

பென்சில் என்பது பால்யத்தின் சுகமான நினைவுகளைக் கண்முன்னே கொண்டுவரும் சக்தி கொண்டது. சாதாரணப் பென்சில், ரப்பர் வைத்த பென்சில் போன்ற பல பென்சில்களைத் தொலைத்திருந்தாலும் நினைவில் அவை ஒரு கிடங்காகக் கிடக்கின்றன. இப்போது என்ன தான் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து தட தடவெனத் தட்டினாலும் ஒரு காலத்தில் பென்சிலைச் சீவு சீவுன்னு சீவியிருக்கிறோம்.
அப்பா ஷேவிங் பண்ணிட்டுப் போட்ட பிளேடு வைத்து பென்சிலைச் சீவியிருக்கிறோம், ஷார்ப்னர் உதவியுடன் சீவியிருக்கிறோம். பல சமயங்களில் பென்சிலைச் சீவினோமோ இல்லையோ கையைக் கிழித்துக்கொண்டு ரத்தம் வழிய நின்றிருக்கிறோம்.
இப்போது அப்படி அவதிப்பட வேண்டியதே இல்லை. பென்சிலைச் சீவ மிகச் சுலபமான கருவி அமெரிக்கச் சந்தைக்கு வந்துள்ளது. லைட்டர் ஷார்ப்னர் என அழைக்கப்படும் இந்த பென்சில் சீவும் கருவி, பிக் லைட்டர் உதவியால் இயங்குகிறது. வழக்கமாக ஷார்ப்பனரில் பென்சிலை நுழைத்துத் திருகுவது போல் திருகினாலே போதுமாம். தீயே இல்லாமல் பென்சிலின் மரப்பாகம் தனியே இறகுகளாகக் கழன்று லைட்டருக்குள் விழுந்துவிடுமாம்.
வெளியே எடுத்தால் கூர் நுனி கொண்ட எழுதுபாகத்துடன் கூடிய பென்சில் நம்மைப் பார்த்துக் கண்சிமிட்டுமாம். புதிய புதிய விஷயங்களில் ஆர்வம் காட்டுவோரைப் பரவசப்படுத்தும் இந்த ஷார்ப்பனர்.