

பொதிகை தொலைக்காட்சி மற்றும் ‘தி இந்து’ இணைந்து வழங்கும் இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி நூற்றாண்டு விழா கவிதைப் போட்டி முடிவுகள்
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக 'தி இந்து' நாளிதழும் பொதிகை தொலைக்காட்சியும் இணைந்து 'தி இந்து' வாசகர்களுக்குப் பல்வேறு போட்டிகளை நடத்தின. அதில் 'இளமை புதுமை' பகுதியில் இளைஞர்களுக்காகக் கவிதைப் போட்டி நடைபெற்றது. பல இளைஞர்கள் தங்கள் கவிதைகளை அனுப்பியிருந்தனர். அதிலிருந்து பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்ட கவிதைகள் இவை:
முதல் பரிசு பெற்ற கவிதை
நீடூழி நீ வாழ்க!
ஆழி சூழ் உலகை
ஏழிசையால் சூழ்ந்த இசைத்தமிழே!
தேன் குரலில்
ஊன் உருக்கும்
சுப்ரபாதம்!
துயில் களைய
மனமின்றி லயித்திருக்கும்
திருமலை தெய்வம்!
ஆன்மாவின் ஜன்னல்களை
திறந்து வைக்கும்
பஜகோவிந்தம்!
இன்னல் வேளையில்
அண்ணல் மனதை
ஆற்றுப்படுத்தும் வைஷ்ணவ ஜனதோ!
இரு மனம்
ஒன்றினை ஒன்று
ஒளிரச் செய்தல்
இல்லற தர்மம்!
பாலினத் தயக்கம் களைந்து
நாரத வேடம்
நீ தரித்தாய்! மணாளரின் கரங்களில்
கல்கியைப் பரிசளித்தாய்!
குன்றின் சுடராய்
நீ நின்றொளிர
வாழ்வெலாம்
இணை உன்
துணை நின்றது!
எதிலும் எளிமை
புகழில் அடக்கம்!
போதுமெனும் பொற்குணம்
சொல்லவைத்தது குறையொன்றுமில்லை
மறைமூர்த்தி கண்ணா!
ஆத்த சக்தியோடு
ஆற்றும் பணியை
அறப்பணியாய் ஆற்றிச்செல்வோரை
போற்றிப் புகழும் வையகமே!
இசை மகளே!
காற்றினில் கீதமாய்
யுகம் யுகமாய்
வெளி எங்கிலும்
இசைத்திருப்பாய்!
- மு.வித்யா சுசிலா தேவி
மூன்றாம் ஆண்டு மின்னணுவியல் மற்றும் தொலைதொடர்புத்துறை எஸ்.என்.எஸ். பொறியியல் கல்லூரி, கோவை
இரண்டாம் பரிசு பெற்ற கவிதை
அன்பும் நீ அறிவும் நீ அழகும் நீயே
ஆண்டவன் படைப்பின் அற்புதமும் நீயே
இன்னிசையும் நீ இனிய தென்றலும் நீயே!
ஈடில்லாத் தமிழும் நீ தன்னிகரற்ற தாயும் நீயே
உலகே வியக்கும் ஓர் உன்னதமும் நீயே
ஊண் உயிரெல்லாம் உருகும் இசையும் நீயே!
என்றும் வற்றாத இசைக்கடலும் நீயே
ஏழு ஸ்வரங்களாய் இன்றும் வாழ்பவளும் நீயே
ஐந்தொழில் ஹரணின் மதுரை மகளும் நீயே!
ஒப்பில்லாத சதாசிவனின் துணையும் நீயே
ஓர் உன்னத வாழ்வின் சான்றும் நீயே
ஒளடதமாய்த் திகழும் இசைத்தேனும் நீயே!
உனக்குள் இருக்கும் உன்னதம் அதை
ஒவ்வொரு உயிரும் உணரும் அதனால்
பல்லாண்டு பல்லாண்டு உன்புகழ் பரவும்.
- பி.தாரிணி, நெய்வேலி.