Last Updated : 11 Aug, 2017 12:06 PM

 

Published : 11 Aug 2017 12:06 PM
Last Updated : 11 Aug 2017 12:06 PM

நோலன் பாணியில் ஒரு முழுநீளச் சித்திரம்

தையை ஆரம்பிக்கும்போதே, உங்கள் முன்முடிவுடன் இந்தக் கதையை ஆட்சேபிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டுத்தான் கதைக்குள் நுழைகிறார், நமது தலைமுறையின் முதல் பெண் கிராஃபிக் படைப்பாளியான அம்ருதா.

கதையின் ஆரம்பமே ஒரு அட்டகாசமான கமர்ஷியல் படத்தின் ‘நான்-லீனியர்’ தொடக்கம்போல இருக்கிறது. முதல் பக்கத்திலேயே அர்ஜுனனும் அஸ்வத்தாமனும் எதிரெதிரே நின்று பசுபதாஸ்திரத்தை ஏவுகிறார்கள். உலக அழிவுக்கு வகை செய்யும் அந்த ஆயுதத்தைத் திரும்பப் பெறுமாறு கிருஷ்ணர் சொல்ல, அர்ஜுனன் அவ்வாறே செய்கிறான். ஆனால், அந்தக் கலையை முழுமையாகக் கற்காத அஸ்வத்தாமனால் திரும்பப் பெற முடியாமல் போக, கிருஷ்ணர் கோபம் கொள்கிறார்.

உலகின் ஏழு சிரஞ்சீவிகளுள் ஒருவரான அஸ்வத்தாமனுக்கு மரணம் கிடையாது. ஆகவே, அவரது நெற்றியிலிருக்கும் மாணிக்கத்தை அகற்றி, மூன்றாயிரம் ஆண்டுகள் பூமியில் உழலுமாறு சாபமிடுகிறார் கிருஷ்ணர்.

பாண்டவர்களின் பயிற்சி, கவுரவர்களுக்கும் பாண்டவர்களுக்குமான பகை, கிருஷ்ணரின் கதை, கோவர்த்தனகிரியைத் தூக்குவது, எதிரிகளை அழிப்பது என்று மிக வேகமாக நகரும் கதை, திரவுபதி வரும் பகுதியை நெருங்கும்போது, ஒரு கவிதைபோல நளினமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. திரவுபதியின் சுயம்வரத்தில் ஆரம்பித்து, துகிலுரியும் படலம்வரையில் நாம் இதுவரை படிக்காத, பார்க்காத வகையில் சொல்லப்பட்டு இருக்கிறது. ஒருவகையில், மகாபாரதம் முழுவதுமே இயற்கை, பெண்ணியம் சார்ந்த ஒரு படைப்பு என்பதை ஒவ்வொரு வாய்ப்பிலும் அம்ருதா நிரூபிக்கிறார்.

இயற்கை மீதான கரிசனம்

மகாபாரதத்தின் பல கிளைக் கதைகளை, அவற்றின் மையக் கருவை இணைக்கும் புள்ளிகளை மிகச் சரியாகத் தேர்ந்தெடுத்து, பல சம்பவங்களை, பல்வேறு காலகட்டங்களை, கிறிஸ்டோபர் நோலனின் ‘நான்-லீனியர்’ திரைக்கதையைப் போல அடுத்தடுத்துச் சொல்லிக் கதையை அம்ருதா நகர்த்தியிருக்கிறார். பல சம்பவங்கள் நாம் அறிந்தவையாக இருந்தாலும், நமக்குத் தெரியாத விஷயங்களும் இடையிடையே வருகின்றன.

சில பக்கங்களில் ஓவியம் இல்லாமல், முழுக்கமுழுக்க வார்த்தைகளாகவே கதை நகர்கிறது. ஆனால், அவற்றின் அமைப்பு, சொல்லாடல், ஒலி இயைபு போன்றவை கவிதைக்கான நேர்த்தியுடன் இருப்பதால், இதுபோன்ற பக்கங்கள் தேடிப் படிக்க வைக்கின்றன.

