

சமூகம் என்பது மனித வாழ்க்கையின் நிர்வாகத்திற்காக ஏற்படுத்தப்பட்டது. அதுவும் மனிதர்கள் பெருமளவுக்குத் தன்னுணர்வும் அறிவுணர்வும் இல்லாத காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. இன்று அறிவுணர்வு கணிசமான அளவு அதிகரித்திருக்கிறது. ஆனாலும் அதே சமூகக் கோட்பாடுகள் இன்னும் ஆட்சி செலுத்துகின்றன. இந்தச் சமூகக் கோட்பாடுகள் எல்லா விஷயங்களையும் ஒரு அமைப்புக்குள், ஒரு சட்டகத்துக்குள், கொண்டுவந்துவிட முயல்கின்றன.
மனிதப் பிரக்ஞையில் அந்தச் சட்டகத்துக்குள் அடைத்துவிட முடியாதபடி இருப்பவை முக்கியமாக உணர்ச்சிகளும் கற்பனை செய்யும் திறனும்தான். அதனால் உணர்ச்சிகளையே சமூகம் நிராகரிக்கிறது. இதற்குக் காரணம் உணர்ச்சிகளின் வெளிப்பாடு சமூக அமைப்பையே சிதைத்துவிடும் என்னும் பெரும் பயம்தான். இதனால் துயரம், கோபம், பயம், சந்தோஷம் என்னும் நான்கு அடிப்படை உணர்ச்சிகளை சமூகம் பெருமளவுக்கு அனுமதிப்பதில்லை. கற்பனைத் திறனையும் அது ஊக்கப்படுத்துவதில்லை. அல்லது அதைப் பொய்யாகப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது.
இதனால்தான் ஆழம் ஏதுமற்ற, இலக்கற்ற கதைகள், கவிதைகள் என்று பல விஷயங்கள் இன்று சுதந்திரமாக நடமாடுகின்றன. உணர்ச்சிகளைச் சமூகம் நிராகரிப்பதால் உணர்ச்சிகள் மனத்தில் புதைக்கப்படுகின்றன. அல்லது பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. இவ்வாறு மறுக்கப்பட்ட உணர்ச்சிகள் தம் சுயநிலை பிறழ்ந்து வன்முறையாகவும் வக்கிரமாகவும் திரிந்துபோகின்றன. சமூக இயக்கம் தாறுமாறாகப் போய்விடுகிறது. வாழ்க்கையின் நிர்வாகத்திற்காக ஏற்படுத்தப்பட்ட சமூக அமைப்பு வாழ்க்கையைச் சீர்குலைக்கிறது.
இந்த நிலை மாறவேண்டுமானால் உணர்ச்சிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவற்றுக்கான இடம் அளிக்கப்படவேண்டும். வளர்ந்துவரும் தன்னுணர்வும் அறிவுணர்வும் புதிய சமூகக் கோட்பாடுகளை உருவாக்க வேண்டும்.
பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவன் நான். எனக்கு இப்பொழுது பத்தொன்பது வயது. யாரோடும் சண்டை போடாமல், அமைதியாக இருப்பதுதான் என் இயல்பு. ஆனால் யாராவது என்னைச் சீண்டினார்கள் என்றால், உடனே கோபம் உச்சந்தலைக்கு எகிறிவிடுகிறது. என் கல்லூரியில் பலர் என்னை கேலி, கிண்டல் செய்கிறார்கள். அத்தகைய தருணங்களில் அடக்க முடியாத அளவுக்குக் கோபம் வருகிறது. நான் என்ன செய்கிறேன் என்பது எனக்கே புரியவில்லை. என்னை நான் எப்படி மாற்றிக்கொள்வது என்பதும் புரியவில்லை.
சமூக அமைப்பு நம் பிரக்ஞையில் உள்ள பல விஷயங்களை ஏற்றுக்கொள்வதில்லை. வளரும் பருவத்தில் அவை வெளியே வர விடாமல் உள்ளே அழுத்திவிடுகிறது. அவற்றை விடுத்த பொய்யான, அரைகுறையான ஆளுமையைத்தான் சமூக அமைப்பு போற்றுகிறது. ‘யாரோடும் சண்டை போடாமல், அமைதியாக இருப்பதுதான் என் இயல்பு’ என்று இப்போது நீங்கள் சொல்வது அதன் விளைவுதான். இது உண்மையில் உங்கள் இயல்பு அல்ல. உங்கள் உண்மையான இயல்பு, கோபம், பயம், துயரம் அனைத்தையும் உள்ளடக்கியதுதான்.
