

அவனிடம் அவள், “முப்பது செகண்டுக்கு மேல பேசாம இருந்தா, எனக்கு கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பிச்சுடும். நான் நியூஸ் சேனல் ரிப்போர்ட்டர் மாதிரி மூச்சு விடாம பேசற ஆளு. நிறைய சினிமா பார்ப்பேன். பாட்டு கேட்பேன். இங்கிலீஷ் நாவல்ஸ் படிப்பேன். உங்களுக்கு என்ன மாதிரி ரசனைன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்றாள் காற்றில் பறந்த கூந்தலை நெற்றியின் மேல் ஒதுக்கியபடி.
அவளை அவன் நேற்றுதான் அவள் வீட்டில் பெண் பார்த்திருந்தான். இருவருக்கும் பிடித்திருந்தது. இறுதி முடிவெடுப்பதற்கு முன்பு, தனித்துப் பேசுவதற்காக ஆள் நடமாட்டமற்ற அந்தச் சாலையில் நடந்துகொண்டிருந்தனர். சாலையின் இரு புறமும் வரிசையாக மரங்கள்.
“உங்கள மாதிரி அழகான பொண்ணு, எது பிடிக்கும்னு சொன்னாலும், அதுதான் எனக்கும் பிடிக்கும்னு சொல்லிடுவேன். அதனால நம்ம உண்மையான ரசனை என்னன்னு தெரியாமப் போயிடும்” என்றவன் பாக்கெட்டிலிருந்து ஒரு வெள்ளை பேப்பரையும், பேனாவையும் எடுத்தான்.
“நான் மூணு கேள்வி கேட்கிறேன். அதுக்கு நம்மோட பதிலை நம்ம தனித் தனியா பேப்பர்ல எழுதி, கம்பேர் பண்ணிப் பார்ப்போம். முதல் கேள்வி, தமிழ்ல சமீபத்துல வந்த சினிமா பாடல்கள்ல, ரொம்பப் பிடிச்ச பாட்டு. அப்புறம்… சமீபத்துல நீங்க ரொம்ப ரசிச்சுப் படிச்ச இங்கிலீஷ் நாவல்… லாஸ்ட் கேள்வி... ஹனிமூன் போக விரும்புற இடம்?” என்றான் அவன்.
இருவரும் அனைத்திற்கும் ஒரே பதில்களைத்தான் அளித்திருந்தனர். “ரெண்டு பேருக்கும் ஒரே ரசனைல்ல?” என்றவன் காதலுடன் அவளுடைய கைகளைப் பிடித்துக்கொண்டான். அவள் வெட்கத்துடன், “இப்ப மழை பெஞ்சா நல்லாருக்கும்ல்ல?” என்று கூற... அடுத்த வினாடி மழை பெய்தது. இருவரும் ஓடிச் சென்று ஒரு மரத்தடியில் ஒதுங்கினார்கள். சில வினாடிகள் கழித்து அவன், “இப்ப இடி இடிச்சு, நீ பயத்துல என்னைக் கட்டிப்பிடிச்சா இன்னும் நல்லாருக்கும்ல்ல?” என்று கூற... அடுத்த வினாடி இடி இடித்தது. அவன், அவளைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள்.
மேற்சொன்ன சந்திப்பு எவ்வளவு ரொமான்டிக்காக இருந்தது? ஆனால் அத்தனையும் என்னுடைய கற்பனை. இதே போல நமது டிவி விளம்பரங்களும், திரைப்படங்களும்கூட கற்பனையில் உருவானவைதான். இந்தியாவில், பெண் அல்லது மாப்பிள்ளைப் பார்க்க ஆரம்பிக்கும் நண்பர்களின் பிரச்சினை இதுதான்.அவர்களுடைய வாழ்க்கைத் துணை, விளம்பரங்களில் வருவது போல அழகானவராக, ஒரே மாதிரியான ரசனை கொண்டவராக, எதிர்பாராமல் அன்பளிப்பு தருபவர்களாக, சந்தோஷம் ஒன்றைத் தவிர வேறொன்றையும் அளிக்காதவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அப்படி அமைவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு. எனினும் நிதர்சனத்தை உணராமல், தாங்கள் விரும்பியபடி வரன் வேண்டும் என்று முப்பது வயதிற்கு மேல் திருமணமாகாமல் இருக்கும் பலரைச் சமீப காலமாகப் பார்த்துவருகிறேன். அப்படியென்றால் வாழ்க்கைத் துணையை எப்படித் தேர்ந்தெடுப்பது?
