

அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் எழுந்து விடுகிறார் ஸ்ரீனிவாசன். சொந்தமாக வைத்திருக்கும் அவரது மாருதி வேனில் கோயம்பேடு சென்று காய்கறிகளை வாங்கி வந்து, கே. கே. நகர் அம்மன் கோயில் எதிரே, ஐந்தரை மணியிலிருந்து வியாபாரத்தை ஆரம்பிக்கிறார். 11 மணி வரை வியாபாரத்தைக் கவனித்துக் கொள்கிற ஸ்ரீனிவாசன், அதன்பிறகு அங்கிருந்து தான் வேலை பார்க்கும் அலுவலகத்துக்கு கிளம்புகிறார். அவர் ஒரு ஆடிட்டரிடம் உதவியா ளராகவும் பணியாற்றுகிறார்.
“அப்பா இல்லாத என்னை என் அம்மாதான் படிக்க வைத்தார். நானும் படிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் எம்.பி.ஏ. வரை படித்திருக்கிறேன். ஏசி அறையில் உட்கார்ந்து வேலை பார்த்தாலும் சொந்த வியாபாரம் செய்ய விரும்பினேன். சின்ன முதலீட்டோடு இந்தத் தொழிலில் இறங்கினேன். என் உழைப்பிற்கேற்ற லாபம் இதில் கிடைக்கிறது. இன்றைய இளைஞர்கள் படித்த படிப்புக்கு ஏற்றவாறு மட்டுமே வேலையைத் தேடுகிறார்கள். சரியான வேலை கிடைக்கிறவரை இதுமாதிரி காய்கறிகளை வாங்கிவந்து அவர்களது ஏரியாவிலேயே விற்று லாபம் சம்பாதிக்கலாம். படிக்கிற இளைஞர்களும் இதில் ஈடுபட்டால் பெற்றோரை எதிர்பார்க்காமல் படிப்புச் செலவுக்கு இந்த வருமானத்தைப் பயன்படுத்தலாம்” என்கிறார் ஸ்ரீனிவாசன்.