

நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பின் திருநங்கைகளை மூன்றாம் பாலினம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15-ம் தேதி வெளியானது. இந்த தினம் ‘திருநங்கை நாள்’ என நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இத்தருணத்தில், திருநங்கைகள் சமூகத்துக்குப் பல்வேறு நலத் திட்டங்களையும், திருநங்கைகள் சார்ந்த புரிந்துகொள்ளலையும் சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் அளித்துவரும் புனே நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘ஸ்வஸ்தி’ அமைப்பின் இயக்குநர் ஷாமா கர்கலிடம் பேசியதிலிருந்து...
நாடு முழுவதும் செயல்படும் தன்னார்வ அமைப்புகளிலிருந்து தங்களின் அமைப்பு எப்படி வேறுபடுகிறது?
வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவி்ல், தன்னார்வலர்கள், தன்னார்வ அமைப்புகள், சேவையில் ஆர்வமுள்ள தொண்டு நிறுவனங்கள் இவற்றோடு கைகோத்துப் பணியாற்றி வருகிறது ‘ஸ்வஸ்தி’. உதவி தேவைப்படும் மக்களுக்கும் உதவி செய்யக் காத்திருக்கும் மக்களுக்கும் பாலமாகவும் எங்கள் அமைப்பு உள்ளது.
விளிம்பு நிலை மக்களுக்கு அரசு அளிக்கும் திட்டங்களை, பயன்களைக் கொண்டுசேர்த்தல், சமூகத்தோடும் அரசு நிறுவனங்களோடும் அவர்கள் சுமுகமான உறவைப் பேணுவதற்கும் உதவுகிறோம். பொது சுகாதாரம், மேலாண்மை, சமூக அறிவியல் போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் 102 உறுப்பினர்களைக் கொண்ட குழு இந்தியா முழுவதும் செயல்படுகிறது.
திருநங்கைகள், பாலியல் தொழிலாளர்களுக்குச் சமூகத்தில் எந்த மாதிரியான பாதுகாப்பை உறுதி செய்கின்றது தங்களின் அமைப்பு? திருநங்கைகளுக்கு நேரடியாகப் பாதுகாப்பு வழங்குவதை விட, அவர்களின் நலனுக்காகச் செயல்படும் தன்னார்வ அமைப்புகளோடு சேர்ந்து அந்தச் சமூகத்தின் ஒவ்வொரு தனி நபரும் நம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொள்ளும் வழியையும் பொருளாதார ரீதியாகத் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கும் உதவியாக இருக்கிறோம்.
திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வு பரவலாகச் சமூகத்தில் தற்போது ஏற்பட்டுள்ளது. ஆனால் திருநம்பிகள் குறித்து இன்னமும் சமூகத்தில் போதுமான அளவுக்கு விழிப்புணர்வு இல்லை. இதற்குத் தங்களின் அமைப்பு எத்தகைய முயற்சியை எடுத்து வந்திருக்கிறது?
சமூகத்தில் திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வு இன்னும் பரவலாக ஏற்படவில்லை என்பதே உண்மை. அந்த நிலையை எட்டுவதற்கு இன்னும் பல நாட்கள் ஆகும். தாங்கள் என்ன வகையான பாலினம் என்று அடையாளப்படுத்திக் கொள்ளத் தெரியாமல் குழப்பத்தில் இருப்பவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை நாங்கள் அளிக்கிறோம். எதிர்காலத்தில் சவால்களை எப்படி எதிர்கொள்வது என்னும் திறனையும் அவர்கள் பெறுவார்கள்.
வயதான திருநங்கைகள், பாலியல் தொழிலாளிகளுக்கு உங்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஏதேனும் உதவிகள் செய்கிறதா?
திருநங்கைகளின் நலனுக்காகச் செயல்படும் அமைப்புகளின் மூலமாக எல்லா திருநங்கைகளின் நலனுக்காகவும்தான் செயல்படுகிறோம். இவர்களில் வயதான திருநங்கைகளும், பாலியல் தொழிலிலிருந்து விலகி, வேறு தொழில்களில் ஈடுபட விரும்பும் திருநங்கைகளும் உண்டு. திருநங்கைகள் சுய உதவிக் குழுக்கள் தொடங்குவதற்கும் அதன் மூலமாக வங்கிகளிலிருந்து கடன் பெறவும் உதவுகிறோம். இவர்களில் சிலருக்கு நில உரிமைப் பட்டாவையும் பெற்றுத் தந்திருக்கிறோம். பல்வேறு திட்டங்களின் மூலம் தொழிற்பயிற்சிகளையும் அவர்களுக்கு அளிக்கிறோம். ஏறக்குறைய 2,169 திருநங்கைகள், அந்தச் சமூகத்தைச் சேர்ந்த 12 குழுக்களின் மூலமாகப் பயனடைந்துள்ளனர்.
பொதுவாகவே சமூகத்தில் விளிம்பு நிலை மக்களுக்கு ஆதரவாகச் செயல்படும் அமைப்புகளுக்கு, வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என்னும் விமர்சனம் எழும். உங்கள் நிறுவனத்துக்கும் இப்படிப்பட்ட விமர்சனம் எழுந்துள்ளதா?
சமூகத்தின் எல்லாப் பிரிவுகளில் இருப்பவர்களையும் உயர்த்துவதற்கான பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் நிறுவனங்கள், தங்களின் பணியைத் தொடர நிதி முக்கியமான விஷயம்தான். ஸ்வஸ்தியைப் பொறுத்தவரை எங்களுக்கு உள் நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்து சில அமைப்புகளிடமிருந்தும் நிதி வருகிறது. அந்த நிதி வரவுகள், செலவுகள் விஷயத்தில் எங்கள் நிறுவனம் வெளிப்படைத் தன்மையைப் பின்பற்றுகிறது. எங்களுடன் பணியாற்றும் தன்னார்வக் குழுக்கள், சேவை மனப்பான்மை கொண்டவர்கள், அரசு அமைப்புகள் ஆகியவற்றுடன் அந்தத் தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறோம். அவர்களுக்கு நாங்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். அந்தக் கடமையை நாங்கள் சரியாகச் செய்து வருகிறோம். இதுதான் எங்களின் தனித்தன்மை. இதுதான் எங்களின் பலம்.