

நவநாகரிக இளைஞர்கள், யுவதிகளின் விருப்ப உணவு என்ற அடையாளம் பெற்றுவிட்டது பீட்ஸா. லேட்டஸ்ட் உணவுகளின் பட்டியலில் இடம்பிடித்துவிட்ட இந்த உணவு குழந்தைகள், பெரியவர்களையும்கூட விட்டுவைக்கவில்லை. பீட்ஸா, பிசா, பிட்சா, பிச்சா என விதவிதமான பெயர்களில் அழைக்கப்படும் இது, உலகில் மிகவும் அரதப் பழசான உணவு வகைகளில் ஒன்று!
பீட்ஸா என்பது இத்தாலிய நாட்டு உணவு. ‘பின்சா’ என்ற லத்தீன் மொழியிலிருந்து பீட்ஸா வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. கி.மு. 3-ம் நூற்றாண்டிலேயே இந்த உணவை கிரேக்கர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
சுடுமண் அடுப்பில் மிகவும் கெட்டியாகத் தட்டையான ரொட்டியைச் செய்து கிரேக்கர்கள் சாப்பிட்டதுதான் இன்றைய நவீன பீட்ஸாவுக்கு முன்னோடி. கி.மு.வில் தொடங்கி கி.பி. வரை இந்த பீட்ஸா காலம்காலமாகச் சாப்பிடப்பட்டு வந்தாலும், திடீரென்று உலகப் புகழ்பெற்றது கி.பி. 1800-களில்தான். ‘ஏழைகளின் உணவு’ என்று இத்தாலியில் இதை அழைத்திருக்கிறார்கள். இன்றோ அது வசதி படைத்தவர்களின் உணவாகிவிட்டது.
சரி, இந்த உணவு உலகப் புகழ் பெற்றது எப்படி? அதற்கு ஒரு சுவையான ஃபிளாஷ்பேக் இருக்கிறது.
இத்தாலியின் ராணியாக இருந்தவர் மெர்கரிட்டா. இவர் தன் கணவர் ராக் உம்பர்டோவுடன் நேப்பிள் நகருக்கு ஒருமுறை வந்தார். அரண்மனைக்கு வந்ததும், வழக்கமான உணவாக இல்லாமல் வித்தியாசமான உணவைச் செய்துதரும்படி அரண்மனையின் தலைமை சமையல் கலைஞர் ரஃபேலுக்கு உத்தரவிட்டார்.
இத்தாலியிலேயே நேப்பிள் நகரில்தான் பீட்ஸா ரொட்டி மிகவும் பிரபலமாக இருந்தது. உழைக்கும் மக்கள் இதை விரும்பிச் சாப்பிட்டு வந்தார்கள்.
வித்தியாசமான உணவு என்றதும் சமையல் கலைஞருக்கு பீட்ஸா ரொட்டிதான் ஞாபகத்துக்கு வந்தது. ஏழைகள் சாப்பிடும் உணவு போல இல்லாமல், கொஞ்சம் மாற்றிச் செய்ய முடிவு செய்தார்.
தட்டையான ரொட்டியைச் செய்து அதில் இறைச்சி, பாலாடைக்கட்டி, தக்காளி, இலைதழைகள் ஆகியவற்றை ரொட்டியின் மீது பரப்பித் தயார் செய்தார். தக்காளி, பாலாடைக்கட்டி, இலைகள் ஆகியவற்றை இத்தாலியின் தேசியக் கொடி வடிவத்தில் அடுக்கினார். இந்த உணவை ராணியிடம் கொடுத்தார். அதன் ருசி ராணிக்குப் பிடித்துப்போனது. ஒரு பிடி பிடித்தார்.
ராணி விரும்பிச் சாப்பிட்ட அந்த உணவு இத்தாலியில் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரபலமானது. போதாக்குறைக்கு அதற்கு ‘மெர்கரிட்டா பீட்ஸா’ என ராணியின் பெயரை வைத்து அழைக்கவும் தொடங்கினார்கள்.
இப்படி இத்தாலியின் பிரபலமான பீட்ஸா, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகைச் சுற்ற ஆரம்பித்தது. இத்தாலிக்குள் நுழைந்த அமெரிக்க, ஐரோப்பியப் படை வீரர்கள் மூலம் பீட்ஸா அந்த நாடுகளுக்கும் சென்றது. இப்படி உலகம் முழுவதும் பிரபலமானது பீட்ஸா.
1991-ம் ஆண்டில் இந்தியாவில் நடந்த பொருளாதாரச் சீர்திருத்தம், உலகமயமாக்கல் காரணமாக இங்கேயும் பீட்ஸா காலடி எடுத்து வைத்தது.
ஒவ்வொரு நாட்டுக்கும் ஏற்றாற்போல பீட்ஸாவில் வைக்கப்படும் உணவு வகைகள் மாறுகின்றன. இந்தியாவில் பெரும்பாலும் தந்தூரி சிக்கன், பன்னீர் ஆகியவற்றை வைத்தும் காரமாகவும் பீட்ஸாவைத் தருகிறார்கள். இன்று இந்திய நகரங்களில் பீட்ஸா கார்னர்கள் இல்லாத இடமே இல்லை.
இந்தியாவில் பாரம்பரிய உணவை எல்லோரும் மறந்துவரும் நிலையில், உலகின் மிகவும் பழைய உணவுகளில் ஒன்றான பீட்ஸாவுக்குக் கொடிபிடிப்பது ‘செம காமெடி’ இல்லையா?