2004-ம் ஆண்டு தனது ஓவியப் பட்டத்துக்கான ஆய்வுப்பொருளாக அம்ருதா தேர்ந்தெடுத்திருந்த கருப்பொருள் திரவுபதி. ஏறக்குறைய 200 ஓவியங்களைக் கொண்ட அந்தப் படைப்பின் பேசுபொருளைத்தான் இந்த கிராஃபிக் நாவலில் மறுபடியும் கொண்டுவந்திருக்கிறார். இயற்கை, சுற்றுச்சூழல் போராளியான அம்ருதாவின் பல கருத்துகள், எண்ணங்களை இந்த கிராஃபிக் நாவலிலும் காணலாம்.

ஆறுகளின் வண்ணங்கள் கறுப்பாக மாறுவது, அழகான வனங்கள் (காடுகள்) மனிதர்களுக்கு எதிராகச் செயல்படுவது என்று பல வகைகளில் அதை வெளிப்படுத்தி இருக்கிறார். பூமாதேவி, ஸ்ரீதேவி ஆகிய இருவரையும் சுற்றித்தான் நமது இதிகாசங்கள் இயங்குகின்றன என்பதையும் அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

தான் உருவாக்கிவரும் மகாபாரதக் கதை வரிசையில் முதல் புத்தகத்துக்கும் இரண்டாவது புத்தகத்துக்கும் இடையே நான்கு ஆண்டுகளை எடுத்துக்கொண்டது, ஒரு பரிணாம வளர்ச்சியைக் கடந்து, தன்னை ஒரு கதை சொல்லியாகச் செதுக்கிக்கொள்ளத்தான் என்பதை அம்ருதா தெளிவுபடுத்தி இருக்கிறார்.

கட்டுடைக்கப்பட்ட இலக்கணம்

வழக்கமாக காமிக்ஸ், கிராபிஃக் நாவல்களை சீக்வென்ஷியல் ஆர்ட் (வரிசைமுறை சார்ந்த ஓவியங்கள்) என்று சொல்வார்கள். அந்த இலக்கணத்தைக் கட்டுடைத்திருக்கிறார் அம்ருதா. கிராஃபிக் நாவல்களில், ஓவியக் கட்டங்களுக்கு (பேனல்கள்) இடையே ஒரு ஒழுங்கும் தொடர்ச்சியும் இருக்கும். ஆனால், இந்த கிராஃபிக் நாவலில் அடுத்தடுத்த இரண்டு ஓவியங்கள் பெரும்பாலும் தொடர்பின்றி, வகை மாறித்தான் இருக்கின்றன.

அது மட்டுமல்லாமல், அக்ரலிக் பெயிண்டிங், கொலாஜ் பாணி, வாட்டர் கலர், சார்கோல் வண்ணக் கலவை என்று பலவிதமான ஓவிய பாணிகள் இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. அந்த இலக்கணமும் கட்டுடைக்கப்பட்டிருக்கிறது. இப்படியாக இந்த சௌப்திக் கிராஃபிக் நாவல் ஒரு முழுமையான விருந்தாகப் படைக்கப்பட்டிருக்கிறது.

வழக்கமான காமிக்ஸ், கிராஃபிக் நாவல்களைப் படிக்கும் வாசகர்கள் இதுபோன்ற மாற்று முயற்சிகளையும் நிச்சயமாகப் படிக்க வேண்டும். உறங்குபவர்கள் (சௌப்திக்) என்கிற அர்த்தம் கொண்ட அம்ருதா பாட்டீலின் இந்த கிராஃபிக் நாவல், மாற்று முயற்சிகளில் உறுதியாக முதலிடத்தில் நிற்கும்.

கட்டுரையாளர், காமிக்ஸ் ஆர்வலர்
தொடர்புக்கு: TamilComicsUlagam@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x