

அன்புக்குரியவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்த பரிசுப் பொருட்கள் கொடுத்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. இன்றைய இளைஞர்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் பிறந்த நாள், திருமண நாள் போன்ற முக்கியமான நாட்களில், அவர்களுக்கு ஆச்சரியங்களைப் பரிசளிப்பதிலும் தங்க ளுடைய அட்டகாசமான படைப்பாற்றலை வெளிப்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.
இப்படிப் பிரியமானவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்த நினைப்பவர்களுக்கு உதவுவதற்காகப் பல ஆச்சரியங்களைத் திட்டமிடும் நிறுவனங்கள் செயல்படுகின்றன. சென்னையில் அப்படி இயங்கிவரும் ஒரு நிறுவனம்தான் ‘சர்ப்ரைஸ் மச்சி’ (Surprise Machi). இந்நிறுவனம் ஷாஹுல் ஹமீது, பாக்யா பிரபு என்ற இரண்டு இளம் புதுமை விரும்பிகளால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டிருக்கிறது.
‘ஃப்ளாஷ்மாப்’பில் பூக்கும் அன்பு!
ஆச்சரியங்களில் பலவிதங்கள் இருக்கின்றன. அதில் உங்களுடைய அன்புக்குரியவருக்கு ஏற்ற ஆச்சரியமாக எது இருக்கும் என்பதைத் தேர்ந்தெடுக்கப் பல பிரத்யேகமான வாய்ப்புகளை வழங்குகிறது ‘சர்ப்ரைஸ் மச்சி’ குழு.
“நண்பர்களின் பிறந்தநாளுக்கு ‘ஸ்க்ராப் புக்’ செய்துதருவது, ‘பிராங்க்ஸ்’ செய்வது எனக்குப் பிடித்தமான விஷயம். என்னுடைய நட்பு வட்டத்தில் இதற்கு எக்கச்சக்க வரவேற்புக் கிடைத்தது. அதுதான் இதையே ஏன் ஒரு தொழிலாக முன்னெடுத்துச் செல்லக் கூடாது என்ற எண்ணத்தை எனக்கு உருவாக்கியது. என் நண்பர் ஷாஹுலுக்கு இந்த ஐடியா பிடித்துபோக, இருவரும் சேர்ந்து ‘சர்ப்ரைஸ் மச்சி’யைத் தொடங்கினோம்” என்கிறார் பாக்யா பிரபு. விளம்பரத் துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த இவர், தற்போது பலருக்கும் ஆச்சரியங்களைப் பரிசளித்துக்கொண்டிருக்கிறார்.
இவர்களுடைய இணையதளத்தில் ஆச்சரியங்கள் அளிப்பதற்கான எழுபத்தைந்து தயாரிப்புகள் இருக்கின்றன. அதுதவிர, தனிப்பட்ட விருப்பங்களுக்கேற்ப ஆச்சரியங்கள் அளிக்க ‘சர்ப்ரைஸ் குரு’ என்ற பிரிவில் ஆலோசனைகளும் சொல்கிறார்கள்.
“இப்போது ஆச்சரியமளிப்பதற்கு ‘ஃப்ளாஷ்மாப்’(FlashMob) வாழ்த்துகளைப் பெரும்பாலானோர் விரும்பித் தேர்வுசெய்கிறார்கள். அதிலும் குறிப்பாக, ஆண்கள் இதை அதிகம் விரும்புகிறார்கள். பெண்கள் ஆச்சரியங்களைத் தேர்வுசெய்யும்போது சிறந்த நினைவுகளைப் பரிசளிக்க விரும்புகிறார்கள். அத்துடன், திருமணத்தன்று மணமக்களுக்கு ஆச்சரியப் பரிசளிக்கவும் நிறைய பேர் ‘ஃப்ளாஷ்மாப்’பைத் தேர்ந்தெடுக்கின்றனர்” என்று இன்றைய பரிசளிக்கும் போக்கைப் பற்றி விளக்குகிறார் பாக்யா.