இந்தப் பொய்யான மனப்பாங்கை நிலைநிறுத்துவதற்காக நீங்கள் உள்ளே அழுத்திவைத்திருக்கும் கோபம்தான் பல நேரங்களில் உங்களை மீறி வெளிவந்துவிடுகிறது. போலியான ஒரு மன அமைப்பை நீங்கள் மேற்கொண்டிருக்கிறீர்கள். எல்லா உணர்ச்சிகளுக்கும் வாழ்க்கையில் அவற்றுக்கான இடம் உண்டு. அதை மறுப்பது புத்திசாலித்தனம் அல்ல. ‘கோபமே படாதவர்’ என்ற பொய்யான, போலியான முகமூடி வேண்டாம். அழுத்திவைக்கப்பட்ட கோபம் வெளிவரும்போது அதிக வேகத்துடன் வெளிப்படும்.
இயல்பான கோபம் இவ்வளவு வேகமாக வெளிப்படாது. உங்களை நீங்கள் காப்பாற்றிக்கொள்ளக் கோபமும் அவசியம்தான். உங்களை உள்ளபடி ஏற்றுக்கொள்ளுங்கள். மனத்தில் இசைவும் சந்தோஷமும் குடிகொள்ளும்.
நான் ஒரு கல்லூரி மாணவி. எனது பக்கத்து வீட்டில் இருப்பவரும் நானும் சிறுவயது முதல் அண்ணன், தங்கையாக பழகிக் கொண்டிருந்தோம். அவர் எனது வீட்டுக்கு வருவதுண்டு. நானும் அவரது வீட்டுக்குப் போவதுண்டு. தற்போது சில மாதங்களாக அவர் என்னிடம் பேசுவதே சரியில்லை. அவர் என்னிடம் உன்னைக் காதலிக்கிறேன் என்றெல்லாம் சொல்லவில்லை. ஆனால் ஒரு தங்கை என நினைத்து அவர் என்னிடம் பேசவில்லை என்பது புரிகிறது. அவரது வீட்டுக்குச் செல்லக்கூடத் தயக்கமாக இருக்கிறது. அவர் மிகவும் நல்லவர். எனது நண்பர்களும், பெற்றோரும் கூட அவர் மீது நல்ல நம்பிக்கையும், மரியாதையும் கொண்டுள்ளார்கள்.
இதனால் சமீபத்தில் அவர் நடவடிக்கையில் இருக்கும் மாற்றத்தைப் பற்றி என் பெற்றோர், நண்பர்களிடம்கூட வெளிப்படுத்த முடியவில்லை. அவருக்கும் எனக்கும் 12 வருட வயது வித்தியாசம் இருக்கிறது. என்னதான் நல்லவராக இருந்தாலும் அவருக்கும் எனக்கும் உள்ள வயது வித்தியாசம் மிகப் பெரியது அல்லவா? ஒருவேளை நானும் அவரும் காதலித்தால் சிறு வயதிலிருந்தே காதலிக்கிறோம் என்று அனைவரும் தப்பாகப் பேசுவார்கள். அவர் வேறு சாதி என்பதால் என் வீட்டிலும் சம்மதிக்க மாட்டார்கள். மிகவும் தெரிந்தவர் என்பதால் அவரை எப்படிச் சமாளிப்பது என்றே எனக்கு தெரியவில்லை. இது சாத்தியமா, சாத்தியமில்லையா என்றும் புரியவில்லை.
உண்மையில் ‘நல்லவன் – கெட்டவன்’ என்றெல்லாம் எதுவும் கிடையாது. உணர்வுகளும் உணர்ச்சிகளும் கூத்தாடும் மேடைதான் மனித மனம். ‘அண்ணன் – தங்கை’யாகப் பழகுவது என்பதெல்லாம் அச்சத்தின் காரணமாக சமூக உறவுகளில் ஏற்படுத்திவைக்கப்பட்டிருக்கும் பொய்யான விஷயங்கள். அப்படி ஏதும் கிடையாது. உணர்ச்சிகள் மாறும்போது உறவுகள் மாறும். பார்க்கும் பார்வை மாறிப் போகும். நீங்கள் மிகவும் அப்பாவியாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.
உங்களை நீங்கள் காப்பாற்றிக்கொள்வது மிகவும் அவசியம். அந்த நபரிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றம் உங்களுக்குப் பிடிக்கிறதா பிடிக்கவில்லையா என்பது முக்கியம். பிடிக்கவில்லை என்றால் அவரிடம் உங்கள் எண்ணங்களை நேரடியாகச் சொல்வதற்குச் சற்றும் தயங்க வேண்டாம். ‘உங்களிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றம் எனக்குப் பிடிக்கவில்லை,’ என்று சொல்லிவிட்டு உடனடியாக அவரிடமிருந்து விலகிவிடுங்கள். பயப்படாதீர்கள். ஏமாந்து போய்விடாதீர்கள். விழித்துக்கொள்ளுங்கள். அஞ்சாமல் வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள்.
உளவியல் ஆலோசகர் ஆனந்த் கிருஷ்ணாவுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002. மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in