

பெ
ற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய பிள்ளைகளே பெற்றோரை முதியோர் இல்லங்களில் தள்ளுவதைப் பற்றிய செய்திகளைப் பார்த்து வருந்தியிருப்போம். செய்தியாகப் படிக்கும்போதே நமக்கு வலிக்கிறது என்றால், முதியோர் இல்லங்களில் நடைப் பிணங்களாக வாழும் வயது முதிர்ந்த பெற்றோர்களது மனம் என்ன பாடுபடும்? ஒரு புறம் நோய்களும் இன்னொரு புறம் ஆதரவற்ற தனிமையும் மனதை வாட்டி முதியவர்களைப் பாடாய்படுத்திவிடும். இந்தச் சிக்கலுக்கு நெதர்லாந்தின் டிவெண்டர் (Deventer) பகுதியில் செயல்படும் முதியோர் இல்லம் ஒன்று இளைஞர்களைக் கொண்டு ஒரு தீர்வைக் கண்டுள்ளது.
முதியோர்களை வாட்டும் தனிமையை விரட்டியடிக்கும் வகையில் ‘இண்டர்ஜெனரேஷனல்’ எனும் திட்டத்தை அந்த முதியோர் இல்லம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி பல் கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பயிலும் இளைஞர்களுக்குத் தங்குமிடம் இலவசம் என்ற அறிவிப்பை முதியோர் இல்லம் வெளியிட்டது.
ஆனால், இதற்கு ஒரு நிபந்தனையையும் அந்த இல்லம் விதித்தது. ஒரு மாதத்தில் குறைந்தபட்சம் 30 மணி நேரம் அந்த இளைஞர்கள், முதியவர்களுடன் செலவிட வேண்டும் என்ற ஒரே ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டது.
அதை ஏற்றுக்கொண்ட இளைஞர்கள் அந்த இல்லத்தில் தங்கினர். முதியவர்களுக்கு உணவு பரிமாறுவது, இசையைச் கற்றுக்கொடுப்பது, ஃபேஸ்புக்கை இயக்கச் சொல்லிக்கொடுப்பது என ஒவ்வோர் இளைஞரும் முதியவர்களுடன் நெருக்கமானார்கள். பிறந்த நாள் கொண்டாட்டங்கள், புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் ஒன்றுகூடல் நிகழ்வுகள், முதியவர்களுடன் ஒன்றாக அமர்ந்து திரைப்படம் அல்லது விளையாட்டுப் போட்டிகளைப் பார்ப்பது என எதையுமே அவர்கள் விட்டுவைக்கவில்லை.
எப்போதும் முதியவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதில் இளைஞர்கள் அதிக அக்கறையும் காட்டினார்கள். முதியவர்கள் உடல்நலக் குறைவால் அவதிப்படும் சமயங்களில், அந்த இளைஞர்கள் தங்களுடைய சொந்த தாத்தா, பாட்டி போலக் கருதி அவர்களுடன் உடனிருந்து கவனித்துள்ளனர்.
முதியவர்களுடன் இளைஞர்களின் இந்தச் சங்கமமும் அவர்களின் நெருக்கமும் கனிவான அக்கறையும் முதியவர்கள் மனதில் உத்வேகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருப்பதாக அந்த முதியோர் இல்லம் தற்போது தெரிவித்துள்ளது. இந்தத் தீர்வின் மூலம் தங்கள் இல்லத்தில் வசிக்கும் முதியவர்களின் தனிமை உணர்வைப் போக்கியிருப்பதாகவும் அந்த இல்லம் பெருமையுடன் கூறி உள்ளது.
சமீபத்தில் அமெரிக்காவின் அறிவியல் நிறுவனம் முதியவர்கள் பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. ‘சமூகத் தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்ட நிலையில், தனிமையின் வேதனை மனதை வாட்டுவதால் பெரும்பாலான முதியவர்கள் பிரச்சினைக்கு ஆளாவதாகவும், இந்த மனரீதியான பிரச்சினையால் அதிக அளவில் மரணங்கள் நிகழ்வதாகவும்’ அந்த ஆய்வு சுட்டிக்காட்டியது.
அந்த வகையில், முதியவர்களின் தனிமையைப் போக்க நெதர்லாந்தின் முதியோர் இல்லம், இளைஞர்கள் மூலம் சிறந்த தீர்வைக் கண்டுபிடித்துள்ளது புதிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
இதே வழிமுறையை அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகளில் செயல்படும் முதியோர் இல்லங்களும் தற்போது கடைப்பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன.