

காதல் என்பது என்ன?
ஜெனிபர் - ஆஞ்சலோவின் வாழ்க்கையே போதுமானதைச் சொல்லிவிடுகிறது.
ஆஞ்சலோ மெரண்டினோ, நியூயார்க்கின் புகைப்படக் கலைஞர். அவரது வாழ்வில் ஜெனிபர் நுழைந்த கதையை அவரே சொல்கிறார், கேளுங்கள், “முதன் முதலில் ஜெனிபரைப் பார்த்த அந்த நொடி, என் வாழ்வின் அதி அற்புத நொடி. அந்தக் கணத்திலேயே முடிவு செய்துவிட்டேன், இவள் தான் என் உலகம் என்று. வேலை கிடைத்து ஜெனிபர், மன்ஹாட்டனுக்குச் சென்றுவிட, தவித்துப் போனேன். என் அண்ணனைப் பார்க்கும் காரணத்தைச் சொல்லிக்கொண்டு அவள் இருக்கும் ஊருக்கு நானும் பயணமானேன். என் பயணத்துக்கான காரணம் ஜெனிபர் என்பது என் மனதுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.
“அவளிடம் எப்படியாவது என் மனதைச் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்தாலும், பள்ளிக்குக் கிளம்ப மறுக்கும் சிறுவன் போலவே தயக்கம் நீடித்தது. இதயத்துடிப்பு அதிகமான ஒரு நாளில் என் நேசத்தைச் சொன்னேன். ஜெனிபரும் அதையே வழிமொழிந்த போது, நாங்கள் காதலால் ஆசிர்வதிக்கப்பட்டோம்.
“அடுத்த சில மாதங்களில் ஜெனிபரின் விரல்களைத் தழுவப்போகும் நிச்சயதார்த்த மோதிரத்துடன் நியூயார்க் சென்றேன். சுற்றமும் நண்பர்களும் சிரித்திருக்க, இருவரும் கணவனும் மனைவியுமானோம். தேவதைகள் பூமாரிப் பொழிய, ஒவ்வொரு நாளும் காதலுடன் தொடங்கி, காதலுடனே கண்ணயர்ந்தது.
“ஐந்து மாதங்கள் கழிந்திருக்கும். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த என்னை ஜெனிபரின் மென்குரல் எழுப்பியது. அந்த நொடி இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது. அந்த நடுங்கிய குரலும், வேதனை நிறைந்த முகமும் என்னை உலுக்கியது. அவளுக்கு மார்கப் புற்றுநோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
“அதற்குப் பிறகுதான் எங்கள் காதலும் அன்பும் இறுக்கமானது. அவளது வலியையும் வேதனையையும் என்னால் பகிர்ந்துகொள்ள முடியவில்லை. ஆனால் அந்த நொடிகளில் அவளுடனேயே இருந்தேன். வலியால் அவள் கதறித் துடிக்கும் போதெல்லாம் என் கரங்களைப் பற்றிக் கொள்வாள். ‘என் கண்களை உற்றுப்பார், என் வலியைக் குறைக்க அதைத் தவிர வேறு வழியில்லை’ என்று அவள் சொல்லும்போது, நேசத்தின் அளவும் அதிகமாகும்.
“அவள் வதைப்பட்ட அந்த நாட்களில் காதலிக்கவும், அடுத்தவர் துயரைக் கேட்கவும், எனக்குள் இருக்கும் நம்பிக்கையை உணரவும் கற்றுக் கொடுத்தாள். நான்கு வருட தொடர்ச்சியான சிகிச்சையில் அவளும் நானும் சந்தித்த துயரம், தனிமை, வேதனை இவற்றை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. சிகிச்சை செலவுக்காக இன்ஷுரன்ஸ் கம்பெனிகளுக்குச் செல்வதே பெரும் வேலையாக இருக்கும்.
புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பலாம் என்று எளிதாகச் சொல்லிவிடலாம். அது ‘இயல்பு’தானா என்பது அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். என் ஜெனிபரும் அதை அனுபவித்தாள்” என்று ஜெனிபர் மீதான காதலுடன் விவரிக்கிறார் ஆஞ்சலோ.
சிகிச்சை முடிந்த ஒரு வருடத்துக்குள் ஜெனிபர் இறந்துவிட்டார். தன் மனைவி அனுபவித்த துயரை அருகில் இருந்து கவனித்த ஆஞ்சலோ, மார்பகப் புற்றுநோயால் அவதிப்படுகிறவர்களுக்கு உதவி புரிய தன் மனைவி பெயரால் ஒரு அமைப்பை ஆரம்பித்திருக்கிறார். தான் எடுத்த புகைப்படங்களைக் கண்காட்சிப்படுத்தி, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைத் தேவைப்படுகிறவர்களுக்குத் தருகிறார். இதற்காக ‘நாங்கள் தேர்ந்தெடுக்காத போர்க்களம்’ என்ற பெயரில் ஒரு இணையதளத்தை நடத்தி வருகிறார் ஆஞ்சலோ. “வாழ்க்கையில் சந்திக்கிற ஒவ்வொரு மனிதரையும் நேசிக்க வேண்டும் என ஜெனி சொல்லியிருக்கிறாள். அதைச் செய்வதுதானே எங்கள் காதலுக்கு அர்த்தம்?” - அர்த்தம் பொதிந்த கேள்வி கேட்கிறார் ஆஞ்சலோ.
கணவனின் அன்பில் திளைத்த நிறைவில் கல்லறையில் உறங்கிக்கொண்டிருக்கிறார் ஜெனி ஆஞ்சலோ. உயிர்ப்புடன் இருக்கிறது அவர்களது காதல்.