

பெ
ரு நகரங்களில் பீட்சா கடைகள் மழைக்கால காளான்கள்போல முளைத்துக்கொண்டே இருக்கின்றன. இதனால் ஏற்படும் போட்டியின் காரணமாக இப்போதெல்லாம் வாடிக்கையாளர்கள் கடைக்கு நேரடியாக வர வேண்டும் என்ற அவசியம் இல்லை. போன் மூலம் ஆர்டர் செய்தால் போதும், வீட்டுக்கே வந்து அந்தக் கடையின் பணியாளர் பீட்சாவை டெலிவரி செய்துவிட்டு போய்விடுவார். தற்போது அந்த வேலையை ஆளில்லா ‘ட்ரோன்’ விமானம் மூலம் செய்ய பெரிய உணவு பொருட்கள் விற்பனையகங்கள் முயன்றுவருகின்றன.
பெரு நகரங்களில் வழக்கத்தைவிடப் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். பீட்சாவை டெலிவரி செய்வதற்காக இரு சக்கர வாகனத்தில் வரும்போது நேரம் அதிகரிக்கும். விரைவாக டெலிவரி செய்வதில் பிரச்சினை ஏற்படும். இதைத் தவிர்க்க உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் செயல்பட்டு வரும் ‘காகா’எனும் ஆன்லைன் உணவுப் பொருட்கள் விற்பனையகம் புதிய வழியைக் கண்டுபிடித்திருக்கிறது. பீட்சாக்களை ‘ட்ரோன்’ மூலம் டெலிவரி செய்யும் முறையை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
‘ட்ரோன்’ மூலம் டெலிவரி செய்யும்போது, இருசக்கர வாகனத்தில் செல்லும் நேரம் மிச்சமாகிறது. ‘டெலிவரி பாய்’கள் செல்லும் நேரத்தில் மூன்றில் ஒரு பங்கு நேரம் மிச்சமாகிறது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. டெலிவரிக்காக அதிகமானவர்களை வேலைக்கு வைத்துக்கொள்வதால் எழும் சம்பளச் சுமையும் குறைகிறது எனவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. தற்போது பரிசோதனை முறையில் ட்ரோன் மூலம் பீட்சா டெலிவரியை அந்த நிறுவனம் செய்து முடித்துவிட்டது.
இந்தப் பரிசோதனை வெற்றிபெற்றதால், உணவுப் பொருட்களை வீடுகளுக்கு ட்ரோன் மூலம் டெலிவரி செய்ய அனுமதிக்குமாறு லக்னோ மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகத்துக்கும் அந்த நிறுவனம் கடிதம் அனுப்பிக் காத்துக்கொண்டிருக்கிறது. இதற்கு அனுமதி கிடைத்தால், இந்த வழிமுறை மற்ற பெரு நகரங்களுக்கும் பரவ வாய்ப்பிருக்கிறது.
அதேநேரம் ட்ரோன்களால் உருவாகும் ஆபத்து, தனிநபர் சுதந்திரத்தில் தலையீடு போன்ற விமர்சனங்களும் உள்ளன.