

அது என்ன கெட்ட பசங்க? ஆரம்பமே வில்லங்கமாக இருக்கே” என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் நீங்கள் பயப்படும் அளவுக்கு இவர்கள் சிக்கலான கும்பல் அல்ல. இசையை மட்டுமே தங்கள் உயிர் மூச்சாகச் சுவாசித்து பல தனிப்பட்ட பாடல்களைப் பாடும் பாடகர்களைக் கொண்ட இளம் இசைக்குழுதான் இது. சினிமா பாடல்கள் அல்லாத சுதந்திரமான இசையை (Independant music) வளர்க்க நினைக்கும் சென்னையைச் சேர்ந்த இசை வெறியர்கள் என்று இவர்களைச் சொல்லலாம். இசை ரசிகர்களுக்கு நல்ல இசையைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கில், கலப்படம் இல்லாத சொந்த இசையைப் படைத்துவருகிறார்கள். பெரும்பாலும் சினிமா பாடல்களை மட்டுமே கொண்டாடிய நமக்கு இந்த இண்டிபென்டண்ட் மியூசிக் புதுமைதான்.
நாம் அதிகம் கவனிக்காத ‘ஸ்டிரீட் மியூசிக்’ என்ற கலையையும் வளர்க்கிறார்கள். அதற்காக அவர்கள் மேற்கொண்ட முதல் முயற்சியிலேயே மக்களிடம் அதிக வரவேற்பையும் பெற்றுள்ளனர். சென்ற வாரம் அண்ணா நகர் டவர் பார்கில் இவர்கள் செய்த இசை நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். எப்போதும் நடக்கும் இசை நிகழ்ச்சிகளைப் போல அல்லாமல், முற்றிலும் புதிய பாதையில் நடந்தது இந்த நிகழ்ச்சி. ஒலிபெருக்கிகள், மைக் போன்ற எந்த மின் பொருட்களையும் பயன்படுத்தாமல் இசை மழை பொழிந்தார்கள். முறையாக இசை தெரிந்தவர்கள் மட்டும்தான் பாட வேண்டும் என்ற கட்டாயத்தை உடைத்து எல்லோரையும் பாடவைத்தார்கள் இந்த ‘கெட்ட பசங்க’.
தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் ராப் பாடலில் அசரவைத்த இவர்கள், குறிப்பிட்ட இசை வகையை மட்டும் எடுத்துக்கொண்டு பாடாமல் ராக், பாப், மெல்லிசை என்று எல்லா ரகத்திலும் தாங்களே எழுதி இசையமைத்த பாடல்களைப் பாடி அசத்தினார்கள். வெவ்வேறு கல்லூரிகளில் படித்துக்கொண்டு இசையால் ஒன்று சேர்ந்தவர்கள் இவர்கள்.
இசை ஆர்வம் உள்ள பத்து நண்பர்கள் சேர்ந்த குழுதான் ‘கெட்ட பசங்க’. எல்லோரும் எஸ்.ஆர்.எம், சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் படித்திருக்கிறார்கள். கல்லூரிக்குச் செல்வதைவிட ஒன்று சேர்ந்து இசை அமைத்துப் பாடிய நாட்கள் தான் அதிகம். பல இசை நிகழ்ச்சிகளுக்குச் சென்றபோது, எல்லோரும் சினிமா பாடல்களை மட்டுமே பாடிவருவதை பார்த்ததால் மனதில் ஒரு வெறி உருவானது என்றும், எனவே சினிமா பாடல்களைத் தவிர்த்து சொந்தப் பாடல்களை எழுத ஆரம்பித்தோம் என்றும் கூறுகிறார்கள்.
“யூ டியூப்பில் இசையைப் பகிர்ந்தோம் நல்ல வரவேற்பும் கிடைத்தது” என்று திருப்தியுடன் சொல்கிறார் இக்குழுவின் ராமகிருஷ்ணன். ‘நீ மட்டும்’ என்று இவர்கள் இயக்கத்தில் வெளிவந்த பாடல் யூ டியூபில் நல்ல ஹிட்!
“பாடும் ஆர்வம் இருப்பவர்களுக்கு நல்ல மேடை கிடைப்பதில்லை, அதனால்தான் எங்கள் இசையைப் பொது இடங்களில் பாட ஆரம்பித்தோம். டவர் பார்க்கில் நாங்கள் செய்த நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த ராப் பாடும் கலைஞர்கள் பலர் கலந்துகொண்டார்கள். நாங்கள் யாரையும் தனியாகப் போய் அழைக்கவில்லை, ஃபேஸ்புக்கில் பார்த்து அசாமைச் சேர்ந்த கல்லூரியில் படிக்கும் இரு கிட்டாரிஸ்டுகள் வந்தார்கள், ஜாக்ஸ்டையில் (Jackstyles) என்ற ராப் பாடகரும் கலந்துகொண்டார், சென்னையைச் சேர்ந்த Ball Point Bananas, Stevie The Band போன்ற சில இசைக் குழுக்களும் கலந்து கொண்டன”என்கிறார் ‘கெட்ட பசங்க’ குழுவின் ஏபல் டெர்ரிக்.
கலைஞர்கள் தங்கள் படைப்புத் திறனைத் தெருக்களில் வெளிப்படுத்தும்போது, அந்தக் கலை நேரடியாக மக்களைச் சென்றடையும். அப்படி உருவானவைதான் ஸ்டிரீட் ஆர்ட், ஸ்டிரீட் மியூசிக் போன்றவை. மேலை நாடுகளில் ஒரு கலைஞன் தெருக்களில் சுதந்திரமாக பாடவோ இசைக்கவோ முடியும், ஆனால் நம் நாட்டில் பொது இடங்களில் பாடுவதற்கே பல சிக்கல்கள் இருக்கின்றன. இருப்பினும் இந்த இளம் படையினர் தடைகளைத் தகர்த்துப் பாடிவருகிறார்கள்.
“எங்கள் முதல் முயற்சிக்கே நல்ல பாராட்டு கிடைத்தது. இதே போன்று இன்னும் பல பார்க், பீச்களில் பாடுவோம். இசை ஆர்வம் இருக்கும் அனைவரும் எங்களோடு கலந்துகொள்ளலாம், இசைக்கு எந்தத் தடையும் இல்லை” என்று உற்சாகமாகச் சொல்கிறார் இக்குழுவைச் சேர்ந்த ஜெஷ்வா.