

காமிக்ஸ் உலகில் பல சூப்பர் ஹீரோக்கள் இருந்தாலும் பேட்மேனுக்கு என்று தனி இடமுண்டு. ஏனென்றால், அவர் சூப்பர்மேன், ஸ்பைடர்மேனைப்போல அசாத்திய சூப்பர் பவர் கொண்ட ஹீரோ கிடையாது. அவர் நம்மைப் போல சாதாரண மனிதன். தீவிரமான பயிற்சிகளின் மூலமே சண்டை, தற்காப்புக் கலையில் பேட்மேன் சிறந்து விளங்குகிறார்.
டேர்டெவிலும் பனிஷரும் பேட்மேனைப் போலவே சூப்பர் பவர் இல்லாத, அட்டகாசமான காமிக்ஸ் ஹீரோக்கள். இந்த மூவரையும் ஒருங்கிணைத்து இந்தியாவில் ஒரு சூப்பர் ஹீரோவை உருவாக்கி, சமகாலப் பிரச்சினைகளுக்கு எதிராகப் போராட வைத்தால் எப்படியிருக்கும் என்ற கேள்விக்குப் பதில் அளிக்கிறது, ரட்சகன் (ரக்ஷக்) என்ற கிராஃபிக் நாவல் வரிசை.
நிர்பயா வழக்கின் தாக்கம்
சமீப ஆண்டுகளில் இந்தியாவை உலுக்கிய பாலியல் வன்கொடுமை டெல்லியில் நிகழ்ந்த நிர்பயா சம்பவம். வன்முறையும் பயமும் ஒன்றோடு ஒன்றாகப் பின்னிப் பிணைந்து காணப்படும் இந்தியத் தலைநகர், ஆபத்தான ஒரு இடமாக மாறிவருகிறது. அந்த நகரவாசிகளுக்கு நம்பிக்கை அளிக்கப் படைக்கப்பட்டவர்தான் இந்த சூப்பர் ஹீரோ. இதுபோன்ற அசாதாரணமான சூழ்நிலையில் மக்களுக்கு நம்பிக்கை தேவைப்படுகிறது. அந்த நம்பிக்கையை அளிக்கும் ஒரு அடையாளமாகவே ரட்சகன் உருவாகிறான்.
யார் இந்த ரட்சகன்?
கேப்டன் ஆதித்ய ஷேர்கில்தான் ரட்சகன். பெற்றோர் மறைவுக்குப் பிறகு, தேச சேவையில் இவர் தன்னை அர்ப்பணித்துவிட, இவருடைய தங்கை அமெரிக்காவில் செட்டில் ஆகிவிடுகிறார். அவருக்கு ஒரு அமெரிக்கருடன் திருமணமாகி, பதின்ம வயதில் சாய்னா என்றொரு மகளும் இருக்கிறார். இந்திய ராணுவச் சிறப்புப் படையான மரைன் கமாண்டோ பிரிவில் பணிபுரியும் ஆதித்யா, காஷ்மீரில் ஒரு அசைன்மெண்டை முடிக்க குழுவுடன் அனுப்பப்படுகிறார். ஒரு தேர்ந்த திரைக்கதையைப்போல வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த கிராஃபிக் நாவலின் சிறப்பு, கதையின் விறுவிறுப்புதான்.
முக்கியமான தீவிரவாதி ஒருவரைத் தேடி அழிப்பதுதான் அவரது குழுவுக்குக் கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட். வந்த வேலையை அவர்கள் முடித்துவிட்டாலும், சம்பவ இடத்தில் ஒரு சிறுவனைக் காப்பாற்றும் முயற்சியில் ஆதித்யா ஒரு கையை இழந்துவிடுகிறார். அதன் பிறகு, விருப்ப ஓய்வு பெறுகிறார். இதனால் அமெரிக்காவிலிருந்து குடும்பத்துடன் டெல்லிக்குத் திரும்பும் இவரது சகோதரி, இவரைப் பிடிக்காத சகோதரியின் மகள் சாய்னா, சமூகத்துடன் ஒட்ட முடியாமல் ட்விட்டர், ஃபேஸ்புக், வீடியோகேம் என்றிருக்கும் ஆதித்யா என்று வழக்கமாகத்தான் கதை தொடங்குகிறது.
இணைத்து வைக்கும் காமிக்ஸ்
சாய்னாவின் அறையில் இருக்கும் பேட்மேன் காமிக்ஸை ஒரு நாள் படிக்க ஆரம்பிக்கிறார் ஹீரோ. ஆனால், அவர் கடைசியாக படித்த பேட்மேன் கதைவரிசைக்கும் தற்போதைய பேட்மேன் கதைவரிசைக்கும் ஏகப்பட்ட மாற்றங்கள். கதைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை விளக்கி ஆதித்யாவின் திகைப்பை சாய்னா போக்குகிறார். இப்படியாக காமிக்ஸ் இரண்டு தலைமுறைகளையும் இணைக்கிறது. அதன் பிறகு முழு நேரமும் காமிக்ஸ் கதைகளைப் படிப்பதிலேயே ஆதித்யா நேரத்தைக் கழிக்கிறார்.
அவருடைய சகோதரியும் கணவரும் வெளியே செல்லும் ஒரு நாளில் ரயிலில் சந்தித்த பெண் பத்திரிகையாளருடன் ஆதித்யா சாட்டிங் செய்துகொண்டிருக்கிறார். சகோதரி, கணவருக்கு நடக்கும் துன்பியல் நிகழ்வு அவரது வாழ்க்கையையே மாற்றிவிடுகிறது. சாட்டிங் செய்யாமல் அவர்களுடன் சென்றிருந்தால், அவர்களைக் காப்பாற்றி இருக்க முடியும் என்று நம்பி, இந்தச் சம்பவத்துக்குத் தானே காரணம் என்று கேப்டன் நம்புகிறார்.
ஒருநாள் இரவில், தனியாகவரும் ஒரு பெண்ணைக் கயவர்களிடமிருந்து காப்பாற்ற ஆதித்யா போராடுகிறார். ஒரு கையின் பெரும்பகுதியை இழந்திருந்தாலும், ஐந்து பேருக்கு எதிராகத் தனியாக அவர் போராடுவதைப் படம் பிடிக்கிறார் அந்தப் பெண். கண்ணீர் மல்க அந்தப் பெண் நன்றி சொல்ல வரும்போது, அதை எதிர்பார்க்காமல் அங்கிருந்து விலகி ஓடிவிடுகிறார்.
காயமடைந்த அவரை ஒரு கால் டாக்சி டிரைவர் காப்பாற்றுகிறார். மறுநாள் மருத்துவமனையில் சாய்னா இவரைச் சந்திக்க, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த இயலாமல் அவளுடைய அப்பா, அம்மாவின் இறப்புக்குத் தானும் ஒரு காரணமாக இருந்ததாகக் கூறுகிறார். அதன் பிறகு, சாய்னா சொல்வதிலிருந்துதான் ரட்சகனின் பயணம் விரிவடைகிறது. ரட்சகன், இந்திய காமிக்ஸ் உலகுக்கு அவசியம் தேவைப்படும் ஒரு கமர்ஷியல் ஹீரோ.