

‘உ
லகின் சிறந்த பிரதமராக நரேந்திர மோடியைத் தேர்வுசெய்துள்ளது யுனெஸ்கோ’, ‘ஜன கன மன உலகின் மிக உயரிய தேசிய கீதம் என அறிவிக்கப்பட்டுள்ளது’, ‘2000 ரூபாய் நோட்டுதான் உலகின் தலைசிறந்த கரன்சி’ என்பது போன்ற தகவல்கள் வாட்ஸ் அப்பில் வலம்வருவதை அடிக்கடி பார்த்திருப்பீர்கள். அவ்வளவு ஏன், ‘குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் இணைந்த 1 மணி நேரத்துக்குள்ளாக அவருக்கு 30 லட்சம் ஃபாலோயர்ஸ் கிடைத்துவிட்டார்கள்’ என்று இரு வாரங்களுக்கு முன்புகூடப் பல பிரபல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. “இதெல்லாம் உண்மையா, பொய்யான்னு தெரியலையே!” என நாம் முணுமுணுத்துக்கொண்டிருக்கும்போதே பிரத்திக் சின்ஹா அதைக் கண்டறிய இணையக் கடலில் குதிக்கிறார். செய்தி வெளியான சில மணி நேரத்திலேயே இவையாவும் போலி செய்திகள் என அவற்றின் முகத்திரையைக் கிழித்துக்காட்டுகிறார்.
வதந்திகளைப் பரப்புவதும் நம்புவதும் நமக்குப் புதிதல்ல. ஆனால், நொடிப்பொழுதில் புரளிகளை உலகம் முழுவதும் பரப்பும் புதிய ‘கலாச்சாரம்’ சமூக ஊடகங்கள் மூலமாக நம் கண்முன்னே அரங்கேறுகிறது. ‘போலி செய்திகள்’ என்கிற பிரச்சினை இன்று உலக அரங்கிலேயே மிகப் பெரிய விவாதப் பொருளாகி உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ‘போலி செய்திகளுக்கு வலுவான எதிர்வினை: சட்டம், தொழில்நுட்பம் மற்றும் சமூக நிகழ்வுகளை இணைக்கும் புள்ளியில்’ என்கிற தலைப்பில் ஒரு கருத்தரங்கமே நடத்தப்பட்டது.
“புரளிக்குப் போய் இவ்வளவு பில்டப்பா?” என நீங்கள் யோசிப்பது புரிகிறது. ஏதோ அரசல்புரசலாகக் கேள்விப்பட்டதை எல்லாம் பரப்புவது அல்ல போலி செய்தி. உண்மைக்குப் புறம்பானது என்று தெரிந்தே ஒரு தகவலை உருவாக்கிப் பரப்புவதைத்தான் ‘ஃபேக் நியூஸ்’ அல்லது போலி செய்தி என்கிறோம்.
கடவுள் சிலை கண் இமைத்தது, பிள்ளையார் சிலை பால் குடித்தது என்பது போன்ற மூடநம்பிக்கைகள் சமூகத்தில் பரப்பப்படுவதற்கும் இதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் தேர்வாக முக்கியக் காரணம் தேர்தலுக்கு முன்னதாக அவரைத் தூக்கிப்பிடித்து, போலியாக வாட்ஸ் அப், ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பரப்பப்பட்ட மீம்ஸுகளும் போலி செய்திகளும்தான் என்றால் நம்ப முடிகிறதா? அமெரிக்க அதிபர் மட்டுமல்ல, இந்தியப் பிரதமரும் அந்தப் பாணியில்தான் மக்கள் மனதில் இடம்பிடித்தார் என நிரூபித்துக்காட்டுகிறார் பிரத்திக் சின்ஹா.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இருந்துகொண்டே அதிகாரத்துக்குச் சவால்விடும் விதமாக ‘ஆல்ட்நியூஸ்’ (AltNews) என்னும் வலைத்தளத்தைக் கடந்த பிப்ரவரியில் தொடங்கினார் பிரத்திக் சின்ஹா.
