

இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் சேர்த்து ஒலிப் புத்தகங்களாகத் தமிழ்ச் சமூகத்துக்கு அளிக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர் பம்பாய் கண்ணன். ஏறக்குறைய 5 ஆயிரம் பக்கங்களுக்கும் மேற்பட்ட வரி வடிவங்களை ஒலிப் புத்தகமாக்கிய அனுபவம் இவருக்கு உண்டு.
லட்சக்கணக்கான வாசகர்களால் கொண்டாடப்பட்ட கல்கியின் சரித்திர நாவல்களான `சிவகாமியின் சபதம்’, `பொன்னியின் செல்வன்’ ஆகியவற்றை ஒலிப் புத்தகங்களாக இளைய தலைமுறைக்கு நவீன வடிவில் வழங்கியிருக்கிறார். தொடர்ந்து கல்கியின் `பார்த்திபன் கனவு’ தொடரை ஒலிப்புத்தகமாக்கும் முயற்சியில் இருக்கும் அவரைச் சந்தித்தோம்.
ஒலிப் புத்தகம் தயாரிக்கும் எண்ணம் தோன்றியதற்கு என்ன காரணம்?
என்னுடைய அபிமான எழுத்தாளர் கல்கி. இன்றைக்கு நடைமுறையில் இருக்கும் பல `இஸ’ங்களை வெகு இயல்பாகத் தன்னுடைய படைப்பில் மிளிரவைத்தவர் அவர். இன்றைய தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் நவீன வடிவத்தில் அவரின் படைப்புகளைக் கொண்டுபோக வேண்டும் என நினைத்தேன்.
உங்களின் நாடக அனுபவம் இந்தப் பணியை எந்தளவுக்கு எளிமையாக்கியது?
நாடக அனுபவத்தைவிட அவரின் கதைகளை வாசித்த அனுபவமே எனக்குப் பேருதவியாக இருந்தது. அவர் ஒரு காட்சியை வர்ணிக்கும் போது நம் மனக்கண்ணிலும் அந்தக் காட்சி விரியும். நாமே பாத்திரங்களாகி கதை மாந்தர்களுடன் பயணப்படுவது போல் தோன்றும். இந்த வாசிப்பு அனுபவம்தான் என்னுடைய பணியை எளிதாக்கியது.
இந்த முயற்சிக்கு உங்களுக்கு உதவியது யார்?
சிவகாமியின் சபதம் நூலை முதலில் ஒலிப்புத்தகமாக்கினேன். அதைக் கேட்டுவிட்டு பொன்னியின் செல்வனை ஒலிப் புத்தகமாகத் தயாரிக்க முன்வந்தவர் சி.கே. வெங்கட்ராமன். ஏறக்குறைய 2,200 பக்கங்கள் உள்ள பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தை 78 மணி நேரம் ஒலிக்கும் வகையில் 3 டிவிடிகளில் கொண்டுவந்துள்ளோம். 60 கலைஞர்களுக்கு மேல் இந்த ஒலிப்புத்தகத்தில் பேசியிருக்கிறார்கள்.
முன்பெல்லாம் வானொலியில் ஞாயிறுதோறும் ஒலிச்சித்திரம் போடுவார்கள். அதன் இன்னொரு வடிவமா இது?
ஒலிப் புத்தகம் என்றாலே பலரும் மைக்கின் முன்னால் கதையைப் படித்துவிடுவது… அவ்வளவுதானே… என்று நினைக்கின்றனர். அப்படி யில்லை. வெறுமனே நாம் கதையைப் படிப்பதற்கும் அதை இன்னொருவரைக் கொண்டு பேசவைத்துப் பதிவு செய்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.
ஒரு காட்சியை வர்ணிப்பது, கதையின் போக்கைக் கோடிட்டுக் காட்டுவது போன்றவை கதை சொல்லியின் உத்திகள். இந்தக் கதை சொல்லியின் குரல் முடியும் இடத்தில் கதாபாத்திரங்கள் பேசிக்கொள்ளத் தொடங்கும். குரல்களுக்குள் நடக்கும் இந்தத் தொடர் ஓட்டம்தான் இந்த ஒலிப் புத்தகம்.
இதில் நீங்கள் சந்தித்த சவால்கள்?
தமிழைச் சரியாக உச்சரிக்கத் தெரிந்த தமிழர்களைத் தேர்ந்தெடுத்துப் பேசவைப்பதே சவாலாக இருந்தது. பாத்திரத்தின் தன்மை புரிய, இந்தக் கதையை ஒரு முறையாவது படித்த அனுபவம் இருக்க வேண்டும். இப்படிப்பட்டவர்களைத் தேடித் தேடிப் பயன்படுத்தியிருக்கிறோம்.
உதாரணத்துக்கு, வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை எடுத்துக் கொண்டால், அவன் சில இடத்தில் வீரனாக இருப்பான். சில இடத்தில் கோமாளியாக நடந்துகொள்வான். தண்ணீரைக் கண்டாலே பயப்படுவான். இப்படிப் பல பரிமாணங்களை அந்தக் கதாபாத்திரத்திற்குக் கல்கி அளித்திருப்பார். இப்படிப் பாத்திரத்தின் தன்மை உணர்ச்சியை குரலில் கொண்டுவருபவர்களை மிகவும் சிரமப்பட்டே தேடிக் கண்டுபிடித்தோம். அப்படித் தேர்ந்தெடுத்தவர்களில் வந்தியத்தேவனுக்கு இளங்கோ, அருள்மொழிவர்மனுக்கு ஆனந்த், ஆதித்த கரிகாலனுக்கு வெற்றி, பெரிய பழுவேட்டரையருக்கு வேலுச்சாமி, நந்தினிக்கு பாத்திமா பாபு ஆகியோர் மிகச் சிறப்பாக குரல் கொடுத்திருந்தனர்.
