2014-ன் டாப் 10 கிராஃபிக் நாவல்கள்

2014-ன் டாப் 10 கிராஃபிக் நாவல்கள்
Updated on
5 min read

தமிழ் காமிக்ஸ்

நில் கவனி சுடு (ஏப்ரல் 2014)

கதை: பொசெல்லி, ஓவியம்: மஸ்டாண்டுவோனோ, வெளியீடு: லயன் காமிக்ஸ்

இந்த அமெரிக்க சாகசக் கதையில் தொடர்கொள்ளைகளையும், கொலைகளையும் செய்யும் ஒரு நகரத்தின் காவல்துறை அதிகாரிகளின் மீது சந்தேகப்பட்டு, துப்பறிந்து வேரறுக்கிறார்கள் சாகச ஹீரோக்கள்.

அமெரிக்காவின் மேற்குக் காட்டுப் பகுதியில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கதை. 6 அடி இடைவெளியில் இரண்டு தரப்பினருக்கிடையே வெறும் முப்பது வினாடிகளே நீடித்த இந்த சண்டையில் 30 தோட்டக்கள் சுடப்பட்டனவாம்.

அமெரிக்காவின் பிரபல காமிக் ஹீரோவை வில்லனாக்கி உலகுக்கு உன்மையைக் காண்பிக்க ஆசைப்பட்ட ஒரு இத்தாலிய நிறுவனத்தின் புனைவே இந்த நில், கவனி, சுடு. வரலாற்றில் ஹீரோக்களாக இருந்த சட்டப் பரிபாலன அதிகாரிகளை வில்லன்களாகவும், நமது காமிக்ஸ் நாயகர்களான டெக்ஸ் வில்லர் குழு உண்மை ஹீரோக் களாகவும் இந்த கதையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் காமிக்ஸ்:

விரியனின் விரோதி (ஜூலை 2014)

கதை: டோரிசன் சேவியர், ஓவியம்: ரால்ஃப் மேயர், வெளியீடு: ஷன்ஷைன் லைப்ரரி (லயன் காமிக்ஸ்)

ஐரோப்பிய காமிக்ஸ் வரலாற்றில் கடந்த 30 ஆண்டுகளில் வெளியான கதைகளில் மிக முக்கியமான எதிர்நாயகனாகக் கருதப்படும் மங்கூஸ் என்ற கதாபாத்திரம் உருவான கதைதான் இந்த க்ரைம் திரில்லர் – கிராபிஃக் நாவல்.

1984-ம் ஆண்டு வெளியான முதல் பாகம் முதல் 2007-ம் ஆண்டு வெளியான 19-வது பாகம்வரை உலகின் 13 மொழிகளில் வெளியான XIII (13 – தமிழில் – ரத்தப் படலம்) கதையை வாசித்த அனைவருமே வெறுக்கும் கதாபாத்திரம் மங்கூஸ். இவன் ஒரு தொழில்முறை கொலையாளி. நினைவு தவறி தோளில் XIII (13) என்ற பச்சை குத்தப்பட்ட அடையாளத்தை தவிர வேறெதுவும் நினைவில் இல்லாமல் இருக்கும் ஒரு இளைஞனை மங்கூஸ் தேடிவருவதில் முதல் பாகம் தொடங்குகிறது.

தன்னைத்தானே தேடியலையும் இந்த விந்தை மனிதன் ரசிகர்களுக்குப் பிடித்துப்போக, ஒரு மாபெரும் காமிக்ஸ் தொடர் ஆரம்பித்தது.

ஆனால், ஒரே ஒரு புத்தகத்தின் மூலம் அந்த ரசிகர்களை தன் பக்கம் இழுத்துக்கொண்டான் மங்கூஸ். விதிவசத்தால் தொழில்முறை கொலையாளியாக மங்கூஸ் எப்படி மாறுகிறான் என்பதை இதில் படித்தவுடன், உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடியாது.

இந்திய காமிக்ஸ்:

The Skull Rosary (டிசம்பர் 2013)

கதை: ஸ்வேதா தனேஜா, ஓவியம்: விவேக் கோயல், வெளியீடு: ஹோலி கௌ எண்டெர்டைன்மண்ட்

சிவபுராணக் கதைகளுக்கு முன்னோடியான லிங்க புராணத்தின்படி சிவபெருமானுக்கு ஐந்து தலைகளும், பஞ்சமுகி என்ற பெயரும் உண்டு. இந்த ஐந்துக்கும் ஒவ்வொரு கதையின் மூலம் விளக்கம் அளிக்கிறது இப்புத்தகம்.

பாதாள உலகின் அரசன் ஹிரண்யாட்சனின் மகனான அந்தகாசுரன் பிறப்பிலிருந்தே பார்வையற்றவனாக இருந்து, கடுந்தவத்தின் மூலம் பார்வையைப் பெற்று ஆணவம் கொண்டு உலகையே தன்வசமாக்கிக் கொள்கிறான். ஒரு கட்டத்தில் பார்வதிக்காக, சிவபெரு மானையே எதிர்க்கத் துணிகிறான்.

இதைப் போலவே ஹிரண்யகசிபுவை வதம் செய்த பிறகு நரசிம்ம அவதாரமெடுத்த விஷ்ணுவின் தணியாத கோபத்தை அடக்க சிவன் ஷரபமாக மாறுவது போன்றவை அற்புதமான ஓவியங்களால் காட்டப்பட்டுள்ளது.

உலகத் தரமான கிராபிஃக் நாவலை இந்தியர்களால் வழங்க முடியும் என்பதற்குச் சிறந்த உதாரணமாக இந்த நாவல் திகழ்கிறது. நம்முடைய இதிகாசங்கள், புராணங்களில் இருக்கும் கிளைக்கதைகளையும் சுவை யாக, விறுவிறுப்பாக சொல்லமுடியும் என்பதையும் உணர்த்திய புத்தகம் இது.

World War One (மே 2014)

கதை: ஆலன் கௌசில், ஓவியம்: லலித் குமார் ஷர்மா, வெளியீடு: கேம்ப் பையர்

முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றது முதல் உலகப் போர். பல லட்சக் கணக்கானவர்களின் உயிரை பலி கொண்ட இந்த போரை, நூறு பக்கங்களில் அழுத்தமாக சொல்லி இருப்பதே இந்த புத்தகத்தின் சிறப்பு.

சரயீவோவில் பிரான்ஸ் பெர்டினாண்ட் கொல்லப்பட்டது முதல் வெர்சைல்ஸ் ஒப்பந்தம் வரையான காலகட்டத்தை முறையாக, அழுத்தமாக 134 பக்கங்களில் சொல்ல முயன்று, அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் கதாசிரியர் ஆலன். காமிக்ஸ் டீலராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் எடிட்டராக, கதாசிரியராக உருவெடுத்துள்ள இவர், தன்னால் குழந்தைகளுக்காக ஜாக்கி சானின் கதையையும் எழுத முடியும், இதுபோல ஒரு வரலாறையும் எழுத முடியும் என நிரூபித்துள்ளார்.

ஒரு வீரனின் பார்வையில் தொடங்கி, முதன்முதலாகப் போரில் கொல்லப்பட்ட பிரிட்டிஷ் வீரனான ஜான் பார் முதல் யுத்தத்தின் கடைசி நாள் வரை அருமையாக, கோவையாகச் சொல்லப்பட்டிருக்கும் இந்தக் கதைக்கு டெல்லியைச் சேர்ந்த ஓவியர் லலித்குமார் ஷர்மா அற்புதமான ஓவியங்கள் மூலம் மெருகேற்றி உள்ளார்.

மாங்கா - ஜப்பானிய காமிக்ஸ்

All you need is Kill (1 & 2) (நவம்பர் 2014)

கதை: ஹிரோஷி சகுரசகா / ரீயோசுக்கி டகௌச்சி, ஓவியம்: டகேஷி ஒபாடா, வெளியீடு: விஸ் மீடியா, அமெரிக்கா

வேற்றுக்கிரகவாசிகளை எதிர்த்துப் போரிடும் கதாநாயகன், கால சுழற்சியில் (Time Loop) சிக்கி ஒவ்வொரு நாளும் மரணமடைய நேரிடுகிறது. இதிலிருந்து தப்பித்து, எதிரிகளை அழிக்க வழி தேடும் அறிவியல் புனைவு.

2004-ம் ஆண்டு எழுதப்பட்ட இந்த நாவலை மையமாக வைத்து மாங்கா காமிக்ஸ் ஓவிய மேதையான டகேஷி ஒபாட்டா வரைந்த இந்த ஓவிய விருந்தில், பூமியின் பெரும்பான்மையான பகுதியை மிமிக்ஸ் என்ற வேற்றுலக உயிரினங்கள் ஆக்கிரமித்துக்கொள்ள, எஞ்சி இருக்கும் பூமிவாசிகள் ஒருங்கிணைந்த பாதுகாப்பு குழுவை உருவாக்கி மிமிக்சுடன் மோதுகின்றனர்.

அவ்வாறு போருக்குச் செல்லும் ஒரு வீரன்தான் கெய்ஜி க்ரியா. ஆனால் போரின் முதல் நாளே சக வீரர்களுடன் கெய்ஜி கொல்லப்படுகிறான். அதிசயமாக கெய்ஜி கண்விழிக்கும்போது முந்தைய நாள் இரவிலிருந்து சம்பவங்கள் மறுபடியும் நடக்கத் தொடங்குகின்றன. மறுநாளும் போரில் கெய்ஜி கொல்லப்படுகிறான்.

பலமுறை இவ்வாறு கொல்லப்பட்டவுடன் தன்னுடைய விதியானது ரீட்டா என்ற மற்றொரு கால சுழற்சியில் சிக்கிய பெண்ணுடன் இணைந்திருக்கிறது என்பதை கெய்ஜி உணர்கிறான். இருவரும் சேர்ந்து ஒவ்வொரு நாளும் சிறிதளவு முன்னேற்றம் காண, 160-வது நாளில் கெய்ஜியின் சுழற்சி எப்படி முடிவுக்கு வந்தது என்பதை வாழ்வியல் தத்துவங்கள், நட்பு, உணர்வுகளுக்கான முக்கியத்துவம் என்று பல கோணங்களில் பிணைத்து சொல்லப்பட்டுள்ளது இக்கதை. இந்த ஆண்டு வெளியான Edge of Tomorrow என்ற Tom Cruise நடித்த ஹாலிவுட் படத்தின் மூலக்கதை இது.

Brave Dan (ஜூலை 2014)

கதை & ஓவியம்: ஒசாமு தெசூகா (1962 ஜப்பானிய மாங்கா), ஆங்கில மொழியாக்கம்: கைல் வாண்டர்ஸ்டீன், வெளியீடு: டிஜிட்டல் மாங்கா DMG

ஜப்பானிய ஐனு பழங்குடியின புதையலை கைப்பற்ற மூன்று சாவிகள் தேவை. ஒரு சிறுவனும், விலங்குக் காட்சியகத்தில் இருந்து தப்பிய புலியும் சேர்ந்து தீயசக்திகள் கைவசம் செல்லாமல், அதைத் தடுப்பதே கதை.

ஜப்பானிய ஐனு பழங்குடியினரின் மீது அளவு கடந்த மரியாதை கொண்டிருந்த மாங்காவின் தலைமகனான தெசூகா, கடந்த காலத்தை பற்றிய கதைகளைத் திரட்டி 1962-ல் இதை எழுதினார்.

மேலாளரை எதிர்த்துக் குடும்பத்துடன் தப்பியோடுகிறார் கோட்டன் எனும் சிறுவனின் தந்தை. மற்றவர்கள் பின்தொடருவதைத் தவிர்க்க காட்டுக்கு அவர் தீ வைக்க, அதனால் விலங்கு காட்சியகத்துக்குச் சென்று கொண்டிருக்கும் ரயில் கவிழ, டேன் என்ற புலி தப்பிக்கிறது.