அடடே ஆச்சரியங்கள்!
‘ஃப்ளாஷ்மாப்’ மட்டுமல்லாமல் அசத்தலான பல ஆச்சரியங்களை இவர்களுடைய பட்டியலில் காண முடிகிறது. உங்கள் அன்புக்குரியவர்களுடன் படகு சவாரி (Yacht ride), தனித்துவமான ஒரு திரை அனுபவம், பிடித்த இடத்துக்கு சாகசப் பயணம், பிரபல பத்திரிகை அட்டையில் ஒளிப்படம், உங்களுடைய ‘ஸ்டோரி போர்ட்’, கேலிச்சித்திர அட்டைகள், ‘டின்னர் டேட்டில் ட்ரஷர் ஹண்ட்’ என இந்த ஆச்சரியங்களின் பட்டியல் நீள்கிறது.
“சிறப்பான தருணங்களைப் பரிசளிப்பது மட்டுமல்லாமல் நண்பர்களைப் பிராங்க்ஸ் (குறும்புகள்) செய்து ஆச்சரியப்படுத்துவதையும் இன்று நிறைய பேர் விரும்புகிறார்கள். இந்தக் குறும்பான ஆச்சரியங்களை அளவுக்கு மீறிப் போகாமல் எச்சரிக்கையுடன்தான் வடிவமைக்கிறோம். அத்துடன், வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்களுடைய அன்புக்குரியவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க எங்களுடைய ‘ஃஆப்ஷோர் லவ்’ ஆச்சரியத்தை அதிக அளவில் தேர்வுசெய்கிறார்கள்” என்று சொல்கிறார் அவர்.
‘சர்ப்ரைஸ் மச்சி’யில் விரைவில் மேலும் சில புதுமையான ஆச்சரியங்களையும் இணைக்கவிருக்கிறார்கள். அதில் பயண விரும்பிகள், புத்தகக் காதலர்கள் எனத் தனித்தனிப் பிரிவில் ஆச்சரியங்களை அறிமுகப்படுத்தவிருக்கிறார்கள். “இந்த ஆச்சரியங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதில் பல விதமான சவால்களையும் நாங்கள் எதிர்கொள்ளவே செய்கிறோம். சில நேரங்களில் ‘ஃப்ளாஷ்மாப்’ செய்வதற்கு அனுமதி கிடைக்காது. அத்துடன், ‘சர்ப்ரைஸ்’ கொடுக்கச் சொல்லும் நபருக்கும், பெறுபவருக்குமிடையே ஏதாவது புதிய பிரச்சினை வந்துவிட்டதென்றால் அதை எங்களுக்குத் தெரியப்படுத்தாமல் விட்டுவிடுவார்கள்.
அந்தச் சமயங்களில் பரிசுகளுடன் எங்களைத் திருப்பியனுப்பி விடுவார்கள். இது எல்லா வற்றையும் மீறி எங்களைத் தொடர்ந்து இயங்கச் செய்வது எதுவென்றால், அன்புக்குரியவர்களின் ஆச்சரியங்களால் நெகிழ்ந்துபோய் ஆனந்தக் கண்ணீருடன் எங்களுக்கு நன்றி தெரிவிக்கும் அந்தக் கண்கள்தான்” என்று உற்சாகமாகச் சொல்கிறார் பாக்யா.
இந்த உலகம் அன்பால் இயங்குகிறது. அன்புக்குரியவர்களின் முகத்தில் மலரும் புன்னகைக்கு ஈடுஇணையாக எதுவும் இருக்க முடியாது. அந்தப் புன்னகையை மலரச் செய்யும் இந்த ‘சர்ப்ரைஸ் மச்சி’ குழுவுக்கு நிச்சயமாக ஒரு பெரிய ‘ஃப்ளாஷ்மாப்’பில் வாழ்த்துகள் தெரிவிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு: >www.surprisemachi.com