வாழ்க்கைத் துணை தேடும்போது முதலில் கவனிக்க வேண்டிய விஷயம்... வயது வித்தியாசம். இயன்ற வரை வயது வித்தியாசம், இரண்டிலிருந்து மூன்றுக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். ஏனெனில் இக்காலத்தில் ஐந்தாண்டு இடைவெளியே ஒரு தலைமுறை இடைவெளி போலத்தான். அவர்களுடைய லைஃப் ஸ்டைலில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இது பிற்காலத்தில் பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.
அடுத்த விஷயம் ஆண்களுக்கு: நீங்கள் 25-30 வயதிற்குள் திருமணம் செய்துவிடுவது நல்லது. நீங்கள் 25, 26 வயதில் நல்ல வேலையில் செட்டிலாகி, காதல் போன்ற சிக்கல்களில் சிக்கிக்கொள்ளாமல் இருந்தால், உடனே திருமணம் செய்துகொண்டு, மூணாறு போய் ஒரே ஸ்வெட்டருக்குள் நடந்து செல்லுங்கள். ஏனெனில் தற்காலப் பெண்கள், பையன்கள் சம வயதில் அல்லது ஒன்றிரண்டு வயது வித்தியாசத்திற்குள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் ஆண்கள் 30 வயதுக்கு மேல் பெண் பார்க்க ஆரம்பிக்கும்போது வசதி, அழகு, நல்ல வேலையெல்லாம் இருந்தாலும்கூட வயது வித்தியாசத்தால் பெண் கிடைப்பது கஷ்டமாகிவிடுகிறது.
அடுத்து, அழகு. தனது வாழ்க்கைத் துணை அழகானவராக இருக்க வேண்டும் என்று ஒருவர் நினைப்பது இயல்புதான். ஆனால் இந்தத் தலைமுறையில் ஆண்-பெண் இருவரின் எதிர்பார்ப்புகளும் அதிகமாக உள்ளன. ஒரு ஆண், ‘பெண் சிவப்பாக, ஒல்லியாக, அகன்ற கண்களுடன், சீரான பல்வரிசையுடன், மாசு மருவின்றி, நவீன தோற்றத்துடன், வேலைக்குச் செல்பவராக, நன்கு வசதியானவராக இருக்க வேண்டும்’ என்று நினைக்கிறான். இது போலவே பெண்களும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் பையன் விரும்பும் பெண்ணுக்குப் பையனைப் பிடிப்பதில்லை. பெண் விரும்பும் பையனுக்கு, அந்தப் பெண்ணைப் பிடிப்பதில்லை.
முன்பெல்லாம் கொஞ்சம் முன், பின் இருந்தாலும் வீட்டில் கொஞ்சம் வற்புறுத்தினால் திருமணம் செய்துகொண்டுவிடுவார்கள். ஆனால் இப்போது ஆண், பெண் இருவரும் தங்கள் எதிர்பார்ப்புகளில் உறுதியாக இருக்கிறார்கள். இவ்வாறு இரு தரப்பும் தங்கள் எதிர்பார்ப்புகளில் உறுதியாக இருக்க, திருமணம் தாமதமாகிறது.
இந்தச் சூழ்நிலையில் எதிர்பார்ப்புகளைக் கொஞ்சம் குறைத்துக்கொள்ளலாம். அல்லது நீங்கள் விரும்பியபடி அமைவதற்கு ஒரு குறிப்பிட்ட காலவரையறை (ஆறு மாதம் அல்லது ஓராண்டு) வைத்துக்கொள்ளுங்கள். அதற்கு மேல் உங்கள் எதிர்பார்ப்பில் பிடிவாதமாக இருக்காதீர்கள். ஏனென்றால் வரன் பார்க்க ஆரம்பிக்கும்போது பலரையும் நிராகரித்துவிட்டு, இப்போது 35 வயதுக்கு மேல் திருமணமாகாமல் இருக்கும் பலரையும் நான் பார்த்துவருகிறேன்.
அழகு குறித்த எதிர்பார்ப்பால் பல திருமணங்கள் தாமதமாகின்றன. அழகான வாழ்க்கைத் துணை அமைந்துவிட்டால் மட்டும் வாழ்க்கை சந்தோஷமாக அமைந்துவிடுமா? பல அழகான நடிகர், நடிகைகளின் விவாகரத்தைப் பார்க்கும்போது, அவர்களின் அழகால் அவர்களுடைய திருமண பந்தத்தைக் காப்பாற்ற முடியவில்லை என்று தெரிகிறது. எனவே ஒரு திருமண வாழ்க்கையின் வெற்றி, அவர்களின் குணங்களில்தான் இருக்கிறது.
வீட்டில் ஏற்பாடு செய்யப்படும் திருமணங்களில், குணத்தை அறிந்துகொள்வதற்கான வாய்ப்பு குறைவு. எனவே நீங்கள் திருமணத்துக்கு ஓ.கே. சொல்வதற்கு முன்பு, நான்கைந்து முறை சந்தித்துப் பேசுங்கள். இருவரும் பேசும்போது தங்கள் பலம், பலவீனம் அனைத்தையும் பற்றி வெளிப்படையாகக் கூறிவிடுங்கள்.
எதிர்த் தரப்பை ஈர்க்க வேண்டும் என்பதற்காக நீங்கள் மிகவும் பெருந்தன்மையானவர், கோபப்படாதவர், நல்லவர், அறிவாளி என்பது போல எல்லாம் காட்டிக்கொள்ளாமல், இயல்பாக இருங்கள். உங்களை மிகவும் நல்லவர் போலக் காட்டிக்கொள்வது, பின்னாளில் சாயம் வெளுக்கும்போது பிரச்சினைகளுக்கு வழிகோலும்.
மேலும் உங்கள் குணம், நிதி நிலைமை, எதிர்பார்ப்புகள், சில விஷயங்களில் நான் இப்படித்தான் இருப்பேன் என்பதைத் தெளிவாகக் கூறிவிடுங்கள். சில விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்தால், ‘அவற்றைத் திருமணத்திற்குப் பிறகு மாற்றிக்கொள்வீர்களா?’ என்று வெளிப்படையாகக் கேளுங்கள். “அதெல்லாம் முடியாது...” என்று இருதரப்பும் உறுதியாக இருந்தால், காஃபி ஷாப்பில் இருவரும் குடித்த காபிக்குத் தனித்தனியாகக் காசு கொடுத்துவிட்டு ‘குட்பை’ சொல்லிவிடுங்கள்.
ஆனால் பலரும், “சில விஷயங்கள் ஒத்து வருது. சில விஷயங்கள் ஒத்துவரவில்லை?
என்ன பண்றதுன்னே தெரியல...” என்கிறார்கள். இது போன்ற தருணத்தில், நீங்கள் ஒரு ஆண் அல்லது பெண்ணிடம் எதிர்பார்க்கும் பத்து விஷயங்களை எழுதிக்கொள்ளவும். அதில் ஆறு அல்லது ஏழு ஒத்து வந்தால்கூட ஓ.கே. சொல்லிவிடுங்கள்.
அதெல்லாம் முடியாது… எனக்கு பத்துக்குப் பத்தும் வேண்டும் என்று அடம்பிடிக்கும் நண்பர்களே.... மிக மிக ஆதர்சமான தம்பதிகளிடையேகூட, பத்துக்கு எட்டு விஷயங்கள் ஒத்து வருவதே கடினம் என்று குடும்ப உறவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 9/10, 10/10 எல்லாம் சான்ஸே இல்லையாம். எனவே எல்லோருக்கும் எல்லாம் அமையாது என்பதைக் கவனத்தில் கொண்டு, உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேடவும்.
ஆல் தி பெஸ்ட்!
- கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: grsnath71@gmail.com