அந்த புலி தீயில் விழும் ஒரு மரத்தின் அடியில் சிக்க, அதனை கோட்டனின் தந்தை காப்பாற்றுகிறார். பதிலுக்கு அவர்கள் குடும்பம் முழுவதையுமே அந்தப் புலி காப்பாற்றுகிறது. அதன் பின்னர் கோட்டனும் டேனும் நண்பர்களாகின்றனர். கோட்டனின் பெற்றோர்கள் கடத்தப்படும்போது, இபோபோ என்னும் முதியவர் கோட்டனைச் சந்தித்து ஐனு கோயிலின் பொக்கிஷங்களைப் பற்றியும், அவற்றை அடையத் தேவைப்படும் மூன்று சாவிகளைப் பற்றியும் சொல்லி, ஒரு சாவியை கோட்டனிடம் தருகிறார்.

கோட்டனின் கையால்தான் தனக்கு மரணம் ஏற்படும் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டாலும்கூட அவனுடனே கதை முழுக்க டேன் புலி பயணிக்கிறது. ஒரு கவித்துவ முடிவுடன் கதை நிறைவு பெறும்போது அந்தப் புலிக்காக நாம் கண்ணீர் சிந்துவதைத் தவிர்க்கவே முடியாது.

ஆங்கிலம் - பிரிட்டிஷ் காமிக்ஸ்:

Butterfly Gate (அக்டோபர் 2014)

கதை: பெஞ்சமின் ரீட், ஓவியம்: கிரிஸ் வைல்ட்கூஸ், வெளியீடு: இம்பிராப்பர் புக்ஸ் (இங்கிலாந்து)

இரண்டு சிறுவர்கள் தங்களது தோட்டத்தில் வண்ணத்துப்பூச்சியைப் பிடித்து விளையாடிக்கொண்டு இருக்கும்போது, ஒரு விசித்திரமான வண்ணத்துப்பூச்சி அவர்களைக் கவர, அதைப் பின்தொடர்ந்து சென்று காலப் பெட்டகத்தின் கதவைத் திறந்து வேறொரு காலத்தில் அவர்கள் பிரவேசிக்கிறார்கள்.

அங்கு வேறு கிரகத்தைச் சேர்ந்த ஒரு உயிரினம் இவர்களை சில செயல்களைச் செய்யத் தூண்டுகிறது. வசனமோ, வார்த்தைகளோ இல்லாமல் வந்திருக்கும் காமிக்ஸ் கதை இது. நாவல்களில் இருந்து சித்திரக் கதைகள் எப்படி வேறுபடுகின்றன என்றால், கதையை ஓவியங்களின் மூலம் சொல்லும் பாணியில்தான். மறுபடியும் சித்திரக் கதைகளின் வசந்தத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறது இந்தத் தொடரின் முதல் பாகம்.

Good Cop Bad Cop (நவம்பர் 2014)

கதை: ஜிம் அலெக்ஸாண்டர், ஓவியம்: லூக் கூப்பர் + வில் பிக்கரிங், வெளியீடு: Rough Cut Comics (இங்கிலாந்து)

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு நிழல் முகம் உண்டு. தனது நேரெதிர் துருவமாக இருக்கும் பகுதியை நிழல் முகமாகக் கொண்டவர்களை ஜெக்கில் Vs ஹைடு என்று உளவியல் அறிஞர்கள் வகைப்படுத்துகிறார்கள். ஒரு காவல்துறை அதிகாரி இப்படி இருவேறு மனநிலைகளில் இருந்தால் என்ன ஆகும்?

பிரிட்டனின் மிகச் சிறந்த காமிக்ஸ் என விருது வாங்கிய தொடரின் இரண்டாவது பாகம் இது. மனப்பிறழ்வு நிலையில் இருக்கும் காவல்துறை அதிகாரியான பிரையன் பிஷர் ஒரு மனநிலையில் இருக்கும்போது எப்படி செயல்படுகிறார்? அவரது மனநிலை மாறியவுடன் எவ்விதம் செயல்புரிகிறார் என்பதை கச்சிதமாக விளக்குகிறது இந்த புத்தகத்தின் முதல் கதை.

