Last Updated : 25 Aug, 2017 11:29 AM

Published : 25 Aug 2017 11:29 AM
Last Updated : 25 Aug 2017 11:29 AM

கிராஃபிக் நாவல்: தர்ம யுத்தத்துக்கு நீங்கள் தயாரா?

பூவுலகின் தோற்றம், ராமனின் கதை நடக்கும் இரண்டாவது யுகம், அதற்குப் பிறகான மூன்றாவது யுகத்தில் நடக்கப்போகும் மாபெரும் யுத்தம்தான் மனித குலத்தின் அடுத்த கட்டத்தையே நிர்ணயிக்கக்கூடியதாக மாறுகிறது. அந்த மாபெரும் யுத்தத்தில் பாண்டவர்கள் தோற்றுவிட்டால், உண்மை தோற்று, காலச்சக்கரம் தனது சுழற்சியை நிறுத்திவிடும். அந்த தர்ம யுத்தத்துக்கு நீங்கள் தயாரா என்ற கேள்விக்குப் பதில் சொல்ல ஆரம்பிக்கிறார் பீமன்.

அதன் பிறகு, “தர்ம யுத்தத்துக்கு நீங்கள் தயாரா?” என்று கேள்வி மீண்டும் கேட்கப்படுகிறது. இம்முறை அர்ஜுனனிடம் யுதிஷ்டிரன் இந்தக் கேள்வியைக் கேட்கிறார். இது யுத்தத்தின் முதல் நாள். இப்படி இந்த கிராஃபிக் நாவலின் கதை கட்டத்துக்குக் கட்டம், காட்சிக்குக் காட்சி மாறிமாறிச் சொல்லப்படுகிறது.

காமிக்ஸ் சூப்பர்ஸ்டார்

உலக அளவில் ‘காமிக்ஸ் சூப்பர் ஸ்டார்’ என்று பெயரெடுத்தவர் மோரிஸன். தனக்கென்று ஒரு புதுமையான கதை சொல்லும் பாணியை உருவாக்கி, அனைத்துக் கதைகளையும் அதே பாணியில் சொல்லி, ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர். அவர் மகாபாரதத்தை கிராஃபிக் நாவல் பாணியில் சொல்கிறார் என்றதும் உலக அளவில் எதிர்பார்ப்பு உருவானது.

அமெரிக்கா மட்டுமல்லாமல் பல உலக நாடுகளில் மகாபாரதம் அறியப்பட்ட ஒரு கதை. ஆனால், இந்தத் தலைமுறைக்கு அந்தக் கதையை ஸ்டைலாக மாற்றிச் சொல்ல மோரிஸன் விரும்பினார். அதனால் அந்தக் கால ரதங்களை விமானம் போன்ற பறக்கும் இயந்திரங்களாகவும், வீரர்களின் ஆயுதங்களை நவீன போர்க்கருவிகளாகவும் மாற்றியிருக்கிறார். குறிப்பாக, அர்ஜுனனின் வில், பீமனின் ‘கதை’ போன்றவற்றை நவீன வடிவில் அவர் மாற்றியிருக்கும் விதம் ரசிக்க வைக்கிறது. அதைப் போலவே, உலக அளவிலான கிராஃபிக் நாவல் ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்டது என்பதால், அமெரிக்காவில் ஒவ்வொரு புத்தகமும் ஒரு டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது.

தனித்தனி திரைப்படம்

பிரபலமான சான் டியாகோ காமிக்-கானில் கிராஃபிக் இந்தியாவின் ஷரத் தேவராஜன் இந்தத் தொடரை அறிமுகம் செய்து வெளியிட்டார். அதன் பிறகு யூடியூப், கான்செப்ட் ஆர்ட் புத்தகம் என்று அதிரடியாகப் பல வகைகளில் இந்தப் புத்தகம் பிரபலமானது. முதல் புத்தகம் வெளியாகும் முன்பு, இந்தியாவின் தலைசிறந்த காமிக்ஸ் ஓவியரான முகேஷ் சிங்கைக்கொண்டு ஒரு பெரிய ஓவியப் புத்தகம் வெளியிடப்பட்டது. மகாபாரதத் தொடர் பற்றிய அறிமுகம் இல்லாதவர்களுக்காகவே இந்தப் புத்தகம் வடிவமைக்கப்பட்டது. இந்த ஓவியப் புத்தகத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் முழுவதுமாக வரையப்பட்டு, சிறப்பாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

மொத்தம் 26 பாகங்களில், ஓவியங்களை வைத்து முன்னெடுத்துச் செல்லப்படும் இத்தொடரில், கதை சொல்லும் பாணிதான் மிகவும் முக்கியமானது. மகாபாரதம் பற்றிய அறிமுகம் இல்லாத இந்தத் தலைமுறையினருக்குச் சொல்லப்படும் கதையென்பதால், சுவாரசியமாகச் சொல்லப்பட வேண்டும். அதைக் கருத்தில்கொண்டு, ஒரு அட்டகாசமான திரைப்படம்போல கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார், மோரிஸன். யுத்தத்தின் முதல் நாளில் இருந்துதான் கதை தொடங்குகிறது என்பதால், முன்கதை சொல்லப்பட வேண்டுமல்லவா? தேவையான இடங்களில், சண்டைக்கு இடையே ஃபிளாஷ்பேக் மூலமாக அவற்றை நுழைத்து, விறுவிறுப்பாக எழுதியிருக்கிறார்.

