

பள்ளிச் சிறுவன் ஒருவன் புதருக்குள் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறான். ஒற்றை மகனை இழந்த துக்கத்தில் மொத்தக் குடும்பமும் அழுது புரள்கிறது. விசாரணை எல்லாம் முடிந்ததும், சிறுவனின் தந்தையை அழைக்கிறார் ஒரு போலீஸ்காரர். ‘உன் மகனைக் கொன்றது யார் தெரியுமா?’ என்று அவர் சொல்ல, ‘எதுக்கு சார் பச்சைப் புள்ளையக் கொல்லணும்?’ என்று அதிர்ச்சியோடு கேட்கிறார் தந்தை. ‘உம்மவன் பேசுன ஒத்த வார்த்தை தாம்ப்பா அவனைக் கொன்னுடுச்சி’ என்று போலீஸ்காரர் சொல்லத் தலை குனிகிறார் தந்தை.
பொது இடத்தில் கெட்ட வார்த்தை பேசுவது எவ்வளவு ஆபத்தான விஷயம் என்பதை வெறும் 10 நிமிடத்தில் செவிட்டில் அறைவது போல் சொல்லும் இந்தக் குறும் படத்தை இயக்கியவர் மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்த ர.பிரியதர்ஷன். குறும்படத்தின் டைட்டில், ‘கெட்ட வார்த்தை!’
கெட்டவார்த்தை படம் ஏன்?
“நான் முதலில் இயக்கிய குறும்படத்தின் பெயர், ‘பேய் ஸ்டோரி’. மற்றவர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு நடக்க வேண்டும் என்பதே அதன் மையக் கரு. இரண்டாவதாக எடுத்த குறும்படம் தான் ‘கெட்ட வார்த்தை’. டைட்டிலைச் சொன்னதும் எல்லோரும் காமெடி படமா? என்று கேட்டார்கள். கெட்ட வார்த்தை என்பது அந்தளவுக்கு சாதாரண விஷயமாகிவிட்டது. ஆனால், ‘கெட்ட வார்த்தை கத்தியைவிடக் கூர்மையானது, சில நேரங்களில் அது கொல்லவும் செய்யும்’ என்ற கருத்தை வலியுறுத்தி இந்தப் படத்தை எடுத்துள்ளேன். இதைப் பார்த்தால் குழந்தைகள் முன்னிலையில் தவறிக்கூடக் கெட்ட வார்த்தை பேச பெற்றோர்கள் தயங்குவார்கள்” என்கிறார் பிரியதர்ஷன்.
முயற்சிக்குப் பாராட்டு
தற்போது கோவை ஜி.ஆர்.டி. கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறார். “முதல் குறும்படம் தந்த அனுபவம், படித்த புத்தகங்கள், கல்லூரி புராஜெக்ட்களுக்காக எடுத்த குட்டிக் குட்டி குறும்படங்கள் எல்லாம் சேர்ந்து ரெண்டாம் படத்தைச் சிறப்பாக எடுக்க உதவியது. வீரியமாக இருக்க வேண்டும் என்பதால், 10 நிமிட படமாகச் சுருக்கியுள்ளேன். மதுரை செல்லூரைச் சேர்ந்த என் நண்பர் ஜாய் ஆனந்த் 5டி கேமிராவைப் பயன்படுத்தி ஒளிப்பதிவு செய்துள்ளார்” என்கிறார் பிரியதர்ஷன்.
இந்தப் படத்தின் வெளியீட்டு விழா மதுரையில் கடந்த 29.11.14 அன்று நடந்தது. அதில் ‘மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி’ என்ற படத்தின் ஒளிப்பதிவாளர் எஸ்.பி.எஸ்.குகன், மதுரை மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் விஜயலட்சுமி உள்ளிட்டவர்கள் பங்கேற்றதைப் பெருமையாகச் சொல்கிறார் பிரியதர்ஷன்.