

பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் எனச் சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் இளைஞர்களுக்கு மத்தியில் சமூகம் சார்ந்த செயல்பாடுகளால் வியக்க வைக்கிறார்கள் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சொக்கலிங்கபுரம் கிராம இளைஞர்கள். ஆச்சரியப் படும் அளவுக்கு அப்படி என்ன செய்து விட்டார்கள் என்றுதானே கேட்கிறீர்கள்?
பொறியியல் விவசாயி
மழை நீரைச் சேகரிப்பதற் காகவும், நிலத்தடி நீரைப் பாதுகாப்பதற்காகவும் சீமை கருவேல மரங்களை அழிப்பதில் தொடங்குகிறது இவர்களுடைய செயல்பாடு. மழை நீர் சேகரிப்புத் திட்டம் மட்டுமில்லாமல் சொட்டு நீர் பாசனம் மூலம் சாலையோர மரங்கள் வளர்ப்பு போன்ற திட்டங்களையும் இவர்கள் சத்தமில்லாமல் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர். விவசாயத்தைப் பாதுகாக்கும் இந்த யோசனைகள் எப்படி
வந்தது எனக் கேட்டதற்குப் பொறியாளர் வினோத் பாரதி இப்படிச் சொல்கிறார். “நான் பொறியியல் படித்திருந்தாலும் எனக்கு விவசாயம் செய்ய ஆசை. ஆனால் தண்ணீர் தட்டுப்பாட்டினால் விவசாயம் செய்ய முடியாமல் மிகவும் சிரமப்பட்டோம். அந்தச் சமயத்தில் தான் சீமை கருவேல மரங்கள் ஆபத்தானவை என்ற தகவலை இணையத்தில் படித்தேன். தொடர்ந்து ஆழமாக படித்தபோது, ஒரு வளர்ந்த கருவேல மரம் ஒரு நாளைக்கு 100 லிட்டர் தண்ணீரையும், காற்றில் இருக்கின்ற ஈரப்பதத்தையும் உறிஞ்சும் தன்மைகொண்டது என்பதைத் தெரிந்துகொண்டேன். அதற்குப் பிறகு கிராம மக்களின் உதவியோடு கருவேல மரங்களை அழித்து வருகிறோம்” என்றார்.
சொட்டு தண்ணீர் டோய்!
கருவேல மரங்களை அழித்தபிறகு அதற்கு மாற்றாகச் சாலையோரங்களில் மரம் வளர்க்கத் தொடங்கியிருக்கின்றனர் இந்த இளைஞர்கள். அதுவும் மரங்கள் வளர்ப்பதற்கு சொட்டு நீர்ப் பாசன முறையைத் தேர்ந்தெடுத்திருப்பதுதான் பாராட்டுக்குரிய விஷயம். மழைக்கு முக்கிய ஆதாரமே மரம் என்பதால் மரக்கன்றுகளை நட முடிவு செய்திருக்கிறார்கள்.
ஆனால், ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் மரத்துக்கு தண்ணீர் ஊற்றுவது எப்படி என யோசித்திருக்கிறார்கள். அத்தகைய நிலையில் தான், “சொட்டு நீர்ப் பாசன முறையை இணையத்தில் பார்த்துத் தெரிந்துகொண்டோம். எங்களுடைய இந்தத் திட்டத்தை வனத்துறையிடம் கூறியபோது 110 மரக்கன்றுகள் கொடுத்து உதவினார்கள். இந்த மரக்கன்றுகளை வீட்டுக்கொரு மரம் என ஊர் மக்களுக்கு வழங்கியிருக்கிறோம். மீதமிருந்த மரக் கன்றுகளைச் சாலையோரங்களில் வைத்துள்ளோம்” எனக் கூறுகிறார் முத்துக்குமார். இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சேமிப்பும் சேவையே
விவசாயத்தையும், மழைநீரையும் மேம்படுத்துவதற்கு இந்த இளைஞர்கள் எடுத்த முயற்சிகளுக்குத் தொடக்கத்தில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லையாம். மரம் வளர்ப்பு, கருவேல மரங்கள் அழிப்பு போன்ற செயல்பாடுகளைத் தொடர்ந்து இவர்கள் மழைநீர் சேமிப்பு திட்டத்தையும் கிராமத்தில் செயல்படுத்தியிருக்கிறார்கள்.
“வரவேற்பு கிடைக்கவில்லை யென்றாலும் தொடர்ந்து நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தோம். ஒருகட்டத்தில் எங்களுடைய விடாமுயற்சியைப் பார்த்த கிராம மக்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க ஆரம்பித்தார்கள்” என்று சொல்கிறார் ராஜ்குமார். இந்த இளைஞர்களைத் தொடர்ந்து சொக்கலிங்கபுரத்துக்கு அருகில் இருக்கும் கிராமங்களான மீனாட்சிபுரம், பெருமாள் தேவன்பட்டியைச் சேர்ந்த இளைஞர்களும் இத்திட்டத்தைச் செயல்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இது போலவே மற்ற கிராம மக்களும் செயல்பட்டால் கூடிய விரைவில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கி விவசாயம் செழிக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
இளைய சமூகம் சரியான பாதையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறது என்று நிரூபித்துக் கொண்டிருக்கும் இந்த இளைஞர்கள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்கள்தான்.