கலை... மனிதம் வளர்க்கும்!

கலை... மனிதம் வளர்க்கும்!
Updated on
2 min read

“எல்லோருக்குள்ளும் வரையறதுக்கான திறமைகள் இயல்பாகவே இருக்கும். சிலர் அந்தத் திறமையைத் தங்கள் குழந்தைப் பருவத்தோடு முடிச்சிக்கிறாங்க. இன்னும் சிலர் தங்கள் வாழ்க்கையின் இறுதி வரைக்கும் அந்தக் கலையுடன் பயணிக்கிறாங்க. ஓவியம்கிறது அவ்ளோதான்!”

புன்னகையுடன் பேசுகிறார் பிரவீன் துளசி. பிறப்பால் மலையாளியாக இருந்தாலும், தமிழ் மீது பேரன்பு கொண்டவர். மேட்டுப்பாளையத்துக்காரர். தற்போது சென்னையில், மென்பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். ‘பின்குறிப்புகள்’ என்ற பெயரில் வலைப்பூ ஒன்றை நடத்திவருகிறார். கவிதை, கட்டுரை, திரை விமர்சனம் என சகல தள‌ங்களிலும் இவரின் பார்வைகள் புதுமையாக இருக்கின்றன.

தன்னைப் பற்றிச் சொல்ல இவ்வளவு விஷயங்கள் இருந்தா லும், “நான் குழந்தைகள் புத்தகங்களுக்கு ஓவியம் வரையறேன்!” என்று மென்மையாகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறார்.

“முறைப்படி ஓவியம் வரையக் கத்துக்கலை. ஆனா, நேரம் கிடைக்கும் போதெல்லாம் வரைஞ்சுக்கிட்டே இருந்தேன். ஒரு கட்டத்துல, என்னோட நண்பர்கள் சில பேர் அந்த ஓவியங்களைப் பரர்த்துப் பாராட்ட, அந்த ஊக்கம் என்னை இன்னும் இன்னும் வரைய வைக்கிறது” என்பவர், இது வரை ‘காலப்பயணிகள்’, ‘ஒரே ஒரு ஊரிலே’ ஆகிய புத்தகங்களுக்கு ஓவியமும் அட்டைப் படங்களும் வரைந்திருக்கிறார். அடுத்து, ஒரு கிராஃபிக் நாவலுக்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். தன் பெரும்பாலான ஓவியங்களை கணினியில் மவுஸ் பயன்படுத்தியே வரைந்திருக்கிறார்.

“ ‘ஆர்ட் அப்ரிசியேஷன்’ அப்படின்னு ஒரு விஷயம் இருக்குங்க. கலையை நாம் ரசிக்கக் கத்துக்கணும். ஒரு ஓவியம், ஒரு கவிதை, ஒரு சிறுகதையை நீங்க எப்படிப் பார்க்கறீங்கன்றது முக்கியம். அது உங்களுக்குள் பல கதவுகளைத் திறந்து வைக்கும். ஒரு கட்டத்துல அது போதை மாதிரி ஆகிடும். அந்த போதை நல்ல போதை. உங்களை நிச்சயம் நல்ல மனிதராக்கும். கலையோட முக்கியமான கடமையே அதுதான். மனிதம் வளர்ப்பது!” என்று தன்மையாகப் பேசி விடைகொடுக்கிறார் பிரவீன்.

அவரின் கைவண்ணத்தில் உருவான சில ஓவியங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in