அன்பை இசைப்படுத்தும் ப்ரணயிதா!

அன்பை இசைப்படுத்தும் ப்ரணயிதா!
Updated on
2 min read

பாசம், நேசம், கருணை, இரக்கம் இப்படி அன்பின் சகல பரிமாணங்களையும் சம்ஸ்கிருதத்தில் வெளிப்படுத்தும் வார்த்தை ப்ரணயிதா. இந்தப் பெயரிலேயே ஓர் இசை ஆல்பத்தைக் கொண்டு வந்திருக்கிறார் பேராசிரியர் ஸ்ரீதர் நடராஜன். சென்னையின் புகழ்பெற்ற வணிகக் கல்லூரி முதல்வரான ஸ்ரீதருக்கு அவரின் கல்லூரி நாட்களில் ஆதர்சமான இசையமைப்பாளர்களாக இருந்தவர்கள் சலீல் சௌத்ரியும் இளையராஜாவும்.

1980-களில் காதில் தேன் பாய்ச்சிய மெல்லிசை பாணியில், ‘ப்ரணயிதா’ ஆல்பத்தில் அன்பை இசைப்படுத்தியிருக்கிறார் ஸ்ரீதர் நடராஜன். பாடல்களை சென்னை கல்லூரி ஒன்றில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் விஜயா எழுதியிருக்கிறார்.

ஐ.ஐ.டி.யில் படிக்கும் போதே நண்பர்களுடன் சேர்ந்து இசை நிகழ்ச்சிகளை நடத்திய அனுபவங்கள் இன்னமும் பசுமையாக நினைவில் இருக்கின்றன. அன்று தொடங்கிய இசைப் பயணத்தின் தொடர்ச்சியாகத்தான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக நான் ‘ரெமினிசென்ஸ்’ எனும் இசை ஆல்பத்தை வெளியிட்டேன். இதோ இப்போது ‘ப்ரணயிதா’வின் மூலம் உங்களை மீண்டும் சந்திக்கிறேன் என்றார் ஆல்பத்தின் வெளியீட்டு விழாவில் ஸ்ரீதர் நடராஜன்.

இசை ஆல்பத்தை வெளியிட்ட கே.பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி, “இந்த அரங்கத்தில் ஒலித்த இந்த ஆல்பத்தின் பாதி பாதி பாட்டுகளை நான் கேட்டதில், தாய், தந்தை, குழந்தைகள், உடன் பிறந்தவர்கள், நண்பர்கள்… இப்படிப் பலதரப்பட்ட உறவு நிலைகளில் இருப்பவர்களின் அன்பும் வெளிப்பட்டிருப்பதை உணர்கிறேன். ஆண், பெண் இடையிலான காதலை மட்டுமில்லாமல், ஒரு தந்தைக்கும் மகளுக்குமான அன்பை விவரிக்கும் நுட்பமான வரிகளைப் பாட்டில் வெளிப்படுத்தியிருக்கும் இது ஒரு முக்கியமான இசை ஆல்பம்” என்றார்.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் போட்டியில் வென்றவர்களான கௌசிக் ஸ்ரீதர், பிரியங்கா, செண்பகராஜ் ஆகியோரும் இந்த ஆல்பத்தில் பாடியிருக்கின்றனர். ராஜலஷ்மி, சுர்முகி ஆகிய பின்னணிப் பாடகிகளும் பாடியிருக்கின்றனர். இவர்களைத் தவிர, ஸ்ரீதர் நடராஜனின் குடும்பத்திலிருந்து லலிதா ரவி மற்றும் வெங்கடேசன் ஆகியோரும் தலா ஒரு பாடல் பாடியிருக்கின்றனர்.

ஆல்பத்தில் பிரியங்கா பாடியிருக்கும் `ஒரு முறை’ எனத் தொடங்கும் பாடல், பலமுறை நம்மைக் கேட்கத் தூண்டுகிறது. கௌசிக்கின் ‘நித்தம் நித்தம்’ கம்பீர ரகம். சுர்முகியின் ‘கனவா’ பாடலைக் கேட்கும் போது, மேக அடுக்குகளில் சஞ்சரிக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது.“இந்தப் பாடலின் டியூனைக் கேட்கும் போது எனக்கு அது புதிய அனுபவமாக இருந்தது. பாடலின் த்வனி மேலும் கீழுமாகப் பயணிக்கும் வகையில் இருந்தது. ஒரே பாடலுக்கும் மூன்று பாடல்களைப் பாடிய அனுபவம் எனக்குக் கிடைத்தது. ஏனென்றால் இதில் பல்லவியும் இரண்டு சரணங்களும் வெவ்வேறு மெட்டில் அமைந்திருந்தன” என்றார் பின்னணிப் பாடகி சுர்முகி.

80-களின் இசை பாதிப்பில் உருவான ஆல்பமாக இருந்தாலும் இதில் தாள அமைப்புகளில் நிறைய வித்தியாசம் செய்திருக்கிறீர்கள் அல்லவா என்று கேட்டோம் ஸ்ரீதர் நடராஜனிடம். “உண்மைதான். தபலா, டிரிபிள் காங்கோ காம்பினேஷனில் ஒரு ரிதம் பேட்டர்னை உருவாக்கியிருப்பேன். லைவ் டிரம்பட், டிரம்ஸின் இனிமையை இந்த ஆல்பத்தில் நீங்கள் கேட்க முடியும். தபலாவின் பிரயோகத்தை வித்தியாசமான முறையில் இந்த ஆல்பத்தில் கையாண்டிருக்கிறோம். இந்த மாதிரியான முயற்சிகள் திரையிசையில் பொதுவாகச் செய்யப்படுவதில்லை” என்றார் ஸ்ரீதர் நடராஜன்.

அன்பால் ‘இசை’ந்திருப்போம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in