

இந்தியாவையும் பெரும்பாலான விளையாட்டு ஆர்வலர்களையும் இதுவரை ஆக்கிரமித்துவந்துள்ள விளையாட்டு கிரிக்கெட் மட்டுமே. ஆனால், சமீப காலமாக மற்ற விளையாட்டுகளிலும் நம் வீரர்கள் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் சாதனைகளைச் செய்து கவனம் பெறத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், பாட்மிண்டனில் சாய்னா, பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரனாய் உள்ளிட்டோர் சர்வதேச அளவில் பல சாதனைகளைச் செய்துள்ளனர்.
அந்த விளையாட்டை ஆக்கிரமித்துக்கொண்டிருந்த சீனாவை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் தங்கள் பக்கம் திருப்பியுள்ளனர். கால்பந்து விளையாட்டில் சர்வதேசத் தர வரிசையில் 96-வது இடத்தைப் பிடித்து இந்தியா பெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.
அந்த வரிசையில், தற்போது ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்று முடிந்த 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்து வரலாறு படைத்துள்ளது இந்தியா. இது விளையாட்டுத் துறை வீரர்களுக்கு புது உத்வேகத்தை அளித்துள்ளது. ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி வரலாற்றில், வலிமைமிக்க சீனாவை ஓரம்கட்டி பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடிப்பது இதுவே முதல் முறை.
தொடக்கக் காலத்தில், ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஜப்பான் கோலோச்சி வந்தது. 1973, 1975, 1979, 1981 எனத் தொடர்ந்து 4 முறை பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது ஜப்பான். 1983-ம் ஆண்டு சீனாவிடம் முதலிடத்தைப் பறிகொடுத்த ஜப்பான், மீண்டும் மீளவே இல்லை. இதுவரை 2, 3, 4, 5-வது இடங்களைப் பிடித்துவந்த அந்த நாடு, சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய தடகளப் போட்டியில், 16-வது இடத்துக்குத் தள்ளப்பட்டது. அதுவும் ஒரு தங்கப் பதக்கம்கூடப் பெற முடியாமல் தளர்ந்துபோனது அந்த நாடு.
தடகளம் என்றாலே உலக அரங்கில் பெரும்பாலும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான், ஜமைக்கா, கென்யா, எத்தியோப்பியா போன்ற நாடுகள் அதிக ஆதிக்கம் செலுத்தும். ஆசிய அளவில் சீனா, ஜப்பான், கத்தார் நாடுகளே தடகளப் போட்டியில் முன்னணியில் இருக்கும். 1983-ம் ஆண்டு ஆசிய தடகளப் போட்டி பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்த சீனா, தொடர்ந்து 17 முறை அந்த இடத்தை விட்டுக்கொடுக்காமல் ஆதிக்கம் செலுத்தி வந்தது. தற்போது, அந்த மணிமகுடத்தை இந்தியாவிடம் பறிகொடுத்துள்ளது. இந்த முறை 8 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என 20 பதக்கங்களுடன் 2-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது சீனா.
தடகளத்தைப் பொறுத்தவரை, உலக சாம்பியன்ஷிப் போட்டி, ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் செயல்பாடு மெச்சத்தக்க வகையில் இருக்காது. ஆனால், கடந்த ஆண்டு பிரேசில் தலைநகர் ரியோ-டி-ஜெனிரோவில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு, தடகள விளையாட்டில் இந்திய வீரர்களின் செயல்பாடு பிரம்மிக்கத்தக்க வகையில் முன்னேறியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கள் திறமையை நிரூபித்துக் காட்டியுள்ளனர் நம் வீரர்கள்.
1985, 1989-ம் ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதுதான் இந்தியா அதிக பதக்கங்களைப் பெற்றுள்ளது. 12 தங்கம், 5 வெள்ளி, 12 வெண்கலம் என 29 பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடத்தை அலங்கரித்துள்ளது இந்தியா.
இம்முறை இந்தியா வரலாற்றுச் சாதனை படைக்க காரணமான தங்கம் வென்ற தங்கங்கள்:
லட்சுமணன் (5,000 மீட்டர், 10,000 மீட்டர் ஓட்டம்), அஜய்குமார் சரோஜ் (1,500 மீட்டர் ஓட்டம்), முகமது அனாஸ் (400 மீட்டர் ஓட்டம்), நிர்மலா ஷெரான் (400 மீட்டர் ஓட்டம்), பி.யு.சித்ரா (1,500 மீட்டர் ஓட்டம்), சுதா சிங் (3,000 மீட்டர் ஸ்டீபல்சேஸ்), நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்), ஸ்வப்னா பர்மன் (ஹெப்டத்லான்), 4,000 மீட்டர் ரிலே போட்டியில் நிர்மலா ஷெரான், பூவம்மா, ஜிஸ்னா, தபஸ் (பெண்கள் பிரிவு), குனு முகமது, முகமது அனாஸ், ஆரோக்ய ராஜீவ், அமோஜ் ஜோக்கப் (ஆண்கள் பிரிவு) ஆகியோர் இந்தியாவுக்கு மணி மகுடம் சூட்டியுள்ளனர்.
ஆசிய போட்டியில் அசத்திய வீரர்களில் தனிநபர் பிரிவில் சாதித்த லட்சுமணன், அஜய்குமார் சரோஜ், பெண்கள் பிரிவில் பி.யு. சித்ரா, சுதா சிங், ஸ்வப்னா பர்மன் ஆகியோர் அடுத்த மாதம் லண்டனில் நடைபெறவுள்ள 16-வது உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளனர்.
இவர்களையும் சேர்த்து, உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 19 பிரிவுகளில் இம்முறை 32 பேர் பங்கேற்கின்றனர். உலகத் தடகளப் போட்டியில், இந்தியா அதிக போட்டி பிரிவுகளில் பங்கேற்கத் தகுதி பெற்றிருப்பது இதுவே முதல்முறை. உலக அரங்கில் பெரும் சவாலைச் சந்திக்கத் தயாராகிவிட்டனர் நம் இளைஞர்கள்.
இந்தியாவின் இந்த எழுச்சி உலக சாம்பியன்ஷிப் போட்டி, ஒலிம்பிக் என அடுத்தடுத்து தொடர வாழ்த்துவோம்.