சினிமாஸ்கோப் ஓவியம்

வழக்கமான காமிக்ஸ்-கிராஃபிக் நாவல்களைப் போலில்லாமல், இந்தத் தொடருக்கான ஓவியங்கள் அனைத்துமே சினிமாஸ்கோப் பாணியில் வரையப்பட்டிருக்கின்றன. அதைப் போலவே, சில ஓவியங்கள் இரண்டு பக்கங்களிலும், ஏகப்பட்ட ஓவியங்கள் குளோஸ்-அப்பிலும் வரையப்பட்டிருக்கின்றன. கதைக்களமோ புராதன, ராஜா ராணி காலம், ஆயுதங்கள் நவீன சயின்ஸ் ஃபிக்ஷன் பாணியில் அமைந்து ஒரு அட்டகாசமான கலவையாக இந்த கிராஃபிக் நாவல் அமைக்கப்பட்டுள்ளது. முழுக்க, முழுக்க ஓவியங்களைக் கொண்டே நகர்த்தப்படும் இந்தக் கதையில், தேவைப்படும் இடங்களில் மட்டுமே வசனங்கள் உள்ளன. அவையும் சுருக்கமாகவும் தெளிவாகவும் தரப்பட்டுள்ளன.

காமிக்ஸ்-கிராஃபிக் நாவல்கள் படிக்கும் இளைய தலைமுறை முதற்கொண்டு, ஏற்கெனவே மகாபாரதத்தைப் படித்த மூத்த தலைமுறையினருக்கும் ஏற்ற வகையில் இந்த கிராஃபிக் நாவல் அமைக்கப்பட்டிருக்கிறது. மகாபாரதம் குறித்த நம்முடைய இளைய தலைமுறையினருக்கான எளிய அறிமுகமாக இந்த கிராஃபிக் நாவல் தொடர் அமைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.

தலைப்பு:

18 நாட்கள்

கதாசிரியர்:

கிராண்ட் மோரிஸன்

ஓவியர்(கள்):

ஜீவன் காங் மற்றும் பலர்

வெளியீடு:

2015 முதல் இதுவரை மொத்தம் 21 புத்தகங்கள் வந்துள்ளன

பதிப்பாளர்:

கிராஃபிக் இந்தியா

கதைக்கரு:

மகாபாரதத்தின் 18 நாள் யுத்தம் ஆரம்பிக்கும்போதுதான் இந்த கிராஃபிக் நாவலும் தொடங்குகிறது. அதன்பின், ஒவ்வொரு சம்பவமும் அது தொடர்பான ஃபிளாஷ்பேக்குடன் ஒரு த்ரில்லர்போல் சொல்லப்பட்டிருக்கிறது.

கதை வரிசை:

ஒவ்வொரு புத்தகமும் மகாபாரதத்தின் தனிப்பட்ட ஒரு நிகழ்வாக இருந்தாலும், இதுவரை மொத்தம் 21 புத்தகங்கள் வந்துள்ளன.

கிராண்ட் மோரிஸன் (கதாசிரியர்)

ஸ்காட்லாந்தில் பிறந்து வளர்ந்தவரான மோரிஸன், 17 வயதிலேயே காமிக்ஸ் கதைகளை எழுதியவர். இவரது வித்தியாசமான, அதேநேரம் சர்ச்சைக்குரிய கதைகளைக் கண்டு அமெரிக்காவின் மார்வெல் காமிக்ஸ், டி.சி. காமிக்ஸ் நிறுவனங்கள் இவருடைய கதைகளைப் போட்டி போட்டுக்கொண்டு பிரசுரிக்க ஆரம்பித்தன. பேட்மேன், ஸ்பைடர்மேன், டாக்டர் ஹூ, சூப்பர்மேன் என்று இவர் எழுதாத கதை வரிசைகளே இல்லை. ஏதாவது ஒரு சூப்பர் ஹீரோவின் காமிக்ஸ் தொடர் விற்பனையில் மந்தமாக இருந்தால், உடனே அந்தத் தொடரைச் சீராக்கும் பொறுப்பு மோரிஸனிடம் ஒப்படைக்கப்படும். உலகின் தலைசிறந்த காமிக்ஸ் படைப்பாளி தொடர்பான வாக்கெடுப்பில் இவர் இரண்டாவது இடம்பிடித்தார்.

ஜீவன் ஜே. காங் (ஓவியர்)

சிறுவயது முதலே காமிக்ஸ் கதைகளைப் படித்து வளர்ந்த ஜீவன், ஓர் ஓவியராக உருவான பிறகு பல சர்வதேச காமிக்ஸ் தொடர்களுக்கு வரைந்துவருகிறார். மார்வெல் காமிக்ஸ், ஸ்பைடர்மேன் காமிக்ஸ் தொடரை இந்தியாவில் உருவாக்க ஒப்புக்கொண்டபோது, இவர்தான் காமிக்ஸ் தொடரை வரைந்தார். பெங்களூருவில் வசிக்கிறார்.

கட்டுரையாளர், காமிக்ஸ் ஆர்வலர்

தொடர்புக்கு: TamilComicsUlagam@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x