ஒளிரும் நட்சத்திரம்: ஒரு நாயகன் உருவாகிறான்..!

ஒளிரும் நட்சத்திரம்: ஒரு நாயகன் உருவாகிறான்..!
Updated on
2 min read

அண்மையில்தான் கிடாம்பி ஸ்ரீகாந்த் இரு சர்வதேச பாட்மிண்டன் சாம்பியன் போட்டிகளில் பட்டம் வென்று இந்தியாவுக்குப் பெருமைத் தேடித் தந்தார். தற்போது கரண் ராஜா எனும் பாட்மிண்டன் வீரர் மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் நடந்த ஃபியூச்சர் சீரியஸ் போட்டியில் பட்டம் வென்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் சர்வதேசத் தனிநபர் பாட்மிண்டன் போட்டியில் பட்டம் வெல்வது இதுதான் முதல்முறை.

தரவரிசையில் முன்னேற்றம்

கவுதமாலாவில் இரு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற இப்போட்டியில் கரன் ராஜா, உள்நாட்டு வீரரான ஹம்லர்ஸ் ஹெய்மார்டை வீழ்த்தி சாம்பியன் ஆனார். ஆட்டத்தின் முதல் சுற்றில் 21-19 என்ற கணக்கில், வெறும் 3 புள்ளிகளில் மட்டுமே முன்னிலையில் இருந்த கரன், இரண்டாம் சுற்றில் தனது எதிர் ஆட்டக்காரருக்கு இடமே அளிக்காமல் 21-12 என்ற கணக்கில் வென்றார். இந்த வெற்றிக்குப் பிறகு கரன் 1,700 புள்ளிகள் பெற்றார். இதன் மூலம் சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் 512-வது இடத்திலிருந்து ஒரேயடியாக 337-வது இடத்துக்கு முன்னேறிவிட்டார். இந்திய அளவிலான தரவரிசையில் 40-வது இடத்தில் உள்ளார் கரண்.

கவுதமாலாவில் 1997-ம் ஆண்டிலிருந்து நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, வேல்ஸ், ஸ்பெயின், கியூபா, கவுதமாலா ஆகிய நாடுகள்தான் வெற்றிபெற்று வந்துள்ளன. இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் வெற்றி பெறுவது இவே முதல்முறை.

சென்னைப் பையன்

சென்னையைச் சேர்ந்த கரண் ராஜனின் தந்தை ராஜராஜன் மாநில அளவில் பாட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்றவர். கரணின் அண்ணனான சித்தார்த் ராஜனும் பாட்மிண்டன் தேசிய அளவில் பங்கேற்ற வீரர்தான். இந்தப் பின்னணியில் வளரத் தொடங்கிய கரணுக்கு இயல்பாக பாட்மிண்டன் மீது ஆர்வம் உண்டானது. அவரது 7-ம் வயதில் பாட்மிண்டன் பயிற்சி எடுக்கத் தொடங்கினார். 10 வயதுக்குட்பட்டோருக்கான மாநில, தேசிய அளவிலான பல போட்டிகளில் பங்குகொண்டு பரிசுகள் பெற்றுள்ளார்.

சர்வதேச போட்டிகளில் கரணுக்குக் கூடுதல் பயிற்சி தேவைப்பட்டது. பள்ளி படிப்புக்கு இடைஞ்சல் வராமல் தினமும் பயிற்சி எடுத்துள்ளார். இடையே தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடிபடி பயிற்சியும் எடுத்து வந்த கரண், 2015-ல் 19-வது வயதில் சர்வதேசப் போட்டிகளில் விளையாடத் தொடங்கினார். தொடக்கத்தில் ஆயிரமாவது இடத்துக்குப் பின்னால் தரவரிசைப் பட்டியலில் இருந்த கரண், படிப்படியாக முன்னேறினார். 2016-ம் ஆண்டு அக்டோபரில் 331-ம் இடத்தைப் பெற்றது அவரது அதிகபட்ச சாதனையாக இருந்தது. அதற்குப் பிறகு பின்னடைந்த அவர், தற்போது இந்த வெற்றியின் மூலம் மீண்டும் தரவரிசைப் பட்டியலில் முன்னேற்றம் கண்டிருக்கிறார்.

ஒலிம்பிக் கனவு

“2018-ம் ஆண்டுக்குள் சர்வதேசத் தரவரிசைப் பட்டியலில் 100-க்குள் வர வேண்டும் என்பதுதான் அடுத்த இலக்கு” எனச் சொல்லும் கரண் இதற்காகக் கடும் பயிற்சியும் எடுத்துவருகிறார். தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் அண்மைக் காலமாகத்தான் பாட்மிண்டன் பயிற்சி மையங்கள் அதிகரித்துள்ளன. சர்வதேச தரத்திலான சிறந்த பயிற்சி இன்று சென்னையிலேயே கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது. “ஆனாலும் சர்வதேசப் போட்டியாளர்களுடன் விளையாடிப் பயிற்சி எடுப்பது, சர்வதேசப் போட்டிகளை எதிர்கொள்வதற்குப் பலம் சேர்க்கும்” என்கிறார் கரண்.

தொடக்கத்தில் இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் பயிற்சி எடுத்தார் கரண். இப்போது டென்மார்க்கில் உள்ள ஹொபியா பாட்மிண்டன் அகாடமியில் பயிற்சி எடுத்து வருகிறார். “இந்தியாவுக்கு ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு பதக்கம் வெல்ல வேண்டும் என்பது தனது லட்சியம்” எனச் சொல்லும் கரண் அடுத்ததாக கனடா ஓபன் போட்டியில் விளையாட இருக்கிறார்.

சாய்னா நேவல், பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் போன்ற வீரர்களின் சர்வதேச வெற்றியைத் தொடர்ந்து பரவலாக இந்தியா முழுவதும் பாட்மிண்டன் மீதான ஆர்வம் அதிகரித்திருக்கிறது. கரண் ராஜனின் இந்த வெற்றி தமிழ்நாட்டு பாட்மிண்டன் வீரர், வீராங்கனைகளுக்கு புதுத் தெம்பு அளிக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in