

சென்னையில் ரியல் எஸ்டேட் சந்தை கடந்த ஓராண்டாக மிதமான விலையில் 8 முதல் 10 சதவிகிதம் விலை ஏற்றத்துடன் காணப்படுவதாக இந்தியா ப்ராபர்டி.காம் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. சென்னையில் பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்குக் கடற்கரைச் சாலையில் வீடு வாங்க ஆர்வம் காட்டி வந்த மக்கள், இப்போது பூந்தமல்லி, போரூர் மற்றும் வடசென்னையில் ஆர்வம் காட்டுவதாகக் கூறுகிறது அந்த ஆய்வறிக்கை.
புறநகர்ப் பகுதியான போரூர், மேடவாக்கம், மாதவரம், பள்ளிக்கரனை, கொளத்தூர் ஆகிய இடங்களிலும் ரியல் எஸ்டேட் சந்தை உயர்ந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக வேளச்சேரியில் வீடு கட்டும் திட்டங்கள் வெற்றி பெற்றதையடுத்து வேளச்சேரி அருகே உள்ள பள்ளிக்கரனை, மேடவாக்கம், தரமணி, தாம்பரம் சாலை, மாம்பாக்கம் சாலை, மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலை, பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலை, வேளச்சேரி மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் புதிய வீடு கட்டும் திட்டங்களை ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தொடர்ந்து அறிவித்து வருகின்றன. இந்தப் பகுதிகளில் வீடுகளின் விலை தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளதை தொடர்ந்துக் காண முடிகிறது.
சென்னை விமான நிலையத்துக்கு செல்வதற்குச் சுலபமான சாலை வசதி இருப்பதும், பழைய மாகாபலிபுர சாலைக்கும், ஜி.எஸ்.டி. சாலைக்கும் இணைப்புச் சாலை இருப்பதும் இப்பகுதிகளில் ரியல் எஸ்டேட் சந்தை உயரக் காரணம் எனக் கூறுகிறது இந்தியா ப்ராபர்டி.காம் ஆய்வறிக்கை. வண்டலூர் - வேளச்சேரி இடையிலான மோனோ ரயில் திட்ட அறிவிப்பும் ரியல் எஸ்டேட் சந்தை உயர்வுக்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
வேளச்சேரியில் ஒரு சதுர அடிக்கு ரூ.5 ஆயிரம் வழங்க 50 சதவீத வாடிக்கையாளர்கள் தயாராக இருக்கிறார்கள். இதேபோல மேடவாக்கம், பள்ளிக்கரனையில் ஒரு சதுர அடிக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை வழங்கவும் வாடிக்கையாளர்கள் தயாராக இருக்கின்றனர். ஆனால், விலை உயர்வு காரணமாக மிகவும் தாமதமாகவே வீடு வாங்க வாடிக்கையாளர்கள் ஒத்துக்கொள்வதாகவும் ஆய்வறிக்கை கூறுகிறது. வேளச்சேரியில் மேல்தட்டு மக்களும், தகவல் தொழில் நுட்பத் துறையில் பணியாற்றுவோருமே வீடு வாங்க ஆர்வம் காட்டுவதாகவும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.