ஹலோ அங்கிள், ஹலோ ஆண்ட்டி
இந்தியாவைப் பொறுத்தவரை வயதில் பெரியவர்களுக்கு மரியாதை அளிப்பது சம்பிரதாயமாகவே கடைப்பிடிக்கப்படுகிறது. ராமாயண காலத்திலிருந்து வயதில் மூத்தவர்களைப் பார்த்தவுடன் காலைத் தொட்டு வணங்குதல் இருந்துள்ளது. ஆனால் தற்போதெல்லாம் பெரியவர்களை மதிக்க சுருக்கமான இரு விளிப்புகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். வயதில் மூத்த ஆண்களை ‘அங்கிள்’ என்றும் பெண்களை ‘ஆண்ட்டி’ என்றும் கூப்பிட்டால் போதும்.
நான் 24 வயதிலேயே திருமணமானவன். நாங்கள் தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள மூன்று வயதுப் பெண் குழந்தை தான் என்னை முதலில் ‘அங்கிள்’ என்று அழைத்துப் புதிய நாமகரணம் சூட்டினாள். என் இளம் மனைவியையும் அவள்தான் முதலில் ‘ஆண்ட்டி’ஆக்கினாள். ஒரு சிறு குழந்தையால் அப்படி அழைக்கப்படுவதை நாங்களும் பிரியமாக உணர்ந்தோம்.
அந்தச் சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் அபார்ட்மெண்ட் படிக்கட்டில் நாங்கள் இறங்கிக்கொண்டிருக்கும்போது வழியில் ஒருவன் வந்தான். எங்களுக்கு வழிவிட்டபடி,
“ ஹலோ அங்கிள், ஹலோ ஆண்ட்டி” என்றான். நான் திடுக்கிட்டுப்போய் அவனைக் கூர்ந்து பார்த்தேன். அவனது அடர்ந்த தாடி என்னைவிட வயதானவனாகக் காட்டியது. அவன் தான் ‘அங்கிள்’ என்று கூப்பிட்டான். திருமணம் செய்ததைத் தவிர வேறு எந்தத் தவறையும் நான் செய்யவில்லையே?
நான் அவனைப் பார்த்தபடி என் பெயரைச் சொல்லிக் கைகுலுக்கினேன். அவனது புன்னகை நட்பார்த்தமாக இருந்தது. தனது தவறை உணர்ந்துகொண்டான் என்று நினைத்தேன். ஆனால் அவனோ, “ஐ ஆம் டேவிட், அங்கிள்” என்றான். பி.காம். முடித்து வேலை தேடிக்கொண்டிருப்பதாகவும் சொன்னான். நான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் பொறியியல் பயிற்சியாளனாக இருக்கிறேன் என்று கூறினேன். இதன் உள்ளடக்கமாக நானும் வயது குறைந்தவன் தான் என்பதை டேவிட்டிடம் விளக்கினேன். ஆனால் அவன் என்னை ‘அங்கிள்’என்று விளிப்பதை விடவேயில்லை.
ஒரு கட்டத்தில் நானும் என் மனைவியும் அங்கிள் மற்றும் ஆண்ட்டி என்று எங்களைவிட வயது குறைந்தவர்கள் அழைப்பதை ஏற்றுக்கொள்ளப் பழகிக்கொண்டோம். தனியாக வீட்டிலிருக்கும்போது எங்கள் சங்கடத்தைச் சிரித்தபடி பகிர்ந்துகொள்வோம்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு இன்னொரு குடியிருப்பில், இன்னொரு நகரத்தில் அதே படிக்கட்டில் இன்னொரு வாலிபனைச் சந்தித்தோம். ஆறு அடி ஐந்து அங்குலத்தில் ஆஜானுபாகுவாக இருந்த அவன், படிக்கட்டில் எங்கள் மீது மோதியே விட்டான். படிக்கட்டு இருட்டாக இருந்திருந்தால் நான் அவன் கேட்காமலேயே எனது பர்சைக் கொடுத்திருப்பேன். ஆனால் அவனோ என் மனைவியைப் பார்த்து ‘ஹலோ அக்கா’ என்றான். நானும் சமாளித்தபடி அவனைப் பார்த்துச் சிரித்தேன். அவனது உருவத்தைப் பார்த்து பயந்திருந்த நான், அவனைப் பற்றிய எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்.
அவ்வளவு அருமையான அவன், என் மனைவியைப் பார்த்து, “இது உங்கள் கணவரா” என்று கேட்டான். என் மனைவி அதை ஆமோதிக்க என்னைப் பார்த்து, “ஹலோ அங்கிள்…ஸோ நைஸ் டு மீட் யு அட் லாஸ்ட்” என்றபடி கைகொடுத்தான்.
அவன் எங்களைக் கடந்துபோன பிறகு, என் மனைவியைப் பார்த்து, “ அவனைப் பார்த்தால் வில்லன் போல இருக்கிறான்” என்றேன்.
அப்படியெல்லாம் இல்லை என்று மறுத்து, அவன் ஸ்வீட்டான பையன்! அப்பாவி! என்றாள்.
