

வளர்ச்சிப் பருவத்தின் அதிமுக்கியமான கட்டம் சுயம் விழித்துக்கொள்வது. ஒரு புதிய சுய உணர்வு மலரும் அந்த உணர்வைத்தான் நாம் காதல் என்று நினைத்துக்கொள்கிறோம். அது வரைக்கும் அனுபவம் கொண்டிராத ஒரு உணர்ச்சி. ஒரு புதிய தன்னுணர்வு. யாரோ ஒருவர் நமக்காக மட்டுமே நம்மை விரும்புகிறார் என்பது உயிரைச் சிலிர்க்கவைக்கும் உன்னத உணர்வு. அது வரையில் ஒரு மகனாக, மகளாக, சகோதரனாக அல்லது சகோதரியாக என்று மட்டுமே தெரிந்து, இப்போது அப்படி எதுவும் இல்லாமல் தனக்காகவே தான் முக்கியம் என்று ஒருவர் நினைத்துக்கொள்ளும் தருணம் அது.
அதற்கு முன்னாலும் பின்னாலும் நடக்க முடியாத அனுபவம் இது. அதனாலேயே அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அனுபவமாக இருக்கிறது. எந்த வயதிலும் இந்த அனுபவம் கிடைக்கலாம் என்பது உண்மையாக இருந்தாலும் பொதுவாகப் பதின்பருவத்தில்தான் இது நடக்கிறது. இந்த உலகத்தில் நம்மை ஒரு தனிச்சுயமாக நாம் அடையாளம் காணும் அற்புத அனுபவம் அது.
ஒருபக்கம் இதை மறுத்துக்கொண்டும், மறுபக்கம் திரைப்படங்களிலும் நாவல்களிலும் இதைப் பெரிதுபடுத்திக் காட்டிக்கொண்டும் இருக்கும் சமூகத்தின் பொய் முகம் இந்த அனுபவத்தின் உன்னதத்தை மறைத்து, சிதைத்துவிடுகிறது. இதன் உண்மையைச் சரியான விதத்தில் புரிந்துகொண்டால் மட்டுமே அந்த உன்னதம் தெரியவரும். அதற்குச் சமூகம் தன் பொய் முகமூடிகளைக் கழற்றிப் போட்டுவிட்டு, வாழ்க்கை அனுபவத்தின் வெளிச்சத்தில் இதைப் பார்க்கக் கற்க வேண்டும்.
நானும் அவளும் 5 வயதிலிருந்து வகுப்புத் தோழர்கள். வளர, வளர எங்கள் நட்பும் சேர்ந்தே வளர்ந்தது. வெறும் தோழியாக மட்டுமில்லாமல் எனக்கு அறிவுரை சொல்லி, வழிநடத்துபவளும் அவளே. நான் 15 வயதை எட்டியபோது அவளிடம் எனக்கு இருந்தது நட்பு மட்டுமல்ல, காதலும்தான் எனத் தோன்றியது. உடனே அவளிடம் என் காதலைச் சொன்னேன். ஆனால் முதலில் எந்த பதிலையும் அவள் சொல்லவில்லை. கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் கழித்து என் காதலை ஏற்றுக்கொண்டு “நானும் உன்னைக் காதலிக்கிறேன்” என்று சொன்னாள்.
நாங்கள் ஒரு வருடம் காதலர்களாக இருந்தோம். ஆனால் திடீரென என்னைத் தவிர்க்க ஆரம்பித்தாள். “நான் உன்னைக் காதலிக்கவில்லை, தயவுசெய்து புரிந்துகொள்” என்கிறாள். அவளிடம் ஏன் இந்த திடீர் மாற்றம் என்பது எனக்குப் புரியவில்லை. அவளை யார் குழப்பியிருபார்கள் என்று தெரியவில்லை. இப்பொழுது நான் என்ன செய்வது?
உறவு என்பது மிகவும் இயக்கபூர்வமாக நடக்கும் ஒரு ஆழ்மன முறைபாடு. அதை மனித மேல்மனத்தின் எல்லைகளுக்குள் அடக்கிவிட முடியாது. யார் மீது எப்போது மனத்தில் பிடிப்பு ஏற்படும், எப்போது அது விட்டுப் போய்விடும் என்பதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. இதைப் பொறுப்பற்ற செயலாகப் பார்க்க வேண்டியதில்லை. உண்மையில் இது நமக்குள்ளே இருக்கும் குழந்தை மனத்தின் உள்ளியக்கம். ஆதரவும் அரவணைப்பும் தேடும் உள்ளியக்கம்.
நமக்குத் தெரிந்த, நாம் நன்றாக அறிந்த ஒருவரை அந்த மனம் பிடித்துக்கொள்வது இயல்பானது. ஆனால் அதில் வளர்ச்சி இல்லை. அதனால் சில காலம் கழித்து இது விட்டுப் போய்விடலாம். யாராவது அவளைக் குழப்பியிருப்பார்கள் என்று நீங்கள் உங்களைக் குழப்பிக்கொள்ளத் தேவையில்லை. இவ்வளவு நெருக்கமான தோழி என்பதைக் கணக்கில் கொண்டு அவள் உணர்ச்சிகளை மதித்து, அவள் முடிவை நீங்கள் எந்தக் கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொள்வதுதான் சரி. உங்கள் வலியும் வேதனையும்கூட உங்களை உங்கள் வளர்ச்சியின் பாதையில்தான் இட்டுச்செல்லும் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.
