

உலகம் மாறிவருகிறது. விஞ்ஞானம், தொழில்நுட்பம், தத்துவம், கணினி, போக்குவரத்து, தகவல் பரிமாற்றம், என்று அனைத்துத் துறைகளிலும் கடந்த ஐம்பது ஆண்டுகளில் பெரும் புரட்சி ஏற்பட்டிருக்கிறது. மனித அறிவின் எல்லைகள் பெரிதும் விரிந்திருக்கின்றன. இதன் காரணமாக நம் பார்வை மாறியிருக்கிறது. புற அனுபவம் என்பது அகத்தின் பிரதிபலிப்பாக இருக்கும் காரணத்தால் புறவுலகமும் மாறிப் போயிருக்கிறது.
புதிய உலகம். புதிய பார்வை. புதிய மனங்கள். அதிகரித்துள்ள அறிவுணர்வு. இதனால் சமூக மதிப்பீடுகள் மாறிப்போயிருக்கின்றன. ஆண்டாண்டு காலமாக அசைக்கப்பட முடியாத, கேள்விகள் ஏதும் கேட்கப்படாமல் இருந்து வந்திருந்த, நம்பிக்கைகள் இப்போது கேள்விக்குள்ளாகியிருக்கின்றன. இளைய தலைமுறையினரின் பார்வைக் கோணம் முற்றிலுமாக மாறிப் போயிருக்கிறது. புதிய வேலைவாய்ப்புகள் இளைஞர்களுக்கு இதற்கு முன் இல்லாத புதிய பொருளாதார சுதந்திரத்தை அளித்திருக்கின்றன.
அவர்களின் சுயபிம்பம் அடியோடு மாறிப் போயிருக்கிறது. வெளியுலகில் புதிய சுதந்திரத்தை அனுபவிக்கும் அவர்கள், உள்ளே புதிய குழப்பங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள். புதிய சவால்களை அவர்கள் சந்திக்க நேர்ந்திருக்கிறது. புதிய கேள்விகள் அவர்களை அலைக்கழிக்கின்றன. இதுவரையில் சமூகத்தின் அரண்கள் அவர்களைக் காத்து வந்திருக்கின்றன, பல்லாண்டு காலமாக இருந்துவந்திருக்கும் பழைய அரண்கள் தகர்ந்து போய்க்கொண்டி ருப்பதால் அவர்கள் இதற்கு முன் சந்தித்திராத புதிய பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள். இதனால் புதிய பாடங்களைக் கற்கிறார்கள். வளர்கிறார்கள். புதிய உலகம் உருவாகிக்கொண்டி ருக்கிறது. வரவேற்போம்.
எனக்கு 18 வயதாகிறது. என் வகுப்புத் தோழனைக் காதலிக்கிறேன். அவர் கத்தோலிக்கக் கிறிஸ்தவர். அவர் எதிர்காலத்தில் பாதிரியாராக வேண்டும் என அவருடைய பெற்றோர் நினைக்கிறார்கள். ஆனால் எனக்கு அவருடைய மனம் நன்றாகத் தெரியும். திரைப்படத் துறையில் ஜொலிக்கும் கனவோடு இருக்கிறார். நான் இதுவரை என் காதலை அவரிடம் சொல்லவில்லை. என் காதலை அவரிடம் சொல்லப் பயமாக இருக்கிறது. ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் அவரை இழக்கத் தயாராக இல்லை. திருமணம் செய்துகொண்டு அவருடனே வாழ ஆசைப்படுகிறேன். என் காதலை அவர் ஏற்றுக்கொள்வாரா, மாட்டாரா? எங்கள் இருவர் வீட்டுப் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்வார்களா, மாட்டார்களா? இப்படிப் பல குழப்பம் மிகுந்த கேள்விகள் என்னைத் துளைத்துக் கொண்டிருக்கின்றன. எதிலும் மனம் ஒருமுகப்படவில்லை. நான் என்ன செய்ய?
நீங்கள் ஒருவரைக் காதலிக்கிறீர்கள். அவர் பாதிரியார் ஆகவேண்டும் என்று அவர் பெற்றோர் விரும்புகிறார்கள். அவர் திரைப்படத் துறையில் ஜொலிக்க வேண்டும் என்று நினைக்கிறார். நீங்கள் அவரைக் காதலிக்கிறீர்கள். அதை அவரிடமே இன்னும் சொல்லவில்லை.
அவர் உங்கள் காதலை ஏற்றுக்கொள்வாரா? அப்படி அவர் ஏற்றுக்கொண்டாலும் அவருடைய பெற்றோர்கள் ஏற்றுக்கொள்வார்களா? அதன் பிறகு உங்கள் பெற்றோர்கள்? அவர் பெற்றோர்கள் அவர் விருப்பப்படி அவரைத் திரைப்படத் துறையில் நுழைய அனுமதிப்பார்களா? அல்லது பாதிரியார் ஆகச் சொல்லிக் கட்டாயப்படுத்துவார்களா? என்ன நடக்கப் போகிறது?
உங்கள் வாழ்க்கையை நீங்களே சிக்கலான கேள்விக்குறிகளாக அமைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பது தெரிகிறதா? புறவாழ்க்கையில் நீங்கள் பின்னிக்கொண்டிருக்கும் இந்தச் சிக்கல் உங்கள் அகத்தின் வெளிப்பாடுதான். ஏன் வாழ்க்கையை இவ்வளவு சிக்கலானதாகப் பார்க்கிறீர்கள் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.
உங்கள் வாழ்க்கையை எந்த விதமாகவும் அமைத்துக்கொள்ள உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் நீங்கள் அமைத்துக்கொண்டிருக்கும் உங்கள் வாழ்க்கை உங்களுக்குக் குழப்பமும் கவலையும் நிறைந்ததாக இருக்கிறது. உங்கள் மனத்தை அரித்துக்கொண்டிருக்கிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இவை அனைத்துமே இப்போதைக்கு உங்கள் மனத்தில் மட்டுமே நடந்துகொண்டிருக்கின்றன என்பதுதான்.
உங்களுக்கு இரண்டு சாத்தியங்கள் இருக்கின்றன. ஒன்று, நேராக அவரிடம் போய் உங்கள் காதலைச் சொல்லுங்கள். என்ன நடந்தாலும் எதிர்கொண்டு சந்தியுங்கள். நடப்பது எதுவானாலும் ஏற்றுக்கொள்ளுங்கள். அல்லது உங்கள் மன மேடையில் மட்டுமே நடந்துகொண்டிருக்கும் இந்தச் சிக்கலான நாடகத்தை அங்கேயே ஒரு முடிவுக்குக் கொண்டுவந்துவிடுங்கள்.
அவர் திரைப்படத் துறையில் ஜொலிக்கட்டும். அல்லது அவருடைய பெற்றோர் விருப்பப்படி பாதிரியாராக ஆகட்டும். உங்கள் வாழ்க்கையைப் புதிதாகத் தொடங்குங்கள். இதிலும் வலியும் வேதனையும் இருக்கும். கொஞ்ச காலத்துக்கு மட்டும்தான் இருக்கும். இந்த இரண்டு சாத்தியங்களில் எதை நீங்கள் தேர்ந்தெடுத்தாலும் உங்களை அது அக வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும் என்பது மட்டும் நிச்சயம்.
உளவியல் ஆலோசகர் ஆனந்த் கிருஷ்ணாவுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
முகவரி: இளமை புதுமை, தி இந்து,
கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002.
மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in