

செல்ஃபி பித்துப் பிடித்துத் தன்னைத் தானே விதவிதமாகப் படம் பிடித்து ரசித்து, சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்து லைக்ஸ் குவிக்கும் இளைஞர்களைத் தான் பார்த்திருப்பீர்கள். ஏன் நீங்களே அப்படிப்பட்ட ஆளாக இருக்கலாம். இந்த நேரத்தில் செல்ஃபி பித்தை வேறு கட்டத்துக்குக் கொண்டு செல்பவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா?
உலக உருண்டையோடு செல்ஃபி
துபாயிலிருக்கும் புர்ஜ் கலிஃபா எனும் உலகின் மிக உயரமான கட்டிடத்தின் உச்சியில் நின்றபடி ஜெரால்ட் டொனொவன் செல்ஃபி எடுத்திருக்கிறார். இணையத்தின் வழியாக துபாய் நகருக்குள் பயணிக்க, 360 டிகிரியில் துபாய் நகரை முழுவதுமாகக் காண வழிகோலும் துபாய் 360 புராஜக்ட்டில் வேலை பார்த்துவருகிறார் நாற்பத்தி ஏழு வயதான பிரிட்டிஷ் புகைப்படக் கலைஞர் ஜெரால்ட்.
2,723 அடி உயரமுள்ள புர்ஜ் கலிஃபாவின் மேல் மாடியில் நின்றபடி துபாயை வளைத்து வளைத்துப் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கும்பொழுது திடீரென்று “நாம் ஏன் உலகத்தோடு செல்ஃபி எடுக்கக் கூடாது?” எனத் தோன்றியது. உடனே 830 மீட்டர் சுற்றளவைப் பதிக்கும் தொழில்நுட்பம் கொண்ட தன் ஐஃபோன் ஆப் பொருத்தப்பட்ட ஸ்பெஷல் பானரோமிக் காமிராவில் ‘லெட்ஸ் டேக் செல்ஃபி பூமி’ எனச் சொல்லி என்று பூமியோடு செல்ஃபி கிளிக் பண்ணிட்டாரு மனுஷன்.
1,151 பேரோடு செல்ஃபி
வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் இன்னொரு சூப்பர் செல்ஃபி புகைப்படம் பரபரப்பாகி வருகிறது. செல்ஃபி என்றாலே நான் என்னை மட்டும் படம் பிடித்துக் கொள்வேன் என்பதுதானே. சரி, இப்பதான் குரூப் ஃபீ அப்படீனு விளம்பரம் வர ஆரம்பித்திருக்கிறதே. இதனுடைய பிரம்மாண்டத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள் 1,151 டாக்கா மக்கள். நோக்கியா லூமியா 730 ஸ்மார்ட் ஃபோனில் 1,151 பேர் கொண்ட உலகின் மிகப்பெரிய செல்ஃபியைப் படம் பிடித்திருக்கிறார்கள் இவர்கள். கூடியவிரைவில் இந்த குரூப்ஃபீ கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடிக்க வாய்ப்பு இருக்கிறதாம்.
ஃபிரண்ட் ஃபேஸிங்க் கேமரா, 5 மெகா பிக்ஸல் மிட் ரேஞ்ச் கொண்ட இந்த புது மாடல் விண்டோஸ் ஃபோனுக்கு இதைக் காட்டிலும் வேற விளம்பரமே வேண்டாம்!