

நாம் பயணிக்கும் ஒவ்வொரு நாளும் வாழ்க்கை அனுபவங்கள் நிறைந்ததே. 365 நாட்களைக் கொண்டு ஒரு முழு ஆண்டு முடிவடையும்போது, இந்த வருடம் நாம் என்ன கற்றுக்கொண்டோம்? எப்படிப்பட்ட அனுபவங்கள் நிறைந்தது என்று நினைத்துப் பார்ப்போம். அப்படியாக 2015 ஆம் ஆண்டுக்குள் பயணிக்க பல எதிர்ப்பார்ப்புகளுடன் காத்திருக்கும் இளைஞர்களின் 2014 ஆம் வருடத்தினுடைய சின்ன ரீப்ளே இதோ.
ரசிகா, இரண்டாம் ஆண்டு பிபிஏ, சென்னை கிறித்துவ கல்லூரி
2014-ம் ஆண்டு எனக்கு அனுபவம் நிறைந்ததாக இருந்தது. கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும்போது தெளிவாக இல்லை. எப்படிப் படிப்பது, நண்பர்களுடன் எப்படிப் பழகுவது எனப் பல குழப்பங்கள் இருந்தன. இந்த வருடம் மனதளவில் தெளிவாக உள்ளேன் என்ற நம்பிக்கை வந்துள்ளது. டெசிஷன் மேக்கிங் எப்படி என்பதைக் கற்றுக்கொண்டேன். 2014-ம் ஆண்டு என்னுடைய கடைசி டீன்-இயர். அடுத்த ஆண்டு மேற்படிப்பு, வேலை எனச் செல்ல வேண்டும் என்பதால், இந்த ஆண்டு நான் கற்றுக்கொண்டதை வைத்து 2015-ஐ எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.
ஆர்த்தி, இரண்டாம் ஆண்டு MBBS, பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி
2014 எனக்கு மிகவும் ஸ்பெஷல். பள்ளிக்காலம் முதலே டாக்டர் படிப்பு படிக்க வேண்டும் என்பது கனவு. முதலாம் ஆண்டு தியரி மட்டுமே படித்தோம். ஆனால் இந்த வருடம் அடுத்தபடியாக தியரியுடன் ப்ராக்ட்டிகல்ஸ் சேர்ந்து படிக்கும்போது, மருத்துவத்தின் வலிமையை உணர்ந்தேன். இந்த வருடம் என்னுள் இருக்கும் உண்மையான ஆர்வத்தைக் கண்டேன். பயம் கலந்த நம்பிக்கை என்னுள் இருந்தாலும் வீட்டில் பெற்றோரின் ஊக்கம் துணை நிற்பது எனக்கு பலம் சேர்கிறது.
ப்ரித்திவ், இறுதி ஆண்டு, பீட்டர்ஸ் பொறியியல் கல்லூரி
நான்கு ஆண்டுகளாகப் பொறியியல் படிக்கும் எனக்கு ஏன் படிக்கிறோம் என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. எனக்குள் இருக்கும் ஆர்வமோ ரேடியோ ஜாக்கி ஆக வேண்டும் என்பதுதான். என் உண்மையான திறமையை வெளிக்கொண்டுவந்த வருடம் இந்த 2014தான். கல்லூரி விழா ஒன்றைத் தொகுத்து வழங்கியபோதுதான் பயம் போனது, நம்பிக்கை பிறந்தது. அடுத்தபடியாக என் கனவை நோக்கிச் செல்ல வாய்ப்பு. மசாலா எஃ.எம் என்னும் ஆன்-லைன் எஃஎம்-ல் ரேடியோ ஜாக்கி ஆகிப் பேச ஆரம்பித்துவிட்டேன். கனவுகளுடன் 2015க்கு வெயிட்டிங்.
விஷ்ணு ப்ரியா, இரண்டாம் ஆண்டு பிகாம், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்
கல்லூரி சேர்ந்து ஆட்டம் பாட்டம் என இந்த வருடம் முழுவதும் ஜாலியாகச் சென்றது. அதே நேரத்தில் பள்ளிச் சூழலில் இருந்து கல்லூரிக் சூழலுக்கு ஏற்றபடி மாறியுள்ளேன். தோழி ஒருவரின் ஆலோசனையால் செய்தித்தாள் படிக்கும் பழக்கம் வந்தது. ஃபேஸ்புக் போன்ற தளங்களில்கூடப் பயனுள்ள செய்திகளை பின்பற்ற முடியும் என்று தெரிந்தது. புத்தகங்கள் படிக்கும் பழக்கம் ஏற்பட்டால் நாம் தனி உலகில் பயணிப்போம். இந்த ஆண்டு ஒரு புத்தகத்துடன் தொடங்கி அடுத்த ஆண்டுக்குப் புதிய புத்தகத்துடன் பயணிக்கப் போகிறேன்.
2014 ஆம் ஆண்டு நினைவுகளுடனும் அனுபவங்களுடனும் அடுத்த ஆண்டுக்குள் பயணிக்கும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.