

கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல வனவிலங்கு புகைப்படக்காரர்களான கிருபாகர் - சேனானி இருவரையும் அரசு உயர் அதிகாரிகள் என நினைத்து வீரப்பன் கடத்திவிடுகிறார். தன்னார்வ வனவிலங்கு புகைப்படக்காரர்கள் எனத் தெரிய வந்ததும் வீரப்பனுக்கும் இருவருக்கும் நட்பு உருவாகிறது. காட்டுப் பறவைகள் குறித்து நிறைய விஷயங்களை இருவரிடமும் ஒரு குழந்தையின் ஆர்வத்துடன் கேட்டு வீரப்பன் தெரிந்துகொள்கிறார். வீரப்பனுடன் இருந்த தங்கள் அனுபவத்தை ‘Birds, Beasts and Bandits: 14 Days with Veerappan’ என்னும் பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளனர். இது தமிழில் ‘வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள்’ என்னும் பெயரில் வெளிவந்துள்ளது. தமிழகம், கர்நாடகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் கொடூரமான கடத்தல்காரனாக அறியப்பட்ட வீரப்பனின் இன்னொரு முகம் இந்தப் புத்தகத்திம் தெரிய வருகிறது. அந்தப் புத்தகத்தில் இருந்து ஒரு பகுதி...
ஒருநாள் தங்கள் கோரிக்கைகளை அரசிடம் வலியுறுத்துவதற்காகக் காட்டிற்குள் வரும் வெளிநாட்டுப் பயணிகளைத் திட்டம் போடுகிறார்கள் வீரப்பன் கூட்டாளிகள். அதுபோல ஒரு வேனும் கடத்தப்படுகிறது. ஆனால் வேனுக்குள் இருந்ததோ இந்தியர்கள். வேனுக்குள் இருந்தவர்களை கிருபாகர் - சேனானியை நேர்காணல் செய்யச் சொல்கிறார் வீரப்பன்...சந்திப்பு தொடங்கியது.
“எங்கேயிருந்து வரீங்க?”
“டில்லி.”
எங்கோ பாதாளத்திலிருந்து ஒலிப்பது போல இருந்தது அவர் குரல். அதற்குள் வீரப்பன் அவசரமாக என்ன சொல்றான்?” என்று காதைக் கூர்மையாக்கி, இன்னொரு முறை கேள்வியைக் கேட்கும்படி சொன்னார்.
“ப்ளீஸ் ரிபீட். நீங்க எந்த ஊரைச் சேந்தவங்க?”
“பஞ்சாப்.”
அட, சற்று முன்புதானே டெல்லி என்று சொன்னார் என்றெல்லாம் யோசிப்பதற்குள் அவர் அச்சத்தின் உச்சத்தில், இந்தியில் விவரங்களைச் சொல்லத் தொடங்கினார். அதற்குள் வீரப்பன், “இவன் என்ன ஒரு தரம் தில்லின்னு சொல்றான், இன்னொரு தரம் பஞ்சாப்னு சொல்றான்?” என்று அவனுடைய பதிலில் திருப்திப்படாதவனாக முணுமுணுத்தான்.
இந்த ஆளுக்கு முதலில் மூளை செயலிழந்தது, பிறகு கால், அதற்கப்புறம் நாக்கு என ஒவ்வொன்றும் செயலிழந்தன. இப்போது இந்தக் குழப்பத்தில் வயிற்றிலும் பிரச்சினை ஏற்பட்டு விட்டது. அவருடைய உடலிலிருந்து வெளிப்பட்ட “டர் . . .” என்னும் நீண்ட சத்தம் அவருடைய பயத்தை அங்கிருந்த அனைவரும் அறியும்படி செய்துவிட்டது. வீரப்பன் வேறொரு பக்கமாகத் தலையைத் திருப்பிக்கொண்டு, அப்படியே மீசையைத் திருகியவண்ணம் பொங்கிவரும் சிரிப்பை விழுங்கியபடி, “சரிசரி, அவனுக்கு எவ்வளவு சம்பளம்னு கேளு” என்றான்.
முதல் பார்வையிலேயே அவர் அரசுத்துறையைச் சேர்ந்த பெரிய அதிகாரியாக இருக்கலாம் என்று தோன்றியது. இதைப் புரிந்துகொண்டதும் சற்றே வேகமாக ஆங்கிலம் மற்றும் இந்தியில் கேள்விகளைக் கேட்பதுபோலக் கேட்டுவிட்டு, பிறகு வீரப்பன் பக்கமாகத் திரும்பி “இவர் அரசாங்க அதிகாரிபோலத் தெரியவில்லை. ஏதோ ஒரு பொதுநிறுவனத்தில் வேலை செய்பவராக இருக்கலாம்” என்று என்னென்னமோ சொல்லி முடித்தேன்.
சிறிது யோசித்த வீரப்பன், “சரி, அந்தப் பக்கமா உக்காரச் சொல்லு” என்று எங்களிடமிருந்து இருபதடி தொலைவில் ஒரு இடத்தைக் காட்டினான். அந்த ஆள் உயிரே இல்லாதவரைப் போலக் கால்களை இழுத்து இழுத்து சொன்ன இடத்தில் உட்கார்ந்தார்.
இவ்வாறாகச் சந்திப்பு தொடர்ந்து நிகழ்ந்தது. யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை. ஒரே விதமான கேள்விகளைக் கேட்டுக் கேட்டு எனக்கும் அலுப்பாக இருந்தது. அதற்குப் பிறகு வந்தவர்களில் ஒருவரிடம் கேள்விகளில் சற்றே மாற்றம் செய்தேன்.
“வாட் ஈஸ் யுவர் நேம்?”
“துபை.”
“வேர் ஆர் யு வொர்க்கிங்?”
“மலையாளம்.”
“அண்ணே, இவனுக்கு மலையாளம் மட்டும்தான் தெரியும்போல. நீங்களே கேள்வி கேளுங்க” என்று சொன்னேன். பொருத்தமே இல்லாத அச்சூழலும் பதில்களும் வீரப்பனிடம் என்ன மாதிரியான உணர்வை ஏற்படுத்தியதோ, தெரியவில்லை.
“சரி . . . அந்தப் பக்கமா உக்கார சொல்லு” என்று ஏற்கனவே மனம் சோர்ந்து உட்கார்ந்திருந்த ஆட்கள் பக்கமாக அனுப்பி வைத்தான்.
வேனுக்குள் இருந்தவர்களில்
ஒருவர்கூடக் கடத்தப்படுவதற்குரிய தகுதியோடு இல்லாத விஷயம் வீரப்பன் கோபம் பெருகக் காரணமாக அமைந்துவிட்டது.
சிறிது நேரத்துக்குப் பிறகு, எங்களுக்கு எதிர்ப்புறத்தில் மௌனமாக உட்கார்ந்திருந்த டாக்டர். சத்யவிரத மைத்தியின் பக்கமாகப் பார்த்தான் வீரப்பன். அவனிடம் கேள்விகள் கேட்கும்படி என்னிடம் சொன்னான்.
(தமிழில்: பாவண்ணன், வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில். விலை ரூ. 175. தொடர்புக்கு: 96777 78863)