

கம்பு சுற்றுதல், மான்கொம்பு, சுருள்வாள், கத்தி, தீ விளையாட்டு எனச் சிலம்பத்தின் பல பிரிவுகளில் சாதித்து வருபவர் சங்கீதா. கடந்த நவம்பரில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் சேலம் சி.எஸ்.ஐ மேல்நிலைப் பள்ளியில் நடந்த மாநில அளவிலான குடியரசு தின சிலம்பாட்ட போட்டியில் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் முதலிடம் வென்றுள்ளார்.
அதுமட்டுமின்றி பெஸ்ட் பிளேயர் அவார்டும் பெற்றிருக்கிறார். மதுரையைச் சேர்ந்த இவர், கே.கே.நகரில் உள்ள மகாத்மா பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சகலகலாவல்லி
6-ம் வகுப்பு படிக்கும்போது, விளையாட்டுத்தனமாகச் சிலம்பப் பயிற்சியில் சேர்ந்தவர் சங்கீதா. பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் கிடைத்த முதல் பரிசு, சிலம்பத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தியது. 2009-ம் ஆண்டு முதல் தொடர்ந்து மாவட்ட அளவில் முதலிடத்தையும், மாநில அளவில் முதல் அல்லது இரண்டாவது இடத்தையும் பெற்று வருகிறார். சிலம்பத்தில் தேசிய அளவில் சாதிக்க வேண்டும் எனக் கனவு காணும் சங்கீதாவுக்கு பரதநாட்டியத்திலும் ஆர்வம் உள்ளது.
அம்மாவின் சொல்
சங்கீதா பெயரைச் சொன்னால் திருநகர் அரசு பாலர் இல்லம் மற்றும் முதியோர் இல்லவாசிகளின் முகத்தில் புன்னகை பூக்கிறது. சிலம்பத்தில் தான் பெற்ற பரிசுத் தொகை முழுவதையும் அவர்களுக்காகவே செலவிடும் சங்கீதா, சமீபத்தில் மாநில அளவில் முதல் பரிசாகப் பெற்ற 2000 ரூபாயையும் அவர்களுக்குப் பயன்படும் வகையில் செலவழிக்கும் முடிவில் இருக்கிறார்.
இந்த வயதிலேயே சமூகச் சேவையில் எப்படி ஆர்வம் வந்தது என்று கேட்டால், தன் தாய் கீதாவைக் கை காட்டுகிறார். மூன்றாம் வகுப்பு படித்தபோது, “கேக் வெட்டுறது எல்லாம் போதும் பாப்பா. இந்த வருஷம் வேற மாதிரி கொண்டாடலாம்” என்று முதியோர் இல்லத்திற்கு அழைத்துப் போனார் சங்கீதாவின் தாய். அதன் பிறகு பிறந்த நாள் மட்டுமன்றி, கையில் பணம் கிடைத்தாலே ஆதரவற்றோர் இல்லங்களுக்குப் போக ஆரம்பித்திருக்கிறார் சங்கீதா.
அன்பும் அறிவும்
ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது தோழிகளோடு சேர்ந்து மதுரை திருநகரில் உள்ள பாலர் இல்லத்திற்குச் சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு எம்போஸ் பெயிண்டிங், கிராப்ட் ஒர்க்ஸ், கீ செயின், பென் ஸ்டாண்ட் செய்தல் போன்றவற்றைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார் சங்கீதா.
“அவ்வாறு அவர்கள் செய்ததை எல்லாம் வைத்து, எங்கள் பள்ளி நிர்வாகத்தின் உதவியுடன் கண்காட்சி நடத்தினேன். நிறைய பேர் விரும்பி வாங்கினாங்க. அவ்வாறு சேர்ந்த ரூ.10 ஆயிரம் பணத்தை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தோம். அதோடு அரசு நிதி 20 ஆயிரத்தைச் சேர்த்து, மதுரை அரசு மருத்துவமனையின் மகப்பேறு பிரிவுக்குத் தேவையான கட்டில் உள்ளிட்ட தடவாள சாமான்கள் வாங்க உத்தரவிட்டார் அன்றைய கலெக்டர் அன்ஷுல் மிஸ்ரா” என்கிறார்.
படிப்பிலும் கில்லியான சங்கீதாவுக்கு டாக்டர், இன்ஜினீயர் கனவெல்லாம் கிடையாது. டிகிரி முடித்ததும் ஐ.ஏ.எஸ். ஆகும் லட்சியத்தோடு உள்ளேன் என்கிறார்.
“மதுரை பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் பலருக்குச் சங்கீதா ரோல்மாடலாகவே இருக்கிறார்” என்று பெருமையோடு கூறுகிறார் சங்கீதாவின் சிலம்பப் பயிற்சியாளரும், முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியருமான சாகுல் ஹமீது. உண்மைதான்! பலரை ஊக்குவிக்கும் சாதனைப் பெண்ணாக ஜொலிக்கிறார் சங்கீதா.
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி