

சத்யதாசன், பத்தாண்டுகளுக்குமுன்பு தனியார் விளம்பர நிறுவனம் ஒன்றில் அலுவலக உதவியாளர்.இன்றோ அவர் புடைப்புச் சிற்பக் கலைஞர், மினியேச்சர் கலைஞர், கலை இயக்குநர் எனப் பன்முக அடையாளங்களுடன் உலவும் இளைஞர். சென்னையின் இரண்டு விற்பனை கேலரிகளில் இவரது கலைப் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. நந்தனம் சங்கரா வித்யாலயா பள்ளியில் நடக்கும் ஊர்ச் சந்தையிலும் இவரது கலைப் படைப்புகள் தொடர்ந்து காட்சிக்கு வைக்கப்படுகின்றன.
கலை தொடர்பான எந்தத் தொழில்முறைப் படிப்பையும் படிக்காமல், எந்தக் கலைக் கல்லூரிக்கும் செல்லாமல் சத்யதாசன் தன் கைவண்ணத்தில் அத்தனை நேர்த்தியாகப் புடைப்புச் சிற்பங்களை உருவாக்கியிருக்கிறார். 26 வயதில் கலையின் மீது தனக்கு இருக்கும் நம்பிக்கையிலும் ஆர்வத்திலும் புதுமையான கலைப் படைப்புகளை அவர் தொடர்ந்து உருவாக்கிவருகிறார். இவருக்கு எப்படி இந்த ஆர்வம் வந்தது?
“எனக்குச் சொந்த ஊர் திருப்பத்தூருக்குப் பக்கத்திலிருக்கும் சிலந்தம்பள்ளி கிராமம். 18 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு வந்தோம். அப்போது என்னுடைய அப்பா தள்ளுவண்டியில் பழைய காகிதங்களை வாங்கும் பணியைச் செய்துகொண்டிருந்தார். அவர் எடுத்துவரும் பழைய பொருட்களை வைத்து ஏதாவது புதிதாக உருவாக்குவேன். பெரும்பாலும் ஆட்களை வைத்து இரவு விளக்குகள், அலங்காரப் பொருட்கள் போன்றவற்றைச் செய்துகொண்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக மினியேச்சர் பொருட்களை உருவாக்குவதிலும் ஆர்வம் வந்தது” என்கிறார் சத்யதாசன்.
சத்யதாசனுக்கு 16 வயது இருக்கும்போது, ஆழ்வார்பேட்டையில் இருந்த தனியார் விளம்பர நிறுவனம் ஒன்றில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். அந்த நிறுவனத்தில் ஊழியர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்காக ‘வீக்லி டேலன்ட் ஷோ’ நடைபெறும்.
அதில் அவர் உருவாக்கிய மினியேச்சர் கிரைண்டர், பைக் போன்றவற்றைக் காட்சிக்கு வைத்திருந்தார். அந்தப் படைப்புகளைப் பார்த்த ஓவியர் சந்தோஷ் நாராயணன், கண்ணன் போன்றோர் சத்யதாசனைத் தொடர்ந்து கலைப் படைப்புகளை உருவாக்கும்படி ஊக்கப்படுத்தியிருக்கிறார்கள்.
அதன்பிறகுதான் புடைப்புச் சிற்பங்கள், சுவர் ஓவியங்கள் என முழுமையாகக் கலைப் படைப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார் சத்யதாசன்.
“திரைத்துறையில் கலை இயக்குநராக வேண்டுமென்பதுதான் என் கனவு. சில மாதங்கள் உதவிக் கலை இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறேன். தற்போது ஒரு தனியார் நிறுவனத்தில் மினியேச்சர் கலைஞராகப் பணியாற்றிவருகிறேன். என் கலை இயக்குநர் கனவை நனவாக்குவதற்காகத் தொடர்ந்து முயற்சி எடுத்துவருகிறேன்” என்று தன் எதிர்காலக் கனவை நம்பிக்கையுடன் பகிர்ந்துகொள்கிறார் சத்யதாசன்.