கதையின் சூழலுக்கு ஏற்ற சிறப்பு சப்தங்களுடன் இசையைச் சேர்த்திருக்கிறோம். பொன்னியின் செல்வன் ஒலிப் புத்தகத்தில் 30 பாடல்களும் இருக்கின்றன. அதில் 15 பாடல்களை பின்னணி இசையோடு பதிவு செய்திருக்கிறோம். கல்கியே சில பாடல்களை எழுதியிருக்கிறார். சிலப்பதிகாரம், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் பாடல்களை கதையின் போக்குக்கு ஏற்ப கல்கி கதையில் புகுத்தியிருக்கிறார். அவற்றின் சுவை குன்றாமல் பதிவு செய்திருக்கிறோம்.
உங்களின் ஒலிப் புத்தகங்களுக்கு, நீங்களே எதிர்பார்க்காத வரவேற்பு கிடைத்திருக்கிறதா?
சமீபத்தில் மாநிலக் கல்லூரியில் பார்வைக் குறைபாடு உள்ள மாணவர்கள் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் ஒலிப் புத்தகங்கள் பற்றிய அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்கள், பேராசிரியர்களின் உற்சாகம் என்னை அசர வைத்தது.
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தவர்கள் அதைப் பற்றி முழுவதும் தெரிந்துகொண்டு கேள்விகளைக் கேட்டது சிறப்பு. ஒவ்வொரு காதாபாத்திரம் குறித்தும் அந்த பாத்திரத்துக்குக் குரல் கொடுத்த கலைஞரைப் பற்றியும் விலாவாரியாக அலசிக் கேள்விமேல் கேள்வி கேட்டார்கள். கதைகளும் ஒலிப்புத்தகம் குறித்த நிகழ்வுகளும் என் மனதில் ஆழமாகப் பதிந்திருந்ததால் பதில் சொல்லி அவர்களைத் திருப்திப்படுத்த முடிந்தது. கதைகளை அவர்கள் அலசிய விதம் அவர்களின் ஆழ்ந்த ஆர்வத்துக்கும் அறிவுக்கும் சான்றாக இருந்தது.
இந்த ஒலிப் புத்தகங்கள் ஒரு வகையில், உங்களைப் போன்றவர்களை மனதில் வைத்துக்கொண்டுதான் தயாரிக்கப்பட்டன என்றவுடன் அரங்கமே அதிர்ந்தது. பிறவிப்பயனை அடைந்தேன்.
பார்த்திபன் கனவு திரைப்படமாகவே வந்திருக்கிறதே… ஒலிப்புத்தகத்தில் திரைப்படத்தில் இல்லாத சிறப்பு ஏதாவது இருக்கிறதா?
கல்கியின் பார்த்திபன் கனவு கதையில் நரசிம்மவர்ம பல்லவர் காதலை எதிர்ப்பார். அவரே சிவனடியாராகக் காதலர்களை ஆதரிப்பார். கதையில் சிவனடியார் யார் என்ற எதிர்பார்ப்பைக் கடைசிவரை காப்பாற்றியிருப்பார் கல்கி. இந்த இரண்டு பாத்திரங்களையும் திரைப்படத்தில் ரங்கா ராவே செய்தார். அதனால் திரைப்படத்தில் அந்த எதிர்பார்ப்பு நீடிக்கவில்லை. சினிமாவில் பாத்திரங்களில் கொடுக்காத வித்தியாசத்தை, குரலின் மூலம் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொடுத்திருக்கிறோம். இதுதான் சிறப்பு. இதன் மூலம் கதையில் கல்கி காப்பாற்றிய சஸ்பென்ஸை நாங்கள் எங்களின் ஒலிப்புத்தகத்திலும் காப்பாற்றியிருக்கிறோம். இதோடு சோலைமலை இளவரசி, மோகினித் தீவு போன்ற கல்கியின் படைப்புகளையும் பார்த்திபன் கனவு ஒலிப்புத்தகத்தோடு இணைத்துத் தரவிருக்கிறோம்.
நேதாஜி, ஜெர்ரி, அனன்யா மகாதேவன், ஸ்ரீவித்யா, பி.டி.ரமேஷ் ஆகியோர் கதையின் முக்கிய கதாபாத்திரத்துக்கான குரல்களைக் கொடுக்கின்றனர். இவர்கள் அனைவருமே வெவ்வேறு துறைகளில் இருப்பவர்கள். பல கட்டங்களில் குரல் தேர்வு நடத்தி இவர்களைத் தேர்ந்தெடுத்தோம். இவர்களைத் தவிர பார்வைத் திறனற்ற மாணவர்கள் சிலரையும் இந்த ஒலிப் புத்தகத்திற்காகக் குரல் கொடுக்கவைத்திருக்கிறோம்.