இசை, நாட்டியம், நாடகம் என்னும் கலையின் பல்வேறு அம்சங்களும் கடைக்கோடி ரசிகனுக்கும் சென்றுசேர வேண்டும்” என்னும் கர்னாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவின் எண்ணத்தைச் செயல்வடிவமாக்கிய பெருமை ஊரூர் ஆல்காட் குப்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரையும் சேரும். அந்த ஊரின் பஞ்சாயத்துத் தலைவர் முதல் சிறுவர்கள்வரை அவ்வளவு அழகாக நிகழ்ச்சிகளை ரசித்தனர்.
ஆடவைத்த பறை
முதல் நாள் நிகழ்ச்சி பறை ஒலிக்க மங்களமாகத் தொடங்கியது. பறை மங்கள வாத்தியமா என்ற கேள்வி படிப்பவர்களுக்கு வரும். இன்றைக்கும் கிராமங்களில் நடக்கும் கோயில் திருவிழாக்கள், வீடுகளில் நடக்கும் திருமணம், காது குத்து போன்ற விசேஷங்களில் பறை ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதை மரணத்தின்போது வாசிக்கப்படும் வாத்தியமாக மட்டுமே நினைப்பது தவறு.
பறை வாத்தியத்தை வாசித்தவர்களின் `சொல்’ குச்சியும் `அடி’ குச்சியும் அளித்த அதிரடி ஒலி, கோட் போட்ட ஆசாமிகளையும் (“I think Its 12 beat’’ “no..no.. its 16 beat) எனப் பேசியபடி, தங்களை மறந்து ஆடவைத்தது. ஊரூர் குப்பத்தைச் சேர்ந்த சிறுமிகள் இரண்டு நாட்களும் வெவ்வேறு தலைப்புகளில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை நடத்தினர். தீபிகா, அர்ச்சனா, சினேகா, முத்துமாரி, நிஷா, பாண்டீஸ்வரி, மதுமிதா ஆகியவை வில்லுப்பாட்டு குழுவில் இருந்த சில குழந்தைகளின் பெயர்கள்.
நுனி நாக்கில் ஆங்கிலம் புரளப் பேசும் கான்வென்ட் குழந்தைகளும் ரசிக்கும் வகையில் அவர்களின் நிகழ்ச்சியில் அப்-டு-டேட் தகவல்கள் அத்தனையும் வந்துவிழுந்தன. கல், மண், சிமென்டில்லாம பாலம் கட்டப்போறோம்… உறவுப் பாலம் கட்டப்போறோம்.. கலைப் பாலம் கட்டப் போறோம்.. என்று அவர்கள் தொடங்கிய விதமே நிகழ்ச்சியில் அத்தனை பேரையும் ஒன்றவைத்தது.
கலைகள் ஒன்றானால் மனிதர்கள் ஒன்றாவார்கள் என்னும் பெரிய விஷயத்தைப் பதினைந்து நிமிடங்களில் சற்று உரக்கவே ஒலித்தது அவர்களின் வில்லுப்பாட்டு. நிகழ்ச்சியைத் தொகுத்த ஊரூர் ஆல்காட் குப்பத்தைச் சேர்ந்த தீபிகா படுசுட்டி. அவரின் பேச்சில் இருந்த `டைமிங்’கான சாதுரியத்தைப் பாராட்டாதவர்களே இல்லை.
வில்லுப்பாட்டு அக்கா
ஊரூர் குப்பத்தைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்குச் சமூகத் தொண்டாற்றிவரும் வெரோனிகாதான் குழந்தைகளின் வில்லுப்பாட்டுக்குப் பயிற்சி கொடுத்தாராம். `கலைத்தாயின் விசும்பல்’ என்னும் தலைப்பில் அவர் வாசித்த கவிதை பலரின் கவனத்தைக் கவர்ந்தது. அதிலிருந்து சில வரிகள்:
மூச்சு முட்டுகின்றது..
நான்கு சுவர்களுக்குள் நிம்மதியாய்ச்
சுவாசிக்க இயலவில்லை..
ஜன்னல்களற்ற அறைகளில்
மீண்டுமொருமுறை
ஜனிப்பதற்கு முயன்று முயன்று
மரித்தே போய்விடுகிறேன் நான்!
மூச்சு முட்டுகிறது..
பாரம்பரிய போர்வைக்குள் முடங்கி முடங்கி
பலவீனமாகிறேன் நான்..
பட்டாடைகளின் கசகசப்புகளில்
களைத்திருக்கின்றேன் நான்..
மதுரை மணி அய்யர் நோட்!
வேணு-வீணா-வயலின் வாத்தியங்களைக் கொண்டு ஒருகாலத்தில் கர்னாடக இசை உலகில் நிறைய நிகழ்ச்சிகள் நடந்ததுண்டு. தற்போது அப்படியொரு இனிமையான சேர்ந்திசையைப் புல்லாங்குழல்-சித்ரவீணை-வயலின் கொண்டும் வழங்கமுடியும் என்பதை நிரூபித்தனர் ஜெயந்த், விஷால் சப்பூரம், எம்.ராஜீவ் ஆகிய கலைஞர்கள்.
வாத்திய இசையையும் மிகவும் ஜனரஞ்சகமாக வழங்கினர். எளிய மக்களையும் கர்னாடக இசையை ஆர்வத்துடன் ரசிக்கவைத்தவர் மதுரை மணி அய்யர். அவர் நிகழ்ச்சியின் இறுதியில் பாடும் ஒரு ஸ்வரத்தை
ரிக் ஷா ஓட்டுநர்களும் ரசிப்பார்களாம். இதற்குப் பெயரே மணி அய்யர் நோட். அந்த நோட்டை ஜெயந்த் குழுவும் தங்களின் வாத்தியத்தில் வாசித்து மக்களை ரசிக்கவைத்தனர். அனிதா குகா குழுவினருடன் நிகழ்த்திய பரதநாட்டிய நிகழ்ச்சி ரசனையுடன் இருந்தது.
முதல் நாளைவிட இரண்டாம் நாள் நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் அலை அதிகம். உன்னிகிருஷ்ணன் பாரம்பரியமான முறையில் நிகழ்ச்சியைத் தொடங்கி ஊரூர் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க என்னவளே… அடி என்னவளே… நறுமுகையே நறுமுகையே… போன்ற திரையிசைப் பாடல்களின் சில வரிகளைப் பாடி நிகழ்ச்சியை முடித்தார். இறுதி நிகழ்ச்சியாக நடந்த கட்டைக்கூத்து பெரியவர்களையும் சிறியவர்களாக்கியது.
காந்தியடிகளின் பேரனும் மேற்கு வங்காளத்தின் முன்னாள் கவர்னராக பதவி வகித்தவருமான கோபாலகிருஷ்ண காந்தி எந்தப் பகட்டும் இல்லாமல் மணலில் அமர்ந்துகொண்டு நிகழ்ச்சியை ரசித்தார். இதைப் போன்ற நெகிழ்ச்சியான காட்சிகளைக் குளிரூட்டப்பட்ட எந்த சபாவின் அரங்கிலும் காணமுடியாது. எந்த நோக்கத்துக்காக இந்த நிகழ்ச்சி நடந்ததோ அது முழுமையடைந்தது என்பதே உண்மை