

மனிதனுடன் பிறந்த தேடல் உணர்ச்சியே பயணத்தின் அடிப்படை. பயணம் என்றவுடன் அதிக செலவு பிடிக்கும் ஆடம்பர நிகழ்வோ என்ற எண்ணம் ஏற்படுவது இயல்பு. ஆனால், உண்மை அதுவல்ல. நம் ஊரிலேயே உள்ள நாம் இதுவரை செல்லாத பக்கத்துத் தெருவுக்குச் செல்வதுகூடப் பயணம்தான். ஒரு நாள் பயணத்தில் கிடைக்கும் அனுபவத்துக்கு ஈடு இணை இல்லை, சுற்றுலாத் தலத்துக்குச் சென்று இயந்திரத்தனமாகக் கும்பலில் கரைந்து, நாட்களைத் தொலைப்பது மட்டுமே பயணம் என்ற எண்ணம் தேவை இல்லை.
ஏனென்றால், வெறுமனே இடங்களைப் பார்ப்பது, அறிவது மட்டும் பயணத்தின் நோக்கமல்ல; நாம் சென்ற புதிய இடத்தில் வாழும் மனிதர்களை அறிவது அவர்களது வாழ்வைப் புரிந்துகொள்வதுதான் பயணத்தின் உண்மையான பலனாக இருக்க முடியும். நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரிடமும் ஏதோ ஒரு கதை இருக்கும் என்பார்கள். அப்படி ஒரு கதையைத்தான் வைத்திருந்தார் தனுஷ்கோடியில் சந்தித்த குமார்.
பாம்பன் பாலத்தில் ரயில் செல்லும் காட்சி
ஒரு புயல் நாளில் தனுஷ்கோடிக்குப் பயணம் செல்ல நேரிட்டது. அன்று இரவு புயல் கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ரயில் பாம்பன் பாலத்தின் மீது செல்லும்போதே கடல் அலைகளின் ஆக்ரோஷத்தையும் அபாயகரமான வேகத்தில் வீசும் சூறாவளிக் காற்றையும் உணர முடிந்தது. இந்தப் பயணத்தில் பயத்தில் இருண்டு, வெளுத்துப் போயிருந்தன பெரியவர்களின் முகங்கள். ஆனால், தங்களை மறந்த உற்சாகத்தில் கூச்சலிட்டன குழந்தைகள்.
பேருந்துகளின் ஓட்டம் அன்று குறைவாகவே இருந்தது. கிடைத்த பேருந்தில் ஏறி தனுஷ்கோடியை அடைந்தபோது, இன்னும் 5 கிலோமீட்டர் கடற்கரை மணலில் வேனில் செல்ல வேண்டும் என்பது தெரியவந்தது. கடல் சீற்றம் காரணமாக அன்று வேன்கள் இயக்கப்படவில்லை. மாற்றுவழிகளுக்கு விடாமல் முயன்றுகொண்டிருந்த வேளையில், எதிர்ப்பட்டார் குமார். 30 வயது மதிக்கத்தக்க வகையில் இருந்த அவர் ஒரு மீனவர் மட்டுமல்ல; சுற்றுலா வழிகாட்டியும்கூட. அவர் தனுஷ்கோடியின் கோர வரலாற்றை விவரித்தார்.
1964 டிசம்பர் 22 அன்று இரவு 11.35 மணிக்குத் தனுஷ்கோடியில் சுழன்றடித்த சூறாவளியைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார். சூறாவளிக்கு முன்னர் தாக்குப்பிடிக்க முடியாத தனுஷ்கோடியின் துயரார்ந்த நிகழ்வுகளை ஒரு கதைபோல் விவரித்தார். ராட்சச அலைகள் தனுஷ்கோடியை விழுங்கிவிடும் ஆவேசத்துடன் புரண்டு புரண்டு வந்தன என்பதைச் சொன்னார். காளி என்ற ஒரு மனிதரை தவிர எஞ்சிய அனைவரும் கடல் நீரில் இழுத்துச் செல்லப்பட்டனர். அவர்களது வீடுகளும் உடைமைகளும் கடல் நீரில் மூழ்கிப் போயின. அந்தக் கடும் புயலிலும் காளி மட்டும் எப்படியோ நீந்தியே ராமேஸ்வரத்தை அடைந்தார். அதன் காரணமாகப் பின்னர் அவர் ‘நீச்சல் காளி’ என்று அந்த மக்களால் அழைக்கப்படுகிறார்.
அந்தக் காளி வேறு யாருமல்ல, குமாரின் தந்தை. அதனால்தான் தந்தையிடம் பலமுறை கேட்ட சம்பவத்தை நேரில் பார்த்ததுபோல் குமாரால் விவரிக்க முடிகிறது. வேன்கள் ஓடவில்லையென்றாலும், புதிதாகப் போடப்பட்டுக்கொண்டிருந்த தார் சாலை வழியாக, ஒரு ஜேசிபி வண்டியில் தனுஷ்கோடிக்கு அழைத்துச் சென்றார். அந்தத் தார் சாலையில், ஒரு புறம் வங்காள விரிகுடாவும் மறுபுறம் இந்து மகா சமுத்திரமும் சீறிக்கொண்டிருந்தன. எதிர்பாராத வகையில் கிடைத்த அந்த ஜேசிபி பயணத்தை எளிதில் மறக்க முடியாது.
அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்று குடும்பத்தினரை அறிமுகப்படுத்தினார். தந்தையின் ஒளிப்படத்தைக் காட்டினார். நாளிதழ்களில் தன் தந்தையைப் பற்றி வந்த செய்திகளைப் பெருமையுடன் காட்டி, அதன் பின்னணியை விவரித்தார். இலங்கைக்கு நீந்தியே சென்றதற்காக, குடியரசுத் தலைவர் கையால் தன் தந்தை பெற்ற விருதைக் காட்டியபோது, குமாரின் முகத்தில் பெருமிதம் நிரம்பி வழிந்தது.
சில குடிசைகளையும் உப்புக் காற்றில் உதிர்ந்துகொண்டிருக்கும் சிதிலமடைந்துபோன சில கட்டிடங்களையும் தவிர அங்கு வேறு எதுவும் இல்லை. 60 வருடங்களுக்கு முன்னர் இது நகரமாகவும் ராமேஸ்வரம் கிராமமாகவும் இருந்தது என்பதை நம்புவதற்குச் சிரமமாகத்தான் இருந்தது. ஒளிப்படத்தில் காணப்படும் இடிந்துபோன தேவாலயம், அந்தச் சூறாவளிச் சம்பவத்துக்கான மவுனச் சான்றாக நிற்பது போலவே தோன்றுகிறது. அந்தக் கொடிய இரவில் அவர்கள் சிந்திய கண்ணீரும் நாதியற்றுப் போன சூழலில் அந்தத் துர்ப்பாக்கிய ஜீவன்களின் அழுகுரலும் நம் மனத்தை நிறைக்கின்றன. இயற்கைக்கு முன்னர் நாம் எவ்வளவு சிறியவர்கள். ஆனால், சுரணையேயில்லாமல் இயற்கைக்குச் சவால்விட்டுத் திரிகிறோமே என்று வெட்கமாக இருந்தது.
தனுஷ்கோடி சாலை | படம்: எல்.பாலச்சந்தர்
50 வருடங்களுக்கு முன், அரசாங்கம் தனுஷ்கோடியை வாழத் தகுதியற்ற இடம் என்று அறிவித்து, மனிதர்கள் அங்கு வாழ்வதைத் தடைசெய்துவிட்டது. ஆனால், தற்போது இறந்துவிட்ட நீச்சல் காளி அரசாங்கத்திடம் போராடி, தன் குடும்பம் வாழ்வதற்கு அனுமதி வாங்கி இருக்கிறார். ஏன் நீங்கள் இன்னும் இங்கு வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் என்று குமாரிடம் கேட்ட போது, ‘இது நான் பிறந்த மண்’ என்று அவரளித்த பதிலில் இயற்கையை எதிர்கொள்ளத் திராணி இருக்கிறது என்று உறுதி தெரிந்தது. அவர் இயற்கையின் சக்தியை உணர்ந்து, தன்னை முழுமையாக அதற்கு ஒப்புக்கொடுத்தவர். வங்காள விரிகுடாவைத் தன் தந்தை என்கிறார், இந்து மகாசமுத்திரத்தைத் தன் அன்னை என்கிறார். தனக்கு அவர்கள் தீங்கிழைக்க மாட்டார்கள் என்று நம்புகிறார்.
நம்பிக்கை தானே வாழ்க்கை!