நான் 18 வயதுப் பெண். சிறு வயது முதல் ஒரே வகுப்பில் படித்தாலும் நானும், அவனும் எப்பொழுதுமே எதிரும் புதிருமாகதான் இருந்திருக்கிறோம். பத்தாம் வகுப்பு முடித்தவுடன் அவன் வேறு பள்ளிக்கு மாற்றமாகிப் போயிவிட்டான். அதன் பின் அவனைச் சந்திக்கவே இல்லை. ஆனால் ஒரு வருடத்திற்கு முன், திடீரென்று ஒரு நாள் அவனிடமிருந்து “எப்படி இருக்க?” என ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. நானும் “ஐ அம் ஓகே! ஆர் யூ ஓகே!”னு பதிலுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். அப்புறம் எப்பவாச்சும் இருவரும் எஸ்.எம்.எஸ். பரிமாறிக்கொள்வோம். போகப்போக அவனிடமிருந்து எஸ்.எம்.எஸ். வந்தாலே நான் பரவசமாக உணர ஆரம்பித்தேன்.
இப்படி இருக்க, சில மாதங்களுக்கு முன் ஒரு நாள் நான் பேருந்தில் பயணம் செய்யும்போது அவனும் எதேத்சையாக அதே பேருந்தில் இருந்தான். இருவரும் நான்கு வருடங்கள் கழித்து அன்றுதான் மீண்டும் பார்த்துக்கொண்டோம். சகஜமாகப் பேசினோம், பை சொல்லி பிரிந்தோம். அவ்வளவுதான். என் பள்ளி நாட்களில் இருந்த அளவுக்குக்கூட இப்பொழுது அவன் தோற்றம் வசீகரமாக இல்லை. ஆனால் எனக்கு என்ன ஆனது என்றே புரியவில்லை. அவனுடைய நினைவுகள் என்னை ஆட்கொண்டுவிட்டன. தினம் தினம் பேருந்தில் பயணிக்கும்போதெல்லாம் அவனும் அதே பேருந்தில் இருக்க மாட்டானா என மனம் ஏங்குகிறது. இதனால் நான் மனஉளைச்சலுக்கு ஆளாகுகிறேன். என்னால் வேறெதையும் சிந்திக்க முடியவில்லை. இந்த எண்ணத்தை விட்டு வெளி வர வேண்டும். நான் முன்பு இருந்ததைப் போலவே சகஜமாக மாற வேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று தயவு செய்து வழிகாட்டுங்கள்.
இந்த மனவலைப் பின்னலில் சிக்கிக்கொண்டுவிடாமல், இந்த எண்ணத்தை விட்டு வெளியில் வர வேண்டும் என்ற உங்கள் நோக்கத்திற்கு முதலில் என் வாழ்த்துக்கள்.
உங்களுக்குப் பதினெட்டு வயது. உங்களுக்குள் உங்கள் பெண்மை முழுச் சுய உணர்வுடன் விழித்துக்கொள்ளும் பருவம் இது. நம் எல்லோருக்குள்ளும் பெண்மை ஆண்மை இரண்டும் உண்டு. இந்த வயதில் ஆண்மையை உள்ளடக்கிய தன் முழுமையை அடையும் ஏக்கம் உங்கள் மனத்தில் எழுவது மிகவும் இயல்பானதுதான். இது ஒரு அக மன முறைபாடு. இதை நாம் தவறாகக் காதல் என்று நினைத்துக்கொள்கிறோம்.
வெளியில் ஒரு ஆணை நாடிப் போவது மனத்தின் செயல்பாடு. ஆனால் வெளியில் உள்ள எந்த நபரையும்விட அந்த ஏக்கம் அதிமுக்கியமானது. ஒரு தவம்போல் அந்த ஏக்க உணர்வுடன் இருங்கள். மிகவும் பொறுமை வேண்டும் அந்தத் தவத்திற்கு. ஆனால் கொஞ்ச காலம் அவ்வாறு நீங்கள் இருக்க முடிந்தால் உங்களுக்குள்ளே தனித்துவம் வாய்ந்த உங்கள் சுயம் மலரும். உன்னதமான நிகழ்வு அது. அதற்கு எதுவும் ஈடில்லை.
இப்போது யாருக்கும் எந்த வாக்கையும் கொடுத்துவிடாதீர்கள். உங்களுக்குள்ளேயே இருக்கும் ஆண்மையுடன் ஒன்றிணைந்துவிட்டால் அதன் பிறகு நீங்கள் வெளியில் உங்களுக்குப் பொருத்தமான ஒருவருடன் முழுமையான வாழ்க்கை வாழ முடியும்.
உளவியல் ஆலோசகர் ஆனந்த் கிருஷ்ணாவுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002. மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in