வசனங்கள்தான் இந்த கதையின் அதிகபட்ச சிறப்பு. கதாசிரியர் ஜிம் அசத்தி இருக்கிறார். சிக்கன ஓவிய மரபின்படி முதல் கதைக்கு ஓவியங்களை அமைத்துள்ளார் லூக்.

ஆங்கிலம் - அமெரிக்க காமிக்ஸ்:

The Sword & The Butterfly (ஏப்ரல் 2014)

கதை: மத்தியஸ் உல்ஃப் ஓவியம்: ஜிம் ஜிமெனேஸ் (ஓவியம்) + குளோரியா கபால் (வண்ணம்), வெளியீடு: Razor Wolf Entertainment LLC (அமெரிக்கா)

இங்கிலாந்தின் மன்னர் ஆர்தர், அவருடைய புகழ்பெற்ற எக்ஸ்காலிபர் வாள் – ஆகிய இரண்டையும் இணைத்து, அட்லாண்டிஸ், கடல் கன்னிகள், அயல்கிரக படையெடுப்பு என்று பலவற்றையும் ஒருங்கிணைத்து எழுதப்பட்ட அறிவியல் புனைவு.

Unbeatable என்ற கிராபிஃக் நாவலை எழுதி வாசகர்கள் மற்றும் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட மாத்தியஸ் உல்ஃப் இரண்டு வருடங்களாக எழுதிய இந்த கதை ரவீந்திரநாத் தாகூரின் வசனத்துடன் ஆரம்பிக்கிறது.

தாய், தந்தையை இழந்த ஒரு சிறுமி மாபெரும் வீராங்கனையாகப் பயிற்சி பெறுகிறாள். பயிற்சி முடிந்தவுடன் அவளுக்கு மன்னர் ஆர்தரின் வீரவாளைப் பற்றியும், லேடி ஆப் தி லேக் பற்றியும் சொல்லப்படுகிறது. ஆர்தரின் வாளான எக்ஸ்காலிபரை அவள் எடுக்கும்போது கதை ஆரம்பிக்கிறது. அவள் தந்தையைக் கொன்றது யார்? அவள் தாய் யார்? கடலில் மூழ்கிய அட்லாண்டிஸ் கண்டத்துக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு என்று பல கோணங்களில் நகர்கிறது இந்த கதை.

The Late Child & Other Animals ( நவம்பர் 2014)

கதை: மார்க்கரிட் வான் குக், ஓவியம்: ஜேம்ஸ் ரோம்பர்கர் (மனைவியின் கதை + கணவன் ஓவியம்), வெளியீடு: FantaGraphics Books (அமெரிக்கா)

இரண்டாம் உலகப் போரின் முடிவில் லண்டனில் பெற்றோரையும், கணவனையும் இழந்து தனித்து நிற்கும் ஹெடி மற்றும் அவளது வளர்ப்பு மகளின் கதை. சமூகத்தில் பெண்களின் நிலையைப் பற்றிய நேரடியான விமர்சனம் இது. மார்கரீட்டின் தாய் எப்படி தனியாக ஒரு பெண்ணைத் தத்தெடுத்து, அவளை வளர்க்க சட்டச் சிக்கல்களைச் சந்தித்து, வளர்த்து ஆளாக்கி, அதன் பின்னர் சமூகத்தின் அவலங்களை நேரிடையாகக் காண நேரிட்டு, அதை எதிர்கொண்ட விதத்தைப் பற்றிய புரிதலை இந்த நாவல் விளக்குகிறது.

ஒரு கவிஞர் உருவாக்கிய கிராபிஃக் நாவல் என்பது ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு ஓவியக் கட்டத்திலும், ஒவ்வொரு வார்த்தையிலும் அற்புதமாகத் தெரிகிறது. பெண் நிலை நோக்கில் மிக முக்கியமான புத்தகம்.

- கிங் விஸ்வா, காமிக்ஸ் ஆர்வலர், பதிப்பாளர்.

தொடர்புக்கு: prince.viswa@gmail.com:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in