வாட்ஸ் அப்பில் வந்து குதிக்கும் செய்தி உண்மையா பொய்யா என்பதைக் கண்டுபிடிப்பதோடு மட்டும் இவர் நின்றுவிடவில்லை. போலி செய்திகளின் ஊற்றையும் கண்டுபிடித்துவிடுகிறார். உதாரணமாக, பீகாரில் நவாடா பகுதியில் மத சாயத்தோடு உருவாக்கப்பட்ட மோசமான வீடியோ வாட்ஸ் அப்பில் பரவலானது நினைவிருக்கிறதா? அதைப் பார்த்த பலரும் வெகுண்டெழுந்திருக்கக்கூடும். ஆனால், பிரத்திக் அதன் பின்னால் ஒளிந்திருக்கும் உண்மையை இணையத்தில் தேட ஆரம்பித்தார். அந்த வீடியோ காட்சியில் இடம்பெற்ற சில சொற்களைத் தன்னுடைய நண்பரின் உதவியோடு வங்காள மொழியில் மொழிபெயர்த்தார். அந்தச் சொற்களைக் கொண்டு வங்கதேச இணையதளங்களைத் துழாவியபோது சில செய்தி துணுக்குகள் தென்பட்டன. அதன் பிறகுதான் தெரிந்தது, எங்கோ நடந்த இந்தச் சம்பவம் பீகாரில் நடந்ததுபோல ஜோடிக்கப்பட்டு மக்களிடையே பரப்பப்பட்டது என்பது. இதுபோன்ற பொய்யான செய்திகளைத் தயாரித்துப் பரப்புவதற்காகவே தொடங்கப்பட்டிருக்கும் இணையதளங்களையும் வெளிப்படுத்தியிருக்கிறார் பிரத்திக் சின்ஹா.
சாஃப்ட்வேர் இன்ஜினீயராக இத்தனைகாலம் வேலையைப் பார்த்தவர். தற்போது ராஜினாமா செய்துவிட்டுச் சமூக ஊடகங்கள், வெகுஜன செய்தி ஊடகங்களின் போலித்தனத்தைப் போட்டுடைக்கும் துணிகரமான செயலில் இறங்கிவிட்டார். இவர் சின்ஹா (Sinha), அன்அஃபீஷியல் சுப்பிரமணியன் சுவாமி (Unofficial Subramanian Swamy), சாம் ஜாவெத் (Sam Jawed) போன்ற பெயர்களில் இணையத்தில் இயங்கிவருகிறார். சரி, போலி செய்திகளை எப்படி இவர் அடையாளம் காண்கிறார்?
தகவல், ஒளிப்படங்கள் மட்டுமல்லாமல் வீடியோ காட்சிகளுக்குப் பின்னால் உள்ள மர்ம முடிச்சுகளையும் ஒவ்வொரு ஃபிரேமாகப் பிரித்தெடுத்து அவற்றின் ஆதாரத் தகவல்களைத் தேடி எடுக்கிறார் சின்ஹா. அகமதாபாத்தில் தன்னுடைய வீட்டில் இருந்தபடியேதான் இத்தனையையும் செய்கிறார். இத்தனைக்கும் 16 ஜிகாபைட்ஸ் ராம் திறன் கொண்ட லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டமில் வேலைபார்க்கும் ஒரு லேப்டாப் மட்டுமே வைத்திருக்கிறார் இவர்!
சொல்லப்போனால் போலி செய்திகளை அம்பலப்படுத்தும் மூவர் கொண்ட குழு இது. ஆனால், பிரத்திக் சின்ஹா தவிர மற்ற இருவரும் தங்களுடைய அடையாளத்தை வெளிக்காட்ட விரும்பவில்லை. இன்னமும் அவர்கள் பகல் நேரத்தில் வேலைக்குப் போகிறார்கள். இரவில் பிரத்திக்குடன் இணைய களமாடுகிறார்கள். கூடியவிரைவில் ஆல்ட்நீயூஸைப் பெரிய நிறுவனமாகக் கட்டமைக்கத் திட்டமிட்டுவருகிறார்கள்.
ஆட்சியாளர்களை விமர்சிக்க குஜராத்திலிருந்தே அதிகார மையத்துக்கு எதிரான ஒரு குரல் ஒலிக்கத் தொடங்கி உள்ளது. மக்களை நசுக்கும் அத்துமீறலை எதிர்த்து வீதியில் இறங்கிப் போராடும் உத்தி அல்ல இவருடையது. போலித்தனமாக உலகைக் கட்டமைக்கும் முயற்சிகளை முறியடிக்கும் மாற்று முயற்சி. அதிலும் போலிகளின் முகத்திரையைக் கிழிப்பதோடு நின்றுவிடவில்லை பிரத்திக். அவை சமூகத்தில் ஏற்படுத்தும் அபாயகரமான விளைவுகளைக் களையும் முனைப்புடன் துணிச்சலாகச் செயல்பட்டுவருகிறார். இதனால் அதிகாரம் படைத்தவர்களின் கடுமையான மிரட்டலுக்கும் பகைக்கும் ஆளாகியிருக்கிறார். அதற்கெல்லாம் அசராமல் தொடர்ந்து சமூக நலன் காக்கக் குரல்கொடுக்கும் இந்த இணைய சாமுராயை நாமும் வாழ்த்துவோம்!