

“சா
ர், ரொம்ப அவசரம், உடனே ரத்தம் தேவை. ஜிப்மர் மருத்துவமனைக்கு யாரையாவது அனுப்பி வைக்க முடியுமா” - புதுச்சேரி யைச் சேர்ந்த பிரபுவுக்கு இப்படிப்பட்ட மொபைல் அழைப்புகள் தினந்தோறும் வரும். தன் வாழ்க்கைப் பயணத்தை ஓட்ட மெக்கானிக்காகப் பணியாற்றிக்கொண்டு, இடைப்பட்ட நேரங்களில் ஆபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுவதற்காக ‘உயிர்த்துளி ரத்ததான தகவல் மையம்’ ஒன்றை இலவசமாக நடத்தி வருகிறார் இந்த இளைஞர்.
புதுச்சேரி நெல்லித்தோப்பில் இருசக்கர வாகனப் பழுது நீக்கும் கடை வைத்திருக்கிறார் பிரபு. 33 வயதான இவர், பத்தாவதுவரை மட்டுமே படித்திருக்கிறார். ரத்தம் தேவை என வருவோருக்கு உதவுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். இதற்காகவே ரத்த தான தகவல் தொடர்பு மையத்தையும் புதுச்சேரியில் நடத்திவருகிறார். ரத்தம் தேவைப்படுவோருக்கு உதவி பலரது உயிரைக் காப்பாற்றியிருக்கிறது இந்த அமைப்பு.
சமூக வலைத்தளங்களில் பல குழுக்களை ஏற்படுத்தி மிகத் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது இந்த அமைப்பு. எந்த ஒரு செயலுக்கும் ஒரு பின்னணி இருக்கும். அதுபோலவே இந்த உயிர்த் துளி அமைப்பு தொடங்கப்பட்டதிலும் ஒரு பின்னணி உள்ளது.
“1999-ல் பத்தாவது படிக்கும்போது தேர்வில் தோல்வியடைந்தேன். என்னை நன்றாகப் படிக்கவைக்க பெற்றோர்கள் ஆசைப்பட்டார்கள். ஆனால், படிப்பு வரவில்லை. அதனால் 17 வயதிலேயே வேலைக்குப் போகத் தொடங்கினேன். இருசக்கர பழுது நீக்கும் வேலையைக் கற்று மெக்கானிக் கடை ஒன்றை அமைத்தேன். பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நண்பர்களோடு சேர்ந்து ரத்த தானம் செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தேன்.
ஒரு முறை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு பத்து யூனிட் ரத்தம் அவசரமாகத் தேவைப்பட்டது. ஆனால், 4 யூனிட்தான் தர முடிந்தது. ரத்தம் கிடைக்காததால் அவர் இறந்தது பிறகுதான் தெரிய வந்தது. அந்த விஷயம் என் மனதில் ஆறாத வடுவாகப் பதிந்தது. ரத்த தானம் தொடர்பாக ஏதாவது நல்ல விஷயம் செய்யலாமே என்ற எண்ணம் தோன்றியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் ‘உயிர்த்துளி’ என்கிற அமைப்பை நண்பர்களோடு சேர்ந்து உருவாக்கினேன்” என்று அமைப்பு உருவாகக் காரணமாக இருந்த சம்பவத்தை நினைவுகூர்கிறார் பிரபு.
தற்போது இந்த அமைப்பு, வாட்ஸ் அப் மூலமாக ரத்தம் தேவைப்படுவோர் விவரத்தைத் தொடர்ந்து பகிர்ந்துவருகிறது. இதற்காக வாட்ஸ் அப் குழுக்களும் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது இதற்காக 115 குழுக்கள் வாட்ஸ் அப்பில் இயங்கிவருகின்றன. ஆயிரக்கணக்கானோர் இந்த அமைப்பில் உறுப்பினராகச் சேர்ந்துள்ளனர். இந்த அமைப்பின் மூலம் இதுவரை சுமார் 3,000 யூனிட் ரத்தம் தானமாகத் தேவைப்படுவோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
“எங்கள் அமைப்பின் மூலம் தொடர்ந்து ரத்ததானம் தரும் பணியில் 1,500 பேர் ஈடுபடுகிறார்கள். நடுவில் சில இடைத்தரகர்கள் எங்களைப் பயன்படுத்தி நோயாளிகளிடம் பணம் பெறுவது தெரிந்தது. அதையெல்லாம் முழுமையாகத் தடுத்துவிட்டோம். தற்போது புதுச்சேரியில் ஜிப்மர், அரசு பொதுமருத்துவமனை, மருத்துவக் கல்லூரி, அரசுக் குழந்தைகள் மருத்துவமனை எனப் பலவற்றுக்கும் புதுச்சேரி, வெளியூரில் இருந்து சிகிச்சைக்காக ஏழைகள் வருகிறார்கள்.
யாருக்கேனும் ரத்தம் தேவைப்பட்டால் 86955 66777 செல்போனில் அழைத்துத் தகவல் கூறலாம். நோயாளி தரப்பில் பணம் தராதீர்கள் -இலவச சேவை என்பதையும் அறிவுறுத்தி வருகிறோம். நோயாளிகளின் தேவைக்கு உதவுவதே எங்கள் விருப்பம். ஏனென்றால், நாங்கள் இவ்விஷயத்தை மனதிருப்திக்காவே செய்கிறோம்” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார் பிரபு.