

‘இந்தியாவின் அரிசிக் கிண்ணம்’ எனும் அடையாளம் தஞ்சைக்கு உண்டு. அந்த தஞ்சைக்கே அடையாளம் ‘பெரிய கோயில்’ என்றழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோயில்!
எத்தனையோ ஓவியர்கள், ஒளிப்படக்காரர்கள் அந்தக் கோயிலை வரைந்து, படமெடுத்திருந்தாலும் அதன் மீதான பிரம்மிப்பு இன்னும் மாறவேயில்லை. அந்த பிரம்மிப்பைத் தன் கேமராவில் கைக்கொள்ள முயற்சி செய்திருக்கிறார் ‘கள்ளப்படம்’ படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம சந்தோஷ். ஒளிப்படக்காரர், ஓவியர் எனப் பல முகங்கள் கொண்ட இவர், பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர்.
2003-ம் ஆண்டு முதல் இப்போதுவரை தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலை ஒளிப்படமெடுத்து வருகிறார். இத்தனை ஆண்டு காலத்தில் அவர் எடுத்த படங்களில் சிலவற்றை சென்னை கிரீம்ஸ் சாலை ‘தில்மாஸ் ஸ்கொயர்’ கட்டிடத்தில் உள்ள ‘டிம்பிள்ஸ் ஆர்ட் கேலரி’யில் காட்சிப்படுத்தியிருக்கிறார். கடந்த 10-ம் தேதி தொடங்கிய இந்தக் கண்காட்சி வரும் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது.
“நான் கோயம்புத்தூர்காரன். கும்பகோணத்தில் உள்ள ஓவியக் கல்லூரியில் ஃபைன் ஆர்ட்ஸ் முடிச்சேன். 2003-ம் வருஷம், அந்த காலேஜ்ல சேர்ந்ததிலிருந்து பெரிய கோயிலைப் படமெடுத்துக்கிட்டு வர்றேன். அந்தக் கோயிலுக்குள் போகும்போது ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு விதமான அனுபவங்கள் எனக்குக் கிடைச்சுது. அந்தப் பிரமிப்பை விவரிக்க வார்த்தைகளே இல்லை. அதிகாலை, நண்பகல், பிற்பகல், மாலைன்னு வேறவேற நேரத்துல அந்தக் கோயிலைப் படமெடுத்தேன்.
சுமார் 13 வருஷம் இப்படி எடுத்த படங்களை ஒரு நாள் சும்மா திரும்ப எடுத்துப் பார்த்தேன். 9 ஆயிரத்துக்கும் மேல படங்கள் இருந்துச்சு. அற்புதமான கட்டிடக் கலைக்கு உதாரணமா இருக்கிற இந்தக் கோயிலை, நம்மோட படங்கள் மூலமா மக்கள்கிட்ட எடுத்துட்டுப் போலாம்னு ஒரு சின்ன ஆசை. அதான் இப்போ கண்காட்சியா இருக்கு. பிரபல போட்டோகிராஃபர் ரகுராய், தாஜ்மகாலை இப்படி தொடர்ந்து படமெடுத்திருக்கிறார். அந்த மாதிரி, இந்தக் கோயிலை நாடு முழுவதும் கொண்டு சேர்க்கணும் ஆசையிருக்கு!” என்பவர், ‘டூடில் மாங்க்’ எனும் இணையதளத்தையும் நடத்தி வருகிறார்.
அடுத்த கட்டமாக இந்தக் கண்காட்சி, கோவை மற்றும் மும்பையில் நடைபெறவுள்ளது.