

சென்னையில் சமீபத்தில் நடந்து முடிந்த 14-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்குக் கிடைத்த வரவேற்பைப் போன்றே 3-வது சென்னை ரெயின்போ திரைப்பட விழாவுக்கும் கிடைத்த பெரும் வரவேற்பை, கடந்த வாரத்தின் இறுதியில் பார்க்க முடிந்தது. சமூகத்தில் மாற்றுப் பாலினத்தவர்களையும், தன்பால் ஈர்ப்புக் கொண்டவர்களையும் ஆதரிக்கும் ‘சென்னை தோஸ்த்’ அமைப்பின் ஆதரவில் ஜனவரி 4-ம் தேதி தொடங்கி 8-ம் தேதி வரை, தன்பால் ஈர்ப்பு உள்ளவர்களைப் புரிந்துகொள்ள உதவும் வகையில் இந்தியாவிலும் உலகின் பல நாடுகளிலும் தயாரான 50-க்கும் மேற்பட்ட குறும்படங்களும் ஆவணப்படங்களும் திரையிடப்பட்டன.
அவற்றில் மாலினி ஜீவரத்தினத்தின் ‘லேடீஸ் அண்ட் ஜென்டில்வுமன்’ ஆவணப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. சிறந்த ஆவணப்படத்துக்கான விருதையும் இந்தப் படம் வென்றது.
தீப்பந்தங்களின் சந்திப்பு
‘லெஸ்பியன்னா என்ன தெரியுமா?’ என்னும் கேள்வி பல மனிதர்களிடம் கேட்கப்பட்டு, ‘என்னது டஸ்ட்பின்னா?’, ‘அதிலென்ன தப்பு? அது அவங்களோட சாய்ஸ்’, ‘இதில நான் எப்படி கருத்துச் சொல்ல முடியும்?’ என இப்படிப் பலரின் பதில்களைப் பதிவு செய்திருக்கின்றனர். வரலாற்று ஆய்வறிஞர்கள், சட்ட வல்லுநர்கள், எழுத்தாளர் சாரு நிவேதிதா, பத்திரிகையாளர்கள், மாற்றுப் பாலினத்தவர் போன்றோர் 377-வது சட்டப் பிரிவு எப்படி மனித உரிமைக்கு எதிராகச் செயல்படுகின்றது என்பதைப் பல்வேறு கோணங்களில் அலசியிருக்கின்றனர். நாட்டார் கலைகளில் செவி வழிக் கதையாகச் சொல்லப்படும் உயர் சாதி வகுப்பைச் சேர்ந்த பாப்பாத்தி என்னும் பெண்ணுக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கருப்பாயி என்னும் பெண்ணுக்கும் இடையே மலரும் நேசத்தைக் கவிதையாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் மாலினி.
ஆதிக்க சக்திகளின் தூண்டுதலால் கிராமத்திலிருந்து கருப்பாயியின் குடும்பம் வெளியேற்றப்படுகிறது. இந்த விஷயத்தைத் தெரிந்துகொண்ட பாப்பாத்தி, கையில் தீப்பந்தத்துடன் ஊர் எல்லையைக் கடந்து கருப்பாயியைத் தேடிப் போகிறாள். இன்னொரு தீப்பந்தத்தின் ஒளி அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்குகிறது. எதிரே தீப்பந்தத்துடன் கருப்பாயி வருகிறாள். காலையில் நீர் நிலை ஒன்றில் இருவரும் பிணமாக மிதக்கின்றனர். செவி வழிக் கதையைக் காட்சிப்படுத்தியதைத் தொடர்ந்து, இந்தியாவின் பல மாநிலங்களில் தங்களிடையேயான உறவை வெளிப்படுத்திய பெண்களின் தற்கொலைகளும் ஆவணப்படத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ‘பெண் உடல் மீதான வன்முறையையும் பெண்களின் தற்கொலைகள் குறித்தும் கேள்வி எழுப்ப முடியாத நீங்கள், பெண்களின் உறவுகளைப் பற்றி ஏன் கேள்வி எழுப்புகிறீர்கள்?’ என்னும் கேள்வியோடு ஆவணப்படம் நிறைவடைகிறது.
கனவின் நீட்சி
அப்போது நான் லயோலாவில் மீடியா ஆர்ட்ஸ் படித்துக் கொண்டிருந்தேன். தேர்வுக்காக நான் எடுத்த ‘கனவுகளும் விற்பனைக்கு’ எனும் குறும்படம், நார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் சிறந்த குறும்படத்துக்கான விருதினை வென்றது. படிப்பை முடித்துவிட்டு இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக ‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். மாற்றுப் பாலினத்தவரின் உரிமைக்காகக் குரல் கொடுத்துவரும் எனக்கு, நான் கண்ட கனவு துரத்திக் கொண்டே இருந்தது.
பொதுவாக நாம் கண்ட கனவில் 40 சதவீதம் நம்முடைய நினைவில் இருக்கும் என்பார்கள். இரண்டு வட இந்தியப் பெண்கள் மரத்தில் தூக்கில் தொங்குவது போல் ஒரு கனவு. அதன் தொடர்ச்சியாகத்தான் பெண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான உறவையும் அது தொடர்பாக நிகழும் தற்கொலைகளையும் ஆவணப்படமாக எடுக்கும் யோசனைக்கு, செயல் வடிவம் கொடுக்கத் தொடங்கினேன். அப்படி உருவானதுதான் ‘லேடீஸ் அண்ட் ஜென்டில்வுமன்’.
எங்கள் இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘நீலம்’ தயாரிப்பு நிறுவனமே தயாரித்தது. இந்த ஆவணப்படத்தைக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என எல்லா இடங்களிலும் திரையிடும் எண்ணம் இருக்கிறது. திரைப்பட விழாக்களுக்கும் அனுப்ப இருக்கிறோம். இந்தப் படத்திற்காக ஏறக்குறைய 80 லெஸ்பியன் ஈர்ப்புள்ள தமிழ்ப் பெண்களிடம் பேசினேன். ஆனால் படத்தில் இடம்பெறுவதற்கு அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் இப்போது இந்தப் படத்தைப் பார்க்கும் அவர்கள், ‘இந்தப் படத்தில் நாங்கள் இடம்பெறாமல் இருந்துவிட்டோமே’ என வருந்துகிறார்கள். ‘படத்தின் பிரதியைக் கொடு; என்னுடைய பெற்றோர்கள் இதைப் பார்த்தால் புரிந்து கொள்வார்கள்’ என்று கேட்கிறார்கள். இந்தப் புரிதல்தான் இந்தப் படத்தின் நோக்கம்” என்றார் மாலினி ஜீவரத்னம்.
இவ்விழாவில், பாலியல் சிறுபான்மையினருக்காக ஆதவரளிக்கும் நடிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு ‘ரெயின்போ தூதர்’ விருதுகள் வழங்கப்பட்டன. ‘தர்மதுரை’ திரைப்படத்தில் திருநங்கை பாத்திரத்தைக் கண்ணியமாகக் காட்சிப்படுத்திய திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி, டாக்டர் கமலா செல்வராஜ், நடிகை தீபா ராமானுஜம், ஊடகவியலாளர் அப்சரா ரெட்டி ஆகியோர் பங்கேற்று இந்த விருதுகளை வழங்கினர். சிறந்த குறும்படங்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன.