

பத்தாண்டுகளுக்கு முன்னர் ‘பிரேக் அப்’என்ற சொல் இப்போதைய அளவுக்குப் பிரபலமானதாக இல்லை. இன்னும் சொல்லப்போனால், சமூக வலைதளங்கள் வந்தபிறகுதான் இந்த‘பிரேக் அப்’என்பது பொதுவெளிகளில் அதிகம் பரவத் தொடங்கியது. ‘பிரேக் அப்’என்பது முழுக்க முழுக்க இரண்டு நபர்களின் தனிப்பட்ட விஷயம். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், இப்போதைய பேஸ்புக்-இன்ஸ்டாகிராம் யுகத்தில் அது
இரண்டு நபர்களின் தனிப்பட்ட விஷயமாக மட்டும் இருப்பதில்லை என்பதுதான் உண்மை. சமூக வலைத்தளங்கள் வருவதற்கு முன்னர், காதலர்கள் பிரிந்துவிட்டால், தாங்கள் பிரிந்தது பற்றி அவர்கள் யாருக்கும் விளக்கம் தர வேண்டியதில்லை. ஆனால், இப்போதைய காதலர்கள் தங்கள் காதலை முதலில் பேஸ்புக்குக்கும், இன்ஸ்டாகிராமுக்கும்தான் அறிவிக்க வேண்டியிருக்கிறது.
பேஸ்புக்கில் ‘ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ்’ மாறுவதில் ஆரம்பித்து, படங்கள் பகிர்வது, அதற்கு நட்புவட்டம் ‘லைக்ஸ்’, ‘கமெண்ட்ஸ்’மூலம் ஏகபோக வரவேற்பு அளிப்பது எனச் சமூக வலைதளங்களில் காதலுக்கும், காதலிப்பவர்களுக்கும் மதிப்பு எப்போதும் அதிகமாகவே இருக்கும். ஆனால், காதலர்கள் பிரிந்த பிறகு அவர்களுக்குப் பிரச்சினை ஏற்படுத்துவதிலும் இந்த வரவேற்புக்கு நூறு சதவீதம் வாய்ப்பிருக்கிறது.
ஏனென்றால், காதலர்கள் பிரிந்த பிறகு ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸை மறுபடியும் மாற்றுவதுடன் மட்டும் எல்லாம் முடிந்துவிடுவதில்லை. காதலர்கள் காதலிக்கும்போது போட்ட இருவர் சம்பந்தப்பட்ட பதிவுகள், படங்கள், நண்பர்களின் கமெண்ட்ஸ் என எல்லாம் அவர்களை ஒரு கட்டம்வரை துரத்தவே செய்கிறது. இந்த ‘பிரேக் அப்’புக்குப் பிறகான காலத்தைச் சமூக வலைதளங்களில் சமாளிப்பதற்கும் இப்போதைய இளைஞர்களுக்கு ஒரு மனநிலை தேவைப்படுகிறது.
முன்னோக்கி யோசிக்கலாம்
காதல் போன்ற உறவுகளைப் பற்றிய தனிப்பட்ட விஷயங்களைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொள்வதற்கு முன் ஒருமுறைக்குப் பலமுறை யோசிக்க வேண்டும். அதற்காக, காதல் வாழ்க்கையைப் பற்றிச் சமூக வலைதளங்களில் நட்பு வட்டத்திடம் பகிர்ந்துகொள்ளவே கூடாது என்பதல்ல. பேஸ்புக்கின் ‘டைம்லைன்’வருங்காலத்தில் நாம் மறக்க நினைக்கும் விஷயங்களைக் கூட நமக்கு நினைவுப் படுத்திக் கொண்டேயிருக்கும் என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிருக்கிறது.
“பிரேக் அப்புக்குப் பிறகான காலகட்டத்தில் எல்லோருமே ‘எமோஷனலாக’, பலவீனமாகவே இருப்போம். நானும் அப்படித்தான் இருந்தேன். ஆனால், நான் என் ‘ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ்’ பற்றியெல்லாம் பேஸ்புக்கில் எதுவும் பகிர்ந்துகொள்ளவில்லை. ஒருவேளை, பகிர்ந்துகொண்டிருந்தால் நான் நண்பர்களுக்கு மட்டுமில்லாமல் என் ‘எஃப் பி’ நட்பு வட்டத்தில் இருக்கும் பலருக்குப் பதில் சொல்ல வேண்டியிருந்திருக்கும். அதோடு, பழைய காதல் உறவைப் பற்றி யார் கேட்டாலும் அது நிச்சயமாக நம்மைப் பாதிக்கவே செய்யும்” என்கிறார் 24 வயதாகும் ராஜேஷ்.
‘அன்ஃப்ரெண்ட்’ செய்யலாமா?
காதலர்கள் இருவரும் பரஸ்பர புரிதலுடனும், பக்குவத்துடனும் பிரியும்போது அந்த நட்பில் எந்தச் சிக்கலும் வருவதில்லை. ஆனால், ஏதாவது ஒரு தரப்பில் பிரிவதில் அதிருப்தி இருக்கும்போது சமூக வலைதளங்களில்தான் அவர்களுடைய அந்த அதிருப்தி முதலில் வெளிப்படும். இந்தச் சூழ்நிலையைச் சமாளிப்பது பற்றி 26 வயதாகும் வித்யா இப்படிச் சொல்கிறார்:
“ஒருவரை விட்டுப் பிரிந்த பிறகு அந்த நினைவுகள் எந்த விதத்திலும் நம்மைப் பாதிக்கவிடாமல் பார்த்துக்கொள்வதுதான் சரி. அதற்காக, முன்னாள் காதலரை பேஸ்புக்கில் ‘அன்ஃப்ரெண்ட்’ செய்வதுதான் நல்லது. இல்லாவிட்டால், ஏதோவொரு விதத்தில் அவருடைய செயல்பாடுகள் பற்றிய செய்திகள் நமக்குக் கிடைத்துக்கொண்டே இருக்கும். அது நிச்சயம், நம் ‘எமோஷனல்’ஆரோக்கியத்தைப் பாதிக்கும்”.
ஆனால், மற்றொருபுறம் ‘பிரேக் அப்’ ஆன பிறகும் முன்னாள் காதலருடன் பேஸ்புக்கில் நட்பாகத் தொடர்வது என்பதும் இப்போது இயல்பான விஷயமாகவே இருக்கிறது. “என் தோழி ஒருத்தி, பிரேக் அப்புக்குப் பிறகும் அவள் முன்னாள் காதலருடன் பேஸ்புக்கில் நட்பை நீடித்துக்கொண்டுதான் இருக்கிறாள். அதற்கு அவள் கூறும் காரணம், ஒருவேளை நான் அவரை அன்ஃப்ரெண்ட் செய்துவிட்டால், என்னை ஒரு பலவீனமான ஆளாக நினைத்திருப்பேன்.
நட்புடன் நீடிப்பதால் எனக்கு என்னுடைய பழைய ரிலேஷன்ஷிப் பற்றிய எந்தவொரு பயமும் இல்லை என்று சொல்கிறாள். இதற்கான சாத்தியங்களையும் சமூக வலை தளங்கள்தான் வழங்குகின்றன என்பதை மறந்துவிடக் கூடாது” என்கிறார் வித்யா.
படங்கள் கொடுக்கும் நினைவுகள்
‘பிரேக் அப்’புக்குப் பிறகு இருவரும் சேர்ந்திருக்கும் படங்களை மொத்தமாக பேஸ்புக்கிலும், இன்ஸ்டாகிராமிலும் இருந்து நீக்கிவிடுவதுதான் நல்லது. இல்லாவிட்டால் ஏதோவொரு கட்டத்தில் அந்தப் படங்கள் நம் நிகழ்காலத்தைப் பாதிக்கவே செய்யும். “பிரேக் அப் பற்றிய நினைவுகள் கொஞ்ச காலத்துக்கு நிச்சயம் துரத்தும். அதைத் தவிர்க்க முடியாது. அதனால், படங்களை ‘டெலிட்’ செய்துவிட்டால் ‘பிரேக் அப்’பாதிப்பில் இருந்து சீக்கிரம் விடுபடலாம்” என்கிறார் ராஜேஷ்.
புதிய ஆரம்பம்
ஒரு முறை ‘பிரேக் அப்’ஆகிவிட்டால் மீண்டும் புதிதாக ரிலேஷன்ஷிப்பில் நுழைவதில் ஒருவித பயம் இருக்கும். ஆனால், இந்தப் பயம் அவசியமில்லை என்கிறார் வித்யா. “இப்போது ஆண், பெண் என்ற பாலின வித்தியாசம் இல்லாமல் தன் துணையின் பழைய ‘ரிலேஷன்ஷிப்’ பற்றிய உண்மைகள் தெரிய வரும்போது அதை இயல்பாக ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர்கூட இந்த நிலைமை கிடையாது. ‘பிரேக் அப்’ இயல்பானது என்பதைப் புரியவைத்ததில் சமூக வலைதளங்களுக்கு நிச்சயம் ஒரு பங்கிருக்கிறது. அதையும் மறுக்க முடியாது”.
காதல் மட்டும் அல்ல, எந்த உறவாக இருந்தாலும் அதில் பிரிவும் ஒரு பகுதிதான். அந்தப் பிரிவு நிரந்தரமானதாகவும் இருக்கலாம். தற்காலிகமானதாகவும் இருக்கலாம். அந்தப் பிரிவுக்குப் பிறகான நேரத்தை எப்படிக் கடந்துபோகிறோம் என்பதில்தான் உறவுகளைப் பற்றிய புரிதல் அடங்கியிருக்கிறது.