

இ
ன்றைய சென்னை மாநகரம், ஒரு பன்முகக் கலாச்சார மையமாகத் திகழ்கிறது. ஒரு நகரத்துக்கு இந்தப் பன்முகக் கலாச்சாரக் கூறுகளை வழங்குபவர்களாக எப்போதுமே அந்த நகரத்தின் சாதாரண மக்கள் இருந்திருக்கிறார்கள். சென்னை மாநகரம், தனது 378-வது பிறந்தநாளைக் கொண்டாடும் இந்த நேரத்தில், இந்நகரில் வாழ்ந்த மக்களையும் அவர்களது வாழ்க்கை முறையையும் திரும்பிப் பார்க்கும் வகையில் ஓர் ஒளிப்படக் காட்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது தக்ஷின் சித்ரா.
‘பழைய மெட்ராஸின் பழங்கால ஒளிப்படங்கள்: 1800-களின் மக்களும் கலாச்சாரமும்’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தக் கண்காட்சியை, தக்ஷின் சித்ரா கலை அருங்காட்சியகத்தின் காப்பாளர் கீதா ஹட்சன் ஒருங்கிணைத்திருக்கிறார்.
“இந்த ஆண்டு ‘மெட்ராஸ் தினக் கொண்டாட்டத்தை மக்கள் சார்ந்து வடிவமைக்க வேண்டும் என்று நினைத்தோம். அதனால், மூன்று நூற்றாண்டுகளுக்குமுன் இந்நகர மக்களின் வாழ்க்கையைப் பதிவுசெய்யும்படி இந்க் கண்காட்சியை அமைத்திருக்கிறோம். பழங்கால மெட்ராஸ் பற்றி இதுவரை வெளிவராத தனித்துவமான இருபது ஒளிப்படங்கள் இந்தக் கண்காட்சியில் வைத்திருக்கிறோம்.
அந்தக் காலக்கட்டத்தின் பள்ளி மாணவர்கள், வண்டிக்காரர்கள், குயவர்கள், பொற்கொல்லர்கள், கொத்தவால் சாவடி சந்தை விற்பனையாளர்கள் போன்ற பலதரப்பு மக்களையும் இந்தக் கண்காட்சியில் பார்க்க முடியும்” என்கிறார் கீதா ஹட்சன். இந்தக் கண்காட்சி சென்னை தக்ஷின்சித்ராவில் ஆகஸ்ட் 19-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது.