

இத்தாலியின் கார் நிறுவனமான லம்போர்ஜினி இந்தியாவில் தனது விற்பனையைப் பரவலாக்க முயன்று வருகிறது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆதிக்கம் செலுத்தும் பெங்களூரில் லம்போர்ஜினியின் விற்பனை தொடங்க சமீபத்தில் ஏற்பாடு நடந்துள்ளது. ஏற்கெனவே லம்போர்ஜினியின் விற்பனை நிலையங்கள் மும்பையிலும், புதுடெல்லியிலும் செயல்பட்டு வருகின்றன. ஸ்போர்ட் மாடல் காரின் விலை ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் என்ற நிலையில் இதை யார் வாங்குவார்கள் என்பது பெரிய கேள்விதான். ஆனாலும் இந்நிறுவனம் இந்தியாவில் தனது விற்பனையை அதிகரிப்பதைவிட இந்தியச் சந்தையில் தனது இருப்பை நிலைநாட்டிடத் துடிக்கிறது என்றே தோன்றுகிறது.
மும்பையிலும் டெல்லியிலும் கிளை அமைத்து விற்பனை நடத்துவது ஓரளவு சாத்தியமுள்ளதே. ஆனால் பெங்களூரில் விற்பனை நிலையம் என்பது அவ்வளவு எளிதல்ல என்கிறார்கள். ஆனாலும் இந்தியாவில் இதுவரை 94 லம்போர்ஜினி கார்கள் விற்பனையாகியுள்ளன. இதனிடையே சமீபத்தில் 1.35 கோடி ரூபாய் விலை கொண்ட பிஎம்டபிள்யூ எம்5 காரும், மெர்ஸிடிஸ் பென்ஸ் காரின் அடுத்த தலைமுறை மாடலான, 40.9 லட்சம் ரூபாய் விலையுள்ள சி கிளாஸ் காரும் அறிமுகமாகியுள்ளன.