இசை மழையில் சந்தோஷமாய் நனைய

இசை மழையில் சந்தோஷமாய் நனைய
Updated on
1 min read

இசையைவிட இளைப்பாறுவதற்கு ஏற்ற மருந்து வேறு இல்லை. அதனால்தான் இசைப்பிரியர்கள் எல்லா நேரத்திலும் இசையைத் துணையாக வைத்துக்கொள்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் எந்தவிதத் தடங்கலும் இல்லாமல் இசையைக் கேட்பதற்கு உதவுவதற்காகவே சில ஆப்ஸ் இருக்கின்றன.

சவுண்ட் க்ளவுட் (Sound Cloud)

இந்த ஆப்ஸ், உங்களுக்குப் பிடித்த பாடல்களை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ள உதவுகிறது. அத்துடன் ஆன்லைனில் இசைப் பிரியர்களுடன் உங்கள் கருத்துகளை விவாதிக்கும் வசதியையும் வழங்குகிறது. இசையைக் கேட்பது, விவாதிப்பது மட்டுமல்லாமல் இந்த ஆப்ஸ் இசையைப் பதிவேற்றும் வாய்ப்பையும் வழங்குகிறது. இசையமைக்கும் கனவில் இருப்பவர்களுக்கு ஏற்ற ஆப்ஸ் இது.

ரிங்கட் (Ringcut)

பாடல் வரிகளை ரசிப்பவர்களுக்குப் பிடித்தமான ஆப்ஸ் இது. பிடித்த பாடலின் குறிப்பிட்ட சில வரிகளை மட்டும் ரிங்டோனாக வைக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு ரிங்கட் ஆப்ஸ் உதவுகிறது. எல்லா எம்பி3 ஃபைல்களையும் ரிங்டோனாக மாற்றுவதற்கு ஏற்றவகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு பாடலைத் துல்லியமாக வெட்டுவதற்கு இது உதவிசெய்கிறது.

கெல்லோ (Qello)

1960களில் ஆரம்பித்து இப்போதுவரை நடந்திருக்கும் இசை நிகழ்ச்சிகளின் தொகுப்பை இந்த ஆப்ஸ் உதவியோடு பார்க்கலாம். ஆயிரத்துக்கும் மேற்பட்ட சர்வதேச இசைக் கலைஞர்கள், இசைக் குழுக்களின் நிகழ்ச்சிகளையும் இந்த ஆப்ஸ் மூலம் பார்க்கலாம். இசைக் கச்சேரி பிரியர்களுக்குப் பிடித்தமான ஆப்ஸாக இது இருக்கிறது. இசை நிகழ்ச்சிகளின் வீடியோக்களைப் பகிர்ந்துகொள்ளும் வசதியையும் இந்த ஆப்ஸ் வழங்குகிறது.

ட்யூன்இன் ரேடியோ (TuneIn Radio)

ஆன்லைன் ரேடியோக்களில் பிரபலமானது ட்யூன்இன் ரேடியோ ஆப்ஸ். உலகம் முழுவதும் இருக்கும் ரேடியோக்களை ‘லைவ்’வாக இந்த ஆப்ஸ் உதவியுடன் கேட்கலாம். சுமார் 70,000 ரேடியோ நிலையங்களின் நிகழ்ச்சிகளைக் கேட்கும் வசதியை இந்த ஆப்ஸ் வழங்குகிறது. உலகம் முழுக்க ரேடியோ பிரியர்களின் வரவேற்பை இந்த ஆப்ஸ் பெற்றிருக்கிறது.

8ட்ராக்ஸ் ரேடியோ (8tracks radio)

மனநிலைக்கு ஏற்றமாதிரி பாடலைக் கேட்க நினைப்பவரா? அப்படியென்றால், 8ட்ராக்ஸ் ரேடியோ ஆப்ஸ் உங்களுக்கு உதவும். மகிழ்ச்சி, சோகம், படிக்கும் நேரம், கோடை காலம், மழை காலம், ஹாலிடே, விழாக்கள் என ஒவ்வொரு நேரத்துக்கு ஏற்ற மாதிரி 20 லட்சம் பிளேலிஸ்ட்களில் இருந்து நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in