

ஜப்பானியக் கிராமம் ஒன்றில் ஹாகுயின் என்னும் ஜென் துறவி ஒருவர் வாழ்ந்துவந்தார். தூய வாழ்வை அவர் மேற்கொள்வதாக கிராமத்தினர் அவரைப் புகழ்ந்தனர்.
அவரது வீட்டின் அருகே அழகிய பெண் ஒருவர் வசித்துவந்தார். அந்தப் பெண்ணின் பெற்றோர் உணவுப் பொருள்களை விற்கும் கடையை நடத்திவந்தனர். திடீரென ஒரு நாள் அந்தப் பெண் கருத்தரித்தாள். அவளுடைய பெற்றோர்கள் அதிர்ந்துவிட்டனர்.
அவள் கருத்தரிக்க யார் காரணம் என்று கேட்டனர். தான் கருத்தரிக்க யார் காரணம் என்பதை அந்தப் பெண் சொல்லவே இல்லை. அவளுடைய பெற்றோரும் விடாமல் அவளைத் தொந்தரவு செய்னர். இறுதியில் ஹாகுயின்தான் தனது கர்ப்பத்திற்குக் காரணம் என அந்தப் பெண் கூறினாள்.
கடுங்கோபத்துடன் பெற்றோர் துறவியைச் சந்தித்து நியாயம் கேட்டனர். எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்ட ஹாகுயின் “அப்படியா?” என்று மட்டும் கேட்டாராம்.
அந்தப் பெண்ணுக்குக் குழந்தை பிறந்த பின்னர் அவளுடைய பெற்றோர் குழந்தையை ஹாகுயினிடம் கொண்டுவந்து விட்டனர். மொத்தக் கிராமமும் துறவியைத் தூற்றியது. குழந்தையை அவர் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றது. “அப்படியா?” என்று அமைதியாகக் கேட்டதுடன் குழந்தையை ஏற்றுக்கொண்டார்.
ஓர் ஆண்டு சென்றது. மீன் சந்தையில் வேலைபார்க்கும் இளைஞன் தான் குழந்தையின் தந்தை என்ற உண்மையை அந்தப் பெண் சொன்னாள்.
இப்போது பெற்றோர் துறவியைச் சென்று சந்தித்தனர். தங்களை மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டனர். குழந்தையைத் தந்துவிடும்படி கோரினர்.
துறவி குழந்தையை ஒப்படைத்தார். குழந்தையைத் தந்த போது அவர் சொன்னதெல்லாம் அப்படியா? என்பது மட்டுமே.