

வாழ்க்கையின் முக்கியத் தருணமான திருமணத்தில் மணப்பெண், மணமகன் ஆடை அலங்காரம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். அவ்வாறு தங்களுக்குப் பிடித்த ஆடையை விரும்பி அணிவது சாதாரணமானவர்களுக்கு எளிதாகவே இருக்கும். ஆனால் சாலைப் பயணங்களே கடினமாக இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்குச் சில நேரங்களில் தங்களுக்குப் பிடித்த உடையை அணிவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கும்.
இந்தச் சிக்கல்களுக்குத் தீர்வாக, மாற்றுத்திறனாளி மணகன், மணமகளுக்கு என பிரத்யேக ஆடை அணிவகுப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அந்த ‘டிரையோஸ் ஃபேஷன் ஷோ’வில் மாற்றுத் திறனாளி மாடல்கள் அனைவரும் தங்களுக்கான மணமக்கள் அலங்காரத்தில் வீல் சேரில் அமர்ந்து ஒய்யாரமாய் வலம் வந்தனர். அந்த ஆடைகள் எல்லாம் அவர்களுக்கு அவ்வளவு ‘மேட்சிங்’ ஆக இருந்தன. அனைத்து மதங்களைச் சேர்ந்த மணமக்கள் ஆடையையும் அஹமது அன்சாருதீன், தினேஷ்குமார் மற்றும் ஷாலினி விசாகன் ஆகியோர் வடிவமைத்திருந்தனர்.
நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஃபேஷன் டெக்னாலஜியில் படித்த ஷாலினி, இந்த ஃபேஷன் ஷோவுக்காக 12 செட் மணப்பெண் உடைகளும், பார்ட்டியில் அணியும் 10 செட் உடைகளையும் வடிவமைத்திருக்கிறார். முதல் முறையாக மாற்றுத் திறனாளிகளுக்கான மணமக்கள் உடைகளைத் தயாரித்து, அதனை மேடையேற்றிருக்கும் ஷாலினி வட இந்திய ஆடை கலாச்சாரத்தையும், தென் இந்திய உடைகளையும் இணைத்துப் புதிய ரக உடைகள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
“என் கணவர், மாமியார் இருவருமே மாற்றுத்திறனாளிகள். அவர்கள் உடை அணியும் போது அதில் உள்ள அசவுகரியங்கள் எனக்குத் தெரியும். குறிப்பாக மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண உடை என்பது இங்கு முழுமையாக வடிவமைக்கப்படுவதில்லை. கொஞ்சம் எளிமையான திருமண உடை கொண்ட வெளிநாடுகளில் பிரத்யேக மணமக்கள் ஆடைகள் உண்டு. இதையே ஒரு சவாலாக ஏற்று, அதிக அலங்காரம் கொண்ட தென்னிந்திய திருமண ஆடைகளை வடிவமைக்கத் திட்டமிட்டேன்.
மாற்றுத் திறனாளிகளுக்குத் திருமணத்தின்போது அணியும் உடையின் எடை, அளவு, சுற்றளவு என சாதாரண ஆடைகளால் ஏற்படும் அசவுகரியங்கள் என்னென்ன என்பதை அறிந்து கொண்டேன். காந்த பட்டன், நீளமான ஜிப், வெல்க்ரோ, தனியாக எளிதாகப் பிரிக்கக்கூடிய ஜாக்கெட் என இலகுவாக எடை குறைவான துணிகளில் ஆடைகளை வடிவமைத்தேன். பெண்களுக்குப் பட்டுப்புடவை, லெஹாங்கா, மிடி வகைகளிலும் தற்போது ஆடைகளை வடிவமைத்தோம். இந்த வகையான ‘அடாப்டிவ் கிளாதிங்’ முறையை தமிழ்நாட்டில் பிரபலப்படுத்த வேண்டும் என்பதுதான் என் ஆசை!” என்பவர் தொடர்ந்து மாற்றுத்திறனாளி மணமகனுக்கான பல்வேறு டிசைன் உடைகளில் கவனம் செலுத்தி வருகிறார். கணவர் விசாகனின் உதவியுடன் ஏற்கெனவே நிறைய ஃபேஷன் ஷோக்களை நடத்தியுள்ள ஷாலினிக்கு, புதிய ஃபேஷனை உருவாக்கிப் பெயர் சொல்லும் ஃபேஷன் டிசைனராக வலம் வர வேண்டும் என்பதுதான் ஆசையாம்.
மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண உடை என்பது இங்கு முழுமையாக வடிவமைக்கப்படுவதில்லை. கொஞ்சம் எளிமையான திருமண உடை கொண்ட வெளிநாடுகளில் பிரத்யேக மணமக்கள் ஆடைகள் உண்டு.