

இரும்புக்கை மாயாவி போன்ற உலகப் புகழ்பெற்ற கதாபாத்திரங்களைத் தமிழில் அறிமுகப்படுத்தியது யார் தெரியுமா? ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படாத பல காமிக்ஸ்களைத் தமிழில் வெளியிட்டிருக்கும் நிறுவனம் எது? இரண்டுமே சிவகாசியைச் சேர்ந்த பிரகாஷ் பப்ளிஷர்ஸ் நிறுவனம்தான். 1972-ம் ஆண்டு முதல் இந்நிறுவனம் தமிழ் காமிக்ஸ் இதழ்களை வெளியிட்டுவருகிறது.
உலகின் முன்னணி காமிக்ஸ் கதைகளை வெளியிட்டுவரும் இந்நிறுவனம், தற்போது மொழிபெயர்ப்பு கிராஃபிக் நாவல்களையும் வெளியிட்டுவருகிறது. இந்தப் பின்னணியில் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு காமிக்ஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் கதைகளில் சில:
உலக அளவில் கொண்டாடப்படும் அலெஜாண்ட்ரோ ஜொடொரோப்ஸ்கியின் கிராஃபிக் நாவலான The Bouncer-யின் தமிழ் வடிவம். இதன் கதாசிரியர் ஒரு புகழ்பெற்ற சினிமா இயக்குநர், சித்திரக்கதை எழுத்தாளர், மாற்று இலக்கிய முன்னோடி.
மதுக் கடைகளிலும், சூதாட்ட விடுதிகளிலும் பிரச்சினை வரும்போது தடுப்பதற்காக பௌன்சர் வேலைக்கு அமர்த்தப் படுவது வழக்கம். இப்படிப்பட்டவர்கள், ஆஜானுபாகுவாக இருப்பார்கள். ஆனால், இந்தக் கதையில் பௌன்சராக இருப்பவர் ஒரு கையை முழுவதுமாக இழந்தவர்.
மனித இனத்தின் வக்கிரங்கள், தீவிர குணாதிசயங்களை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்தக்கூடியவர் ஜொடொரோப்ஸ்கி. இதனாலேயே இவரது பல திரைப்படங்கள் தடை செய்யப்பட்டன. கிராஃபிக் நாவல்களிலும் அதே நடைமுறையைப் பின்பற்றுபவர்.
பவுன்சர் – இரண்டு பாகங்கள், முழு வண்ணத்தில்
ரால் கௌவின் என்ற பெல்ஜிய எழுத்தாளரால் உருவாக்கப்பட்டு, உலகமெங்கும் இதுவரை ஒன்றரை கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்று, ஐரோப்பிய டாப் டென் காமிக்ஸ் கதை வரிசைகளில் இடம்பிடித்த ஒன்று The Blue Coats. அமெரிக்க உள்நாட்டுச் சண்டையில் நடைபெற்ற சம்பவங்களை மையமாகக் கொண்டது.
பிளாக் ஹியூமர் என்று சொல்லப்படும் துயர நகைச்சுவை இத்தொடர் முழுக்க இழைந்தோடுகிறது. ராணுவ வீரர்களுக்குச் சம்பளம் கொடுக்கலாமா என்று கேட்கப்படும்போது, “போர் முடிந்தபிறகு கொடுக்கலாம், நிறைய மிச்சமாகும்” என்று அப்பட்டமான தன்மையுடன் இச்சித்திரங்கள் பேசுகின்றன.
மேலோட்டமாக நகைச்சுவையாகத் தெரிந்தாலும் பின்புலத்தில் இருக்கும் வரலாற்று உண்மைகள், நம்மைக் கவர்ந்துவிடும். கதையின் தீவிரத் தன்மையை மட்டுப்படுத்த கார்ட்டூன் பாணி ஓவியங்கள் உதவுகின்றன.
சிறைக்குள் ஒரு சடுகுடு - ப்ளூகோட்ஸ், முழு வண்ணத்தில்
அமெரிக்க வரலாற்றைச் சித்திரக் கதைகள் மூலமாக, கிண்டலாகச் சொல்வதுதான் லக்கிலூக் தொடரின் சிறப்பு அம்சம். ஐரோப்பாவின் சூப்பர் ஸ்டாரான இவருக்குத் தமிழகத்தில் ரசிகர் மன்றங்களே உண்டு.
அமெரிக்காவில் ரயில் வண்டிகள் ஓடத் தொடங்கியதும் மிகப் பெரிய இடப்பெயர்ச்சி நிகழ்ந்தது. பலரும் புதிய வசிப்பிடங்களைத் தேடிச் செல்ல ஆரம்பித்தனர். அப்படி ஒரு புதிய இடத்துக்குச் செல்லும்போது ஏற்கெனவே அங்கு குடியிருப்பவர்கள், புதியவர்களை “வரவேற்கும் முறை” வித்தியாசமானது. இப்படி நடந்த ஒரு விஷயத்தை - வரலாற்றை கதை வழியாக ரசிக்கும்படி சொல்வதுதான் இதன் சிறப்பு.
ஒரு ஜெண்டில்மேனின் கதை - லக்கிலூக், முழு வண்ணத்தில்
நகைச்சுவை நடிகர் விவேக் திரைப் படங்களில் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை டேஞ்சர் டையபாலிக். இவர் இத்தாலிய காமிக்ஸ் சூப்பர் ஸ்டார். 1962 முதல் இன்று வரை இத்தாலியில் அதிகம் விற்பவை இவருடைய தொடர்களே.
ஆன்ட்டி ஹீரோ என்று சொல்லப்படும் எதிர்நாயகன்தான் டையபாலிக். இவரது சிறப்பு அம்சமே, இவர் தயாரிக்கும் முகமூடிகள்தான். இந்த விசேஷ முகமூடிகளை அணிந்துகொண்டு யாரைப்போல வேண்டுமானாலும் வேஷமிட்டு உருமாறிக் கொள்ளையடிப்பார். இவரைப் பிடிப்பதையே தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்ட நேர்மை போலீஸ் ஜிங்கோவுக்கும் இவருக்கும் இடையே சுவாரசியமான பல போராட்டங்கள் நடப்பதுண்டு.
நித்தமும் குற்றம் - டேஞ்சர் டையபாலிக், கறுப்பு வெள்ளை
சாதாரணமாகத் துப்பறிவாளர்கள் என்றாலே ஜேம்ஸ் பாண்ட் போன்ற சாகச வீரர்கள்தான் நம் மனதில் தோன்றுவார்கள். ஆனால், அந்த நம்பிக்கையை முற்றிலுமாக உடைத்தவர் இத்தாலியின் டைலன் டாக்.
இவர் ஒரு அமானுஷ்ய துப்பறிவாளர், பேய், பிசாசுகளைப் பற்றி ஆராய்பவர். எப்போதுமே நீல நிற ஜீன்ஸ், சிவப்பு சட்டை, கறுப்பு கோட்டுடன் காணப்படும் இவருடைய உதவியாளர், மொக்கை ஜோக் அடிக்கும் ஒரு அதிகப்பிரசங்கி. இந்த ஜோடி உலகின் பல மூலைகளில் நடக்கும் வித்தியாசமான சம்பவங்களை ஆராயச் செல்வதுதான் கதை.
நள்ளிரவு நங்கை - டைலன் டாக், முழு வண்ணத்தில்