

உ
லக அளவில் கவனத்தை ஈர்த்த ஹாரி பாட்டர் கதையைச் சிறுவர்கள் தொடங்கி முதியவர்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் வாசித்தார்கள். அந்தப் புத்தகத்துக்கு வயது 20 ஆகிவிட்டது உங்களுக்குத் தெரியுமா? அந்தப் புத்தகத்தைப் பற்றிச் சில சுவாரசியத் தகவல்கள்.
சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு (1997, ஜூன் 26) ஜே.கே. ரவுலிங், ஹாரி பாட்டர் புத்தகத்தின் முதல் பாகத்தை வெளியிட்டார். அந்தப் புத்தகம் சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரையும் கவர்ந்தது. அந்தப் புத்தகத்தின் மூலம் தன் மந்திர உலகுக்குள் ரவுலிங் எல்லோரையும் கொண்டுவந்தார். அதற்குப் பின் வரிசையாக 7 பாகங்களையும் வெளியிட்டார். அவர் வெளியிட்ட புத்தகங்கள் விற்பனையில் உலக அளவில் முதலிடத்தைப் பிடித்தன. அது மட்டுமல்ல; திரைப்படமாகவும் உருவாக்கப்பட்டது.
சிறுவர்களைக் குறிவைத்து எழுதப்பட்ட புத்தகமாக ஹாரி பாட்டர் இருந்தாலும் இளைஞர்களும் இந்தப் புத்தகத்தின் ரசிகர்களானார்கள். இந்தப் புத்தகம் பல சிறுவர்களுக்கு மட்டுமல்ல; இளைஞர்களுக்கும் வாசிக்கும் பழக்கத்தைச் சொல்லிக் கொடுத்தது. இதைப் படித்தவர்கள் பலருக்கும் ஹாரி, ஹெர்மாய்னி, ரான் ஆகியோர் படித்த ஹாக்வார்ட்ஸ் பள்ளியில் படித்து மந்திரங்களைக் கற்று அங்கு இருக்கும் நகரும் படிக்கட்டுகளில் ஏறி, மாயாஜாலத்தோடு பறக்கும் துடைப்பக் குச்சியில் (Broom stick) பறக்க வேண்டும் என்பதுதான் ஆசை.
ஹாரி பாட்டர் புத்தகம், இதுவரை சுமார் 70 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகங்களின் ஆசிரியர் ஜே.கே. ரவுலிங், மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தபோது, அதிலிருந்து மீண்டுவர இந்தப் புத்தகத்தை எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய புத்தகத்தை, புளூம்ஸ்பெரி வெளியீட்டு நிறுவனத் தலைவரின் 8 வயது மகள் ஆலிஸ் நியூட்டன்தான் முதலில் படித்து, ‘இதுபோன்ற அருமையான புத்தகத்தைத் தான் படித்ததே இல்லை’ எனப் பாராட்டினார். அவர் படித்து முடித்த பின்புதான், ஹாரி பாட்டர் புத்தகம் அச்சிடப்பட்டு வெளியானது.
ஹாரி பாட்டரின் முதல் பாகம் வெறும் 500 பிரதிகள்தான் அச்சிடப்பட்டது, ஆனால், அதன் கடைசி பாகமோ, 12 மில்லியன் (1.20 கோடி) பிரதிகள் அச்சிடப்பட்டு வெளியானது. அதன் சுவாரசியம் முதல் பாகம் முதல் கடைசி பாகம்வரை ஒரே மாதிரியாக இருந்ததுதான் இந்தப் புத்தகத்தின் வெற்றிக்குக் காரணம்.
ஹாரி பாட்டர் வெளி வந்து 20 ஆண்டுகள் ஆனதைச் சிறப்பிக்கும் வகையில் ஃபேஸ்புக் தனது ஸ்டேட்டஸில் மாயாஜாலத்தைக் கொண்டுவந்து சிறப்பித்தது.
- க. ஸ்வேதா