ஆள் பாதி ஹேர் ஸ்டைல் மீதி

ஆள் பாதி ஹேர் ஸ்டைல் மீதி
Updated on
2 min read

‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பது பழமொழி. ஆனால், முகத்தை அழகாகக் காட்டுவதில் சிகை அலங்காரத்துக்கும் பங்குண்டு. கேசத்தில் விதவிதமான அலங்காரம் காட்டப் பெண்களுக்குப் பல வழிகள் உள்ளன. ஆனால், ஒரே வகிடில் தலை முடியை வாரிக்கொள்ளும் ஆண்களுக்கு விதவிதமாகச் சிகை அலங்காரம் செய்துகொள்ள வழி இல்லை என்று நினைத்துவிடாதீர்கள். போனி டெய்ல், ஃபிரெஞ்ச் பிரெய்ட், டாப் பஃன் என்று பெண்களுக்கு இருப்பது போல டாப் நாட், அண்டர் கட், ஸ்லிம் பேக் என்றெல்லாம் ஆண்களுக்கும் நிறையச் சிகை அலங்காரங்கள் வந்துவிட்டன.

அண்டர் கட்

சில இளைஞர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்பத் தலைமுடியை அலங்காரம் செய்துகொள்ள முடியவில்லையே என அங்கலாய்ப்பார்கள். அவர்களுக்கு ஏற்ற சிகை அலங்காரம் ‘அண்டர் கட்’ (அதாவது, தலையின் பக்கவாட்டில் முடியை மழித்து மேல் பகுதியில் மட்டும் முடி வைத்திருப்பது). இந்த அலங்காரத்தைக் கோரை முடி, சுருட்டை முடி என எந்த வகையான தலைமுடி கொண்டோரும் ஹேர்கட் மூலம் அலங்கரித்துக்கொள்ளலாம். முக அமைப்புக்கு ஏற்றவாறும் இந்தத் தலை அலங்காரத்தை மாற்றிக்கொள்ளலாம்.

“இளைஞர்கள் அதிகமாக விரும்புவது ‘அண்டர் கட்’ அலங்காரத்தைதான். மிகவும் சுலபமான தலைமுடி அலங்காரம் இதுதான். கல்லூரி மாணவர்கள் எல்லோரும் இதைத்தான் தேர்வு செய்கிறார்கள்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஒரு சலூன் உரிமையாளர்.

மென் பன்

அடுத்ததாக இளைஞர்களின் விருப்பமான சிகை அலங்காரங்களில் ஒன்று ‘மென் பன்’. ஆளையும் தலையையும் பாரேன் என்று பலருக்கு ஆச்சரியத்தை அளிக்கும் சிகை அலங்காரம் இது. எல்லாருக்கும் இந்த அலங்காரம் பொருந்தும் என்று சொல்லிவிட முடியாது. இந்த அலங்காரம் தனக்குச் சரிப்பட்டு வருமா என்பதை ஓரிரு முறை தலை முடியைத் திருத்திப் பார்த்த பிறகுதான் முடிவுசெய்ய முடியும்.

ஸைட் ஃபேட்

முடி அர்த்தியாக இல்லையே என்று கவலைப்படும் இளைஞர்கள் இன்று நிறையப் பேர் இருக்கிறார்கள். கவலையே வேண்டாம், உங்களுக்கான சரியான சிகை அலங்காரம்தான் ‘ஸைட் ஃபேட்’. சுலபமான, எளிமையான, பார்ப்பதற்கு அழகான தோற்றத்தைத் தரும் அலங்காரம் இது. அலுவலகப் பணியில் உள்ளவர்கள், அலுவலகங்களில் மேல்மட்டத்தில் பணியாற்றுபவர்கள் பெரும்பாலும் இந்தச் சிகை அலங்காரத்தைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள்.

கேசத்தை அதிகம் பராமரிப்பதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ‘பாம்பொடர்’ (pombadour), ஸைட் ஷாட் & பேக் (side short and back) போன்ற சிகை அலங்காரங்கள் பொருந்தும். இது பார்ப்பதற்குக் கொஞ்சம் விசித்திரமாக இருக்கும். ஆனால், எல்லோருக்கும் எல்லா வகையான கேசம் கொண்டோருக்கும் இது பொருந்திவிடாது. அதனால் சிகை அலங்காரத்தைப் பொருத்து ஸ்டைலைப் பின்பற்றலாம். எல்லா சிகை அலங்காரத்துக்கும் ஏற்றாற்போல் தாடியும் மீசையும் இருந்தால்தான் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும்.

ஏன் சிகை அலங்காரம்?

விதவிதமான சிகை அலங்காரத்துக்கு என்ன அவசியம்? எவ்வளவு பணம் செலவானாலும் தலை முடிக்காகச் செலவு செய்யத் தயாராக இருக்கும் இளைஞர்களும் இருக்கிறார்கள். அதிகச் செலவு செய்து தலைமுடி அலங்காரம் செய்வோர் அப்படி என்ன பலனைக் கண்டுவிட்டார்கள் என்று உங்களுக்கு கேள்வி எழலாம்.

“வித்தியாசமான சிகை அலங்காரம் செய்தால்தான் அனைவரின் பார்வையும் நம் மேலே விழும், தவிர இதுதான் இப்போது ஸ்டைல், ட்ரென்ட் எல்லாம். வித்தியாசமான அலங்காரத்தைத் தேடி வைத்துக்கொள்வது சுவாரசியமாக இருக்கிறது. இன்னும் சில இளைஞர்களோ, “மற்றவர்களுக்காக இப்படிக் கேசத்தை அலங்கரித்துக்கொள்வதில்லை. மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமில்லை” என்றும் சொல்கிறார்கள்.

ஒருவரின் தோற்றத்தைத் தேர்வுசெய்ய உதவும் கேசமும் ஆடை அலங்காரமும் அவரின் அடையாளத்தின் பிரதிபலிப்புதான். ஆனால், சில நேரம் வித்தியாசமான சிகை அலங்காரங்கள் பார்ப்பவர்களுக்கு உறுத்தலாகவும் இருக்கலாம். இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் இளைஞர்களிடையே தொடரும் வித்தியாசமான சிகை அலங்கார மோகம் பெருகிக்கொண்டே போகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in