

அந்தக் கைதியின் கண்கள் கலங்குவதை ஓவியர் கவனித்துவிட்டார். “என்னை மன்னித்துவிடுங்கள். யூதாஸின் உருவத்தைச் சித்தரிக்க உங்கள் முகம் எனக்குத் தூண்டுதலாக இருந்தது என்று சொல்ல வந்தேன்...”
கைதி இடைமறித்தார். “அது பரவாயில்லை...” கண்களைத் துடைத்துக்கொண்டான். “நான் பாவி, யூதாஸை விடவும் பெரிய பாவி. அதில் எனக்குச் சந்தேகமில்லை. உங்கள் கண்களுக்கு நான் இப்போது யூதாஸாகத் தெரிவதிலும் ஆச்சரியமில்லை. என் வருத்தமே வேறு...”
ஓவியர் அமைதியாக இருந்தார். கைதியின் கண்கள் சூனியத்தில் நிலைபெற்றிருந்தன. அவர் உதடுகள் தன்னிச்சையாக வார்த்தைகளை உதிர்த்தன.
“முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு என்னைப் பார்த்துக் குழந்தை இயேசுவை ஒரு ஓவியர் வரைந்தார்...”
சொல்லி முடிப்பதற்குள் கைதியின் கண்கள் குளமாகிவிட்டன. முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார்.
ஓவியர் உறைந்துபோய் அமர்ந்திருந்தார். முப்பந்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த அந்தக் குழந்தை முகம் - குழந்தை இயேசுவைச் சித்தரிக்க உதவிய முகம் - அவருக்குப் பசுமையாக நினைவில் இருக்கிறது.