சுழலுக்குள் தள்ளும் சுழலி

சுழலுக்குள் தள்ளும் சுழலி

Published on

மெ

ய்நிகராக நம்மை கட்டிப்போடும் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகம் அல்ல அது. கற்பனையான உலகைக் கண்முன்னே உலாவவிடும் வீடியோ கேம்ஸூம் அல்ல. பார்க்க மிகச் சாதாரணமாகத் தோன்றும் அதை, ஒருதரம் கையில் பிடித்துச் சுழற்றத் தொடங்கியவர்கள் மீண்டும் அதைத் தரையில் வைப்பதில்லை. மனதை ஒருமுகப்படுத்தும் என உளவியல் ஆலோசகர்களால் பரிந்துரைக்கப்பட்ட அந்தச் சாதனம் இன்று மனதை ஆட்டிப்படைக்கும் ஆபத்தான பொருளாகத் தடை செய்யப்பட்டுவருகிறது. 1990-களிலேயே சந்தைக்கு வந்துவிட்ட ‘ஃபிட்ஜட் ஸ்பின்னர்’தான் இப்போது உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளையும் பதின்ம வயது குழந்தைகளையும் ஆட்டிப்படைக்கிறது.

அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டுவிட்டாலும் சில மாதங்களுக்கு முன்பு கூட அமெரிக்க அதிபர் டிரம்பின் மகன் பாரன், ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ விமானத்திலிருந்து இறங்கும்போதுகூட ஃபிட்ஜட்டை சுழற்றிக்கொண்டிருந்த ஒளிப்படம் செய்தி ஊடகங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆட்டிசம், கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்க உதவும் எனச் சொல்லப்பட்ட ஃபிட்ஜட் ஸ்பின்னர் இப்போது அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் சில பள்ளிகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. காரணம், வகுப்பறையில் மாணவர்கள் பாடத்தைக் கவனிக்காமல் எந்நேரமும் ஃபிட்ஜெட்டைச் சுழற்றிக்கொண்டே இருக்கிறார்கள். பிளாஸ்டிக் அல்லது இரும்பால் ஆன இந்த பொம்மையின் நடுவில் வெங்கலம் அல்லது பித்தளை பேரிங் பொருத்தப்பட்டிருப்பதால் அதைச் சுழற்றி வீசி விளையாடிய சிலருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.

இதைவிடவும் பயங்கரமான குற்றச்சாட்டை ரஷ்யா முன்வைத்துள்ளது. ஃபிட்ஜட்டை போதை வஸ்துகளைப் பூசி இளைஞர்களை வசியப்படுத்த எதிர்க்கட்சியினர் சதித்திட்டம் தீட்டுவதாக அங்குச் சர்ச்சை எழுந்தது.

போதாக்குறைக்கு இந்த வாரம், அமெரிக்காவின் சிகாகோ நகர அருங்காட்சியகத்தில் உலகின் மிகப் பழமைவாய்ந்த ஃபிட்ஜட் ஸ்பின்னரை தன்னுடைய மகள் கண்டதாக ட்வீட் போட்டார் ஒரு தந்தை. இதனையடுத்து முதல் ஃபிட்ஜட்டை தேடும் படலம் இணையத்தில் மையம்கொண்டுள்ளது.

அட! எங்கேயோ, யாரோ விளையாடும் பொம்மையைப் பற்றி இங்கே எதற்குப் பேச்சு என நினைத்தால் அது தவறு. மருந்து முதல் ஸ்மார்ட்ஃபோன்வரை எதெல்லாம் பணக்கார நாடுகளில் தடைசெய்யப்படுகிறதோ அவை அனைத்தும் அடுத்து வந்திறங்கும் நாடு இந்தியாதானே! அதான் ஃபிட்ஜட்டும் இந்தியாவுக்குள் வந்துவிட்டது.

வந்த வேகத்தில் ஆன்லைனிலும் தெருக்கடைகளிலும் வியாபாரம் அள்ளுகிறது. யூடியூபில் இதற்கான டெமோ வீடியோக்கள்கூட ஹிட் அடிக்கின்றன. ஸ்மார்ட்ஃபோனிலேயே இதை விளையாட எக்கச்சக்கமான ஃபிட்ஜட் ஆப்ஸுகளும் வந்துவிட்டன. இதனால், பம்பரம்விட்ட பாரம்பரியத்தைச் சேர்ந்த நம் வாண்டுகளும் இளவட்டங்களும் இதை கை விரல்களில் மட்டுமல்ல கால்விரல், கழுத்து, மூக்கின் மேலேகூடச் சுழலவிட்டு வித்தைக் காட்டுகிறார்கள்.

ஃபேஸ்புக், வாட்ஸ் அப்புக்கு அடுத்தபடியாக நம்மை வசியப்படுத்த ஃபிட்ஜட் வந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. கையடக்கப் பொம்மை ஒன்று நம்மை அடக்கிவைக்க அனுமதிக்